எம்எல்ஏவா, எம்பியா? குழப்பத்தில் 2 அதிமுக எம்.பி.க்கள் - புதிய சிக்கல்

Webdunia
திங்கள், 3 மே 2021 (13:48 IST)
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்களான கே.பி. முனுசாமியும் ஆர். வைத்திலிங்கமும் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து எம்எல்ஏ பதவியை ஏற்பதாக இருந்தால் அவர்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தாக வேண்டும்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானால் அந்த இடங்களுக்கு கட்சியின் சார்பில் வேறு யாரையாவது தேர்வு செய்ய வேண்டுமானால் அது எம்எல்ஏ பலத்தின் அடிப்படையிலேயே சாத்தியமாகும்.

தற்போது அதிமுகவுக்கு 65 இடங்களுக்கும் அதிகமான இடங்கள் உள்ளபோதும் ஒரு எம்பியை அக்கட்சியினரால் தேர்வு செய்ய முடியும். மற்றொரு எம்.பியை தேர்வு செய்ய போதிய பலம் அதிமுக அணிக்கு இருக்காது என்ற நிலையே நீடிக்கிறது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கே.பி. முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட்டார். அங்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் மு. முருகனை விட 3,054 வாக்குகள் வித்தியாசத்தில் முனுசாமி வென்றுள்ளார். அவர் பெற்ற வாக்குகள் 93,855.

இதேபோல ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட வைத்திலிங்கம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம். ராமச்சந்திரனை விட 28,835 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். அவர் பெற்ற வாக்குகள் 89,516 வாக்குகள்.

மாநிலங்களவையில் தற்போது எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், என். சந்திரசேகரன், என். கோகுலகிருஷ்ணன், கே.பி. முனுசாமி, ஏ. நவநீதகிருஷ்ணன், எம். தம்பிதுரை, ஆர். வைத்திலிங்கம், ஏ. விஜயகுமார் உள்பட 8 உறுப்பினர்கள் உள்ளனர். அக்கட்சியின் மற்றொரு உறுப்பினர் முகம்மது ஜான் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் உயிரிழந்த பிறகு அந்த இடம் காலியானதாக உள்ளது. எனினும், அந்த இடம் காலியாகி விட்டதாக இன்னும் மாநிலங்களவை செயலகம் அறிவிக்கை வெளியிடவில்லை.

இதில் அதிமுக தரப்பில் எஸ்.ஆர்.பி, நவநீதகிருஷ்ணன், ஆர். வைத்திலிங்கம், ஏ. விஜயகுமார் மற்றும் திமுக தரப்பில் ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ்.இளங்கேோவன் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. முனுசாமியின் பதவிக்காலம் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்த நிலையில், எம்எல்ஏ பதவியை முனுசாமியும் வைத்திலிங்கமும் ஏற்க முடிவெடுத்தால் அவர்கள் வகித்து வரும் எம்.பி பதவிக்கான இடங்கள் காலியாகும். ஏற்கெனவே முகம்மது ஜானின் எம்.பி பதவி இடமும் காலியாக இருப்பதால் இந்த மூன்று தொகுதிகளுக்கும் உறுப்பினரை மாநிலங்களவை செயலகம் தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் மூலம் நடவடிக்கை எடுக்கலாம். இந்த மூன்று உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஒரே நேரத்திலோ அல்லது முகம்மது ஜானுக்கு தனியாகவும் வைத்திலிங்கம், முனுசாமி இடங்களுக்கு தனியாகவும் நடக்கலாம்.

ஒரு எம்பி பதவிக்கு சராசரியாக 36 முதல் 38 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும். அதன்படி ஒரு எம்.பி பதவி அதிமுக அணிக்கு உறுதியாக கிடைக்கும். அதுவே மூன்று எம்.பி பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் அப்போது எம்எல்ஏக்கள் பலம் அடிப்படையில் திமுக அணிக்கே இரண்டு உறுப்பினர்களுக்கான இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஒருவேளை, முனுசாமிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைய மேலும் ஐந்து ஆண்டுகள் இருப்பதால், வைத்திலிங்கம் மட்டும் தற்போது எம்பி பதவியை ராஜிநாமா செய்து விட்டு எம்எல்ஏ பதவியை ஏற்றால், முகம்மது ஜான் இடத்துக்கும் வைத்திலிங்கம் இடத்துக்கும் சேர்த்து எம்பி பதவிக்கான தேர்தல் நடக்கலாம். அதிமுக அணி 75 இடங்களை பெற்றிருந்தால் அந்த அணிக்கு இந்த இரண்டு இடங்களும் கிடைக்கலாம்.

இத்தகைய சூழலில் எதை விட்டுக் கொடுத்தாலும் அது அதிமுகவுக்கு புதிய நெருக்கடி அல்லது சிக்கலான கட்டமாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்