விசாகப்பட்டினத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதமடித்துளார்.
இவருடன் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மாவும் ஆட்டமிழக்கும் முன் 176 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 450 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மயங்க் அகர்வாலுக்கு இது வெறும் எட்டாவது இன்னிங்க்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுதான் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அவரைப் பற்றிய ஐந்து சுவாரசிய தகவல்கள் இதோ.
2017இல் நடந்த ரஞ்சி கோப்பை தொடரில், கர்நாடக அணிக்காக விளையாடிய மகாராஷ்டிரா அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 304 ரன்கள் குவித்தார்.
மயங்க் அகர்வால் தாம் விளையாடிய முதல் டெஸ்ட் இன்னிங்சிலேயே 76 ரன்கள் எடுத்தார். முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியாவில் விளையாடும் இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும்.
இப்போது நடந்துவரும் போட்டியுடன் சேர்த்து இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள மாயங்க் அகர்வால் இதுவரை மூன்று அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் எடுத்துள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த இந்த 28 வயது கிரிக்கெட் வீரர் ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜயண்ட்ஸ் ஆகிய அணிகளுக்காக கடந்த ஆண்டுகளில் விளையாடியுள்ளார்.
2018 முதல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அங்கமாக உள்ள மாயங்க் அகர்வால், இதுவரை 77 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி தாம் விளையாடிய அனைத்து அணிகளுக்கும் சேர்த்து 1266 ரன்கள் எடுத்துள்ளார்.
தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் மற்றும் செதேஷ்வர் புஜாரா மற்றும் விராட் கோலி ஆகிய இருவர் மட்டுமே இரட்டை சத்தம் அடித்துள்ளனர். இதில் தற்போது மயங்க் அகர்வால் இணைந்துள்ளார்.