யுக்ரேனின் மேரியோபோல் நகரம்: நீர், உணவு இல்லை; வீதிகளில் சடலம் - சிக்கி தவிக்கும் மக்கள்

திங்கள், 7 மார்ச் 2022 (14:02 IST)
யுக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் யுக்ரேனின் மரியுபோல் நகரில் ரஷ்ய படைகள் தொடந்து குண்டு தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு சிக்கியுள்ள 2 லட்சம் பேரை மீட்பதற்கு தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இதனால் 50 பேருந்துகளை நகர நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த பேருந்தில் ஏறுவதற்கு மக்கள் நகரின் மையத்திற்கு வந்தனர். ஆனால் இரண்டு மணிநேரங்களுக்கும் குறைவான காலக்கட்டத்தில் ரஷ்ய ராணுவம் குடியிருப்புப் பகுதிகளில் மீண்டும் ஷெல் குண்டு தாக்குதல்களை நடத்த தொடங்கியது. இதன்மூலம் வெளியேற தயாராக இருந்த பொதுமக்கள் வெளியேற முடியாமல் சிக்கி தவித்தனர்.

நகரில் ஐந்தாவது நாளாக குடிநீர், மின்சாரம், கழிவறை வசதி ஆகியவை இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் உணவு மற்றும் நீரும் விரைவில் தீர்ந்து போகும் நிலைமை உள்ளது.

எனவே நம்பிக்கையுடன் தொடங்கி விரக்தியுடன் முடிந்த இந்த நாள் குறித்து பிபிசியிடம் பேசினார் 27 வயதான தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டாளர் மாக்சிம்.

ஆறாவது மாடி குடியிருப்பில் தனது தாத்தா பாட்டியை கவனித்துக் கொண்டு வருகிறார் இவர்.

பிபிசியிடம் மாக்சிம் பேசியது:

என்னால் முடிந்தவரை வேகமாக, எனக்கும் என் தாத்தா பாட்டிக்கும் தேவையான உடைகள், உணவு மற்றும் எங்களிடம் மிச்சமிருந்த தண்ணீருடன் நான்கு பைகளை என் காரில் அடைத்தேன்.

எனது தாத்தா பாட்டிக்கு 80 வயதுக்கு மேல் ஆகிறது. அவர்களால் எதையும் தூக்கிக் கொண்டு வரமுடியாது. எனது குடியிருப்பில் லிஃப்ட்டும் வேலை செய்யவில்லை. எனவே அனைத்தையும் தூக்கிக் கொண்டு நான் பல முறை படிகளில் நடந்தேன்.

நான் காரை ஓட்டுவதற்குத் தயாரான போது, மீண்டும் ஷெல் தாக்குதல் தொடங்கியது. எங்களுக்கு அருகில் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. அனைத்தையும் என்னால் முடிந்தவரை வேகமாக மாடிக்குக் கொண்டு சென்றேன். அங்கிருந்து நகரத்திலிருந்து புகை எழுவதைப் பார்த்தேன். மக்கள் செல்ல வேண்டிய ஸாப்போரீஷியா நெடுஞ்சாலையில் இருந்து அந்தப் புகை எழும்பிக் கொண்டிருந்தது.

போர் நிறுத்தம் இருப்பதாகக் கேள்விப்பட்டதால், பலர் ஷெல் தாக்குதலில் இருந்து தப்பித்து வெளியேறுவதற்காக நகர மையத்திற்குள் வந்தனர். அவர்களை வெளியே அழைத்துச் செல்ல பேருந்துகளும் வந்தன. ஆனால், மீண்டும் ஷெல் தாக்குதல் தொடங்கியபோது, அவர்களால் தங்களுடைய தங்குமிடங்களுக்குத் திரும்ப முடியவில்லை.
எனவே நாங்கள் பலரை எங்களின் குடியிருப்பிற்குள் அழைத்துச் சென்றோம். அவர்கள் நகரின் இடதுபுறத்தில் இருந்து வந்தவர்கள். அது அழிக்கப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். அனைத்து வீடுகளும் எரிகின்றன. யாராலும் தீயை அணைக்க முடியவில்லை. தெருக்களில் ஏராளமான சடலங்கள் கிடக்கின்றன.


குடியிருப்புக்குள் வந்தவர்களில் மூன்று பேரை மட்டும் எனக்கு தெரியும். அங்கு வந்தவர்களில் ஒருவருக்கு 70 வயதுக்கு மேல் இருக்கும். ஒரு குழந்தையும் இருந்தது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் தரையில் தூங்க நாங்கள் வழி செய்தோம். கையிலிருந்த துணிகளை விரித்து அவர்கள் தூங்குவதற்கு ஏற்பாடு செய்தோம்.

எங்களிடம் பாட்டில் தண்ணீர் தீர்ந்துவிட்டது. குழாய்கள் அணைக்கப்படுவதற்கு முன்பு நான் குளியல் தொட்டியில் நிரப்பிய தண்ணீர் தான் மிஞ்சியுள்ளது. எரிவாயு மட்டும் இன்னும் வேலை செய்கிறது. நாங்கள் அதில் குளிக்கும் தண்ணீரை காய்ச்சி குடிக்கலாம்.

இன்று காவல்துறை கடைகளைத் திறந்து, இங்குள்ளவர்களுக்கு உணவு மற்றும் பானம் இல்லாததால் எல்லாவற்றையும் எடுத்துச் செல்லுமாறு மக்களிடம் சொன்னார்கள். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் கொஞ்சம் மிட்டாய், மீன் மற்றும் சில பானங்களை எடுத்துக் கொண்டனர்.

போர் நிறுத்தம் பொய்யானது. துப்பாக்கிச் சூட்டை நிறுத்த ஒரு தரப்பு ஒருபோதும் திட்டமிடவில்லை. அவர்கள் மற்றொரு போர் நிறுத்தம் இருப்பதாகச் சொன்னால் நாங்கள் வெளியேற முயல வேண்டும். ஆனால், அது உண்மையாக இருக்குமா என்று எங்களுக்குத் தெரியாது. ஒருவேளை நாம் மறைந்திருப்பதே நல்லதாக இருக்கலாம்.

இன்றைய நாள் நடந்த நிகழ்வுக்கு பிறகு எனக்கு நம்பிக்கை போய்விட்டது. நாங்கள் பிழைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை நான் யோசிக்க வேண்டும். நாங்கள் சோர்ந்துவிட்டோம். எங்களுக்கு எந்த வழியும் தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்