பாலுறவு கொள்ளாமல் இனப்பெருக்கம் செய்த மலைப்பாம்பு

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (09:23 IST)
அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் விலங்குகள் காட்சிச் சாலையில் இருக்கும் மலைப்பாம்பு ஒன்று ஆண் மலைப்பாம்பின் துணை இல்லாமலேயே ஏழு முட்டைகளை இட்டுள்ளது.

தற்போது முட்டை இட்டுள்ள இந்த பெண் மலைப்பாம்பு கடந்த 15 ஆண்டுகளாக எந்த ஓர் ஆண் மலைப்பாம்புடனும் தொடர்பில் இல்லை என்று விலங்குகள் காட்சி சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாலுறவு கொள்ளாமலேயே சில ஊர்வன உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யும் தன்மை உடையவை என்றாலும்கூட தற்போது முட்டையிட்டு உள்ள மலைப்பாம்பின் வயதும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தப் பெண் 'ராயல் பைத்தான்' வகை மலைப்பாம்புக்கு வயது 62 என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

1961ஆம் ஆண்டு தனியார் ஒருவரால் இந்தப் பாம்பு பூங்காவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட போது அதற்கு மூன்று வயதாகி இருந்ததாக மதிப்பிடப்பட்டிருந்தது என்று அந்தப் பூங்காவின் அதிகாரிகளில் ஒருவரான மார்க் வேனர் தெரிவிக்கிறார் .

இந்த மலைப் பாம்பின் ஏழு முட்டைகளில் மூன்று முட்டைகள் நல்ல நிலையில் உள்ளன. அவை தற்போது இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளன.

அந்த முட்டைகளில் இருந்து ஒரு மாத காலத்துக்குள் மலைப்பாம்பு குஞ்சுகள் வெளியே வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

'ராயல் பைத்தான்' அல்லது 'பால் பைத்தான்' என்று அழைக்கப்படும் இந்த வகை மலைப்பாம்புகள் மத்திய மற்றும் மேற்கு ஆஃப்பிரிக்காவைப் பூர்விகமாகக் கொண்டவை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்