சமூக வலைதளங்களில் வேவு பார்த்த நிறுவனங்களைத் தடை செய்த மெடா - 1,500 பக்கங்கள் முடக்கம்

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (14:02 IST)
ஏழு சைபர் கண்காணிப்பு நிறுவனங்களை, தங்களின் (மெடாவின்) தளங்களில் உள்ள பயனர்களை இலக்கு வைப்பதற்காக தடை செய்துள்ளதாக ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெடா கூறியுள்ளது.

சுமார் 50,000 பயனர்களுக்கு "தீங்கிழைக்கும் நடவடிக்கைகள்" பற்றிய எச்சரிக்கையைப் பெறுவர் என மெடாவின் புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போலி கணக்குகளை உருவாக்குவது, இலக்கு வைக்கப்பட்டுள்ளவர்களுடன் நட்பு கொள்வது, தகவல்களை சேகரிக்க ஹேக்கிங் முறைகளைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை கண்காணிப்பு நிறுவனங்கள் மேற்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளது மெடா.

பத்திரிகையாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட தனிநபர்களை இலக்குவைத்து இந்த நிறுவனங்கள் தாக்குதல் நடத்தியதாக மெடா குற்றம் சாட்டியுள்ளது.
ஒரு மாத கால விசாரணையைத் தொடர்ந்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகிய தளங்களில் மெடாவால் சுமார் 1,500 பக்கங்கள் மற்றும் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் சார்பாக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளவர்களை குறிவைத்ததாக மெட்டா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பெகாசஸ் வேவு செயலி ஆயிரக்கணக்கானோரை இலக்கு வைத்ததாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, வியாழக்கிழமை வெளியான மெடா நிறுவனத்தின் அறிக்கை, கண்காணிப்புத் துறையில் விசாரணையை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் தளத்தின் வழியே என்எஸ்ஓ குழுவின் உளவு பெகாசஸ் மென்பொருள் பரவுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் என்எஸ்ஓ குழுவினருக்கு எதிராக மெடா ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. தனிநபர்களை இலக்கு வைக்க, வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு உளவு மென்பொருளை வழங்குவதாக குற்றம் சாட்டி, என் எஸ் ஓ குழுமம் உட்பட சில நிறுவனங்களை அமெரிக்க அரசாங்கம் கடந்த மாதம் கருப்புப்பட்டியலில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

"கண்காணிப்புத் துறை என்பது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை விட மிகப் பெரியது, மேலும் இது வாடகைக்கு எடுத்துக் கொள்ளப்படும் மால்வேரை விட பெரியது" என மெடாவின் பாதுகாப்புக் கொள்கை தலைவர் நதானியேல் க்ளீச்சர் புதிய அறிக்கையைக் குறித்துக் கூறினார்.

சாதாரண பொதுமக்கள், அரசியல்வாதிகள், மனித உரிமைகள் வழக்குரைஞர்கள் போன்ற உயர்மட்ட பிரமுகர்கள் உட்பட பாகுபாடே இல்லாமல் பலதரப்பினர் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

மெடாவால் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களில் இஸ்ரேலிய நிறுவனமான பிளாக் கியூப் என்கிற நிறுவனமும் ஒன்று. ஹார்வி வெய்ன்ஸ்டீன் என்கிற அமெரிக்காவின் பிரபல சினிமா தயாரிப்பாளர், தனக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டிய பெண்களை உளவு பார்க்க, பிளாக் கியூப் நிறுவனத்தை பணிக்கு அமர்த்திய பிறகுதான் அந்நிறுவனம் பிரபலமடைந்தது.

பிளாக் கியூப் நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு அளித்த அறிக்கையில் "ஃபிஷிங் அல்லது ஹேக்கிங்" செயல்களை மேற்கொள்ளவில்லை என்று மறுத்துள்ளது. மேலும் அதன் முகவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் "உள்ளூர் சட்டங்களுக்கு முழுமையாக இணங்கி" செயல்படுவதாகக் கூறியுள்ளது.

இந்த உளவுச் செயல்பாட்டால் பாதிக்கப்பட்ட பயனர்கள், குறிப்பிட்டு எந்த விதத்தில் பாதிக்கப்பட்டார்கள் என்கிற விவரங்கள் வெளியிடப்படாமல், தானியங்கு எச்சரிக்கை சமிக்ஞைகளை மட்டும் பெறுவர் என மெடா அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்