ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவிற்கு இதுகுறித்து பணிப்புரை விடுத்துள்ளார்.
எதிர்கால சந்ததியினரின் பார்வைக்காக நெதுன்கமுவே ஹஸ்திராஜாவின் உடலைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
தேசிய அருங்காட்சியக அதிகாரிகள் குழுவொன்று, ஹஸ்திராஜா இருந்த கம்பஹா வெலிவேரிய நெதுன்கமுவ பகுதிக்குச் சென்று, யானையின் உடலை தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
யார் இந்த நெதுன்கமுவே ஹஸ்தி ராஜா?
இந்தியாவின் மணிப்பூர் பகுதியில் 1953ம் ஆண்டு பிறந்த நெதுன்கமுவே ஹஸ்தி ராஜா, தனது 69வது வயதில் இறந்துள்ளது.
கம்பஹா நெதுன்கமுவே பகுதியிலுள்ள தர்மவிஸய ஆயுர்வேத வைத்தியர் இந்த யானையை இந்தியாவிலிருந்து தனது பொறுப்பிற்கு எடுத்துள்ளார்.
அந்த காலக்கட்டத்தில் 75,000 ரூபாவிற்கு இந்த யானையை வாங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு வாங்கப்பட்ட யானை, இலங்கையின் பௌத்த விவகார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 10 அடியை கொண்ட இந்த யானை, அனைத்து இனத்தவர்களின் கௌரவத்தை தனதாக்கிக் கொண்டது.
இலங்கையின் பௌத்த விஹாரைகளில் முன்னணி விஹாரையாக திகழும், கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வருடாந்தம் நடைபெறும் உற்சவத்தில், புத்த பெருமானின் புனித சின்னமாக கருதப்படும் 'கரடுவ" வை இந்த யானையே தனது தோல் மீது சுமந்து செல்லும்.
கண்டி புனித ஸ்ரீ தலதா மாளிகையின் புனித சின்னத்தை ஏந்தி செல்வதனால், பௌத்தர்கள் மாத்திரமன்றி, இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களின் புனித யானையாக இந்த யானை கருதப்பட்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற உற்சவத்தின் போது, புனித சின்னத்தை ஏந்தி சென்ற நெதுன்கமுவே ஹஸ்தி ராஜா, தனது பயணத்தின் போது விரிக்கப்படும் வெள்ளை நிற கம்பலம் ஒதுங்கியிருந்ததை பார்த்து அதை சரி செய்து, முன்னோக்கி நடந்தது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
2005ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையான காலம் வரை நெதுன்கமுவே ஹஸ்தி ராஜாவே, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் புனித சின்னத்தை, உற்சவத்தில் ஏந்தி சென்றுள்ளது.
தந்தங்கள் இரண்டும் ஒருமித்த வகையில் அமைந்துள்ளமை இந்த யானையின் விசேட அம்சமாகும்.
மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்திலிருந்து மத்திய மாகாணத்தில் இருக்கும் கண்டி நகருக்கு சுமார் 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
கண்டி உற்சவ காலப் பகுதியில் இந்த 90 கிலோமீட்டரை விடவும் அதிக தூரத்தை, நெதுன்கமுவே ஹஸ்தி ராஜா நடந்தே வருவது விசேடமான விடயமாகும்.
இந்த யானை கம்பஹாவிலிருந்து கண்டி நோக்கி நடந்தே வருவதுடன், குறித்த யானைக்கு இலங்கை அரசாங்கத்தினால் அதிவுயர் பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கமாகும்.
குறிப்பாக நெதுன்கமுவே ஹஸ்தி ராஜாவிற்கு, விசேட அதிரடி பாதுகாப்பு மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்படும்.
ஒரு சந்தர்ப்பத்தில் கூட இந்த யானை வாகனத்தில் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
யானையின் உரிமையாளரான நெதுன்கமுவே தர்மவிஜய யானையின் இறப்பு குறித்து பேசுகையில்,
''மிருகங்கள் மிகவும் கஷ்டப்பட்ட உயிரிழப்பதே வழக்கமானது, எனினும், திடீர் மரணம் என்பது மிகவும் குறைவாகவே ஏற்படும். இடி மின்னல் தாக்கம், வாகன விபத்துக்கள் போன்றவற்றால் மிகவும் கஷ்டப்பட்டே மிருகங்கள் இறக்கும். ஆனால், இந்த யானை ஒரு நாள் மட்டுமே உணவு உட்கொள்ளாது, இன்று காலை நாம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே நித்திரை கொண்டது. அவ்வாறே அதன் உயிர் பிரிந்தது. எந்தவித கஷ்டத்தையும் எதிர்நோக்காது இந்த யானை இறந்தது. இவ்வாறு ஒரு உயிர் பிரியுமானால், அது அஷ்டவசமானது. கலாசார ரீதியில் இது வருத்தம்தர கூடிய செய்தியானாலும், ஒரு விலங்காக அந்த யானை வெற்றிப் பெற்றுள்ளது" என தெரிவித்தார்.
மேலும் நெதுன்கமுவே ஹஸ்தி ராஜாவின் யானை பாகன் அதன் மீது வைத்திருந்த அன்பு குறித்தும் அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
''இந்த யானையின் பாகனான கொடித்துவக்கு 1972ம் ஆண்டுகாலம் முதல் யானையை கவனித்து வருகிறார். எமக்கும், யானைக்கும் எந்தவித கெடுதியும் ஏற்படாத வகையில் இதுவரை அவர் பார்த்து வந்தார். அவர் யானை மீது மிகுந்த அன்புக் கொண்டவர். அது என்னை தவிர வேறு யாருக்கும் தெரியாது. 15 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற உற்சவத்திற்கு இந்த யானை சென்றபோது பாகனின் மனைவி உயிரிழந்த செய்தியை அறிந்தவுடன், நான் யானையிடம் சென்றேன். யானை களுத்துறை விஹாரையில் இருந்தது. உங்களின் மனைவி உயிரிழந்து விட்டார் என யானையுடன் இருந்த பாகனிடம் கூறினேன். இந்த யானையை வீதியில் விட்டு விட்டு என்னால் செல்ல முடியாது என்றார் அவர்.
யானையை நெதுன்கமுவ வீட்டில் கட்டி விட்டே என்னால் செல்ல முடியும் என தெரிவித்தார். மீண்டும் வீட்டிற்கு வருகைத் தர மூன்று நாட்கள் தேவைப்படும். இது சரி வராது என நான் கூறி, யானையை அந்த இடத்திலேயே கட்டி விட்டு, என்னுடன் அவரை அழைத்துக் கொண்டு, அவரது மனைவியின் மரண வீட்டிற்கு நான் சென்றேன். மரண வீட்டில் சடலத்தை வணங்கி, ஐந்து நிமிடங்களின் பின்னர் மீண்டும் செல்வோம் என கூறினார். மீண்டும் யானையிடம் வந்து யானையின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னரே, அவரது மனைவியின் இறுதிக் கிரியைகளில் அவர் கலந்துக்கொண்டார்," என யானையின் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில், பௌத்த அனுஷ்டானங்களுக்கு அமைய இறுதி கிரியைகளை பௌத்த மத குருமார்கள் நடத்தியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, இந்த யானை தேசிய பொக்கிஷமாக பாதுகாக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.