மரினா ஒவ்சியன்னிகோவா: "நான் அன்று தப்பிக்கவில்லை என்றால் இன்று உயிரோடு இருந்திருக்க மாட்டேன்"

வியாழன், 16 பிப்ரவரி 2023 (16:28 IST)
2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓர் இரவில் யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மரினா ஒவ்சியன்னிகோவா மீது விசாரணை நடத்தவிருந்த நிலையில் அவர் தனது மகளுடன் தப்பிச் சென்றார்.

கடந்த வாரம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மரினா, எனது வழக்கறிஞர், "தப்பி ஓடி விடு. அவர்கள் உன்னை சிறையில் அடைத்துவிடுவார்கள் என்றார்" என தெரிவித்தார்.

அதன்பிறகு மரினா ரஷ்யாவிலிருந்து தப்பித்துவிட்டார். தப்பித்துச் செல்வது என்பது எளிதான காரியமாக இருக்கவில்லை. ஏழு வண்டிகளில் சென்று, பின்பு எல்லையை வெறும் கால்களில் நடந்து சென்றடைந்தார்.

"நாங்கள் கடைசியாக சென்ற வண்டி மண்ணில் சிக்கிக் கொண்டது. மொபைல் ஃபோனில் சிக்னலும் இல்லை. நட்சத்திரங்களை கொண்டு வழியைக் கண்டறிந்தோம். அது மன அழுத்தம் நிறைந்த ஒரு தருணம்" என்றார் மரினா.

ரிப்போர்டர்ஸ் சான்ஸ் பார்டர்ஸ் (எல்லை கடந்த செய்தியாளர்கள்) அமைப்பு மரினா ரஷ்யாவிலிருந்து தப்புவதற்கு உதவியது.

அதன் இயக்குநர் கிறிஸ்டோஃபி டெலோயிர் மரினா தப்பித்தார் என்பதை விவரித்தார்.

"தொலைக்காட்சியில் அந்த பதாகையை மரினா காட்டிய அடுத்த நாள் அவருக்கு 'உங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா' 'நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?' என்று கேட்டு தகவல் அனுப்பினேன்," என்றார் டெலோயிர்.

டெலோயிர் மரினா தப்பிய தருணம் குறித்து மேலும் விளக்கினார்.

"அவர் அப்போது மாஸ்கோவில் வீட்டுக் காவலில் இருந்தார். அவரது பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் குடும்பத்தினர் புதினின் ஆதரவாளர்கள். அவர்கள் போலீசாருக்கு ஃபோன் செய்து மரினா வீட்டை விட்டு சென்றுவிட்டார் என்று சொல்லலாம். அதுமட்டுமல்லாமல் அவரின் கையில் மின்னணு காப்பு ஒன்றையும் அணிந்திருந்தார். எனவேதான் அவர் தப்பிச் செல்வது மிக கடினமாக இருந்தது." என்றார்.

கடந்த வருடம் ரஷ்யா குற்றவாளிகளை கண்காணிக்க இந்த மின்னணு காப்பு முறையை அறிமுகப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மரினா தற்போது பாரிஸில் வாழ்ந்து வருகிறார் அவருக்கு 44 வயது. ஆனாலும் அவர் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்திலேயே வாழ்வதாக தெரிவிக்கிறார்.

இருப்பினும் யுக்ரேனுக்காக புதின் தனது அதிபர் பதவியை பலி கொடுப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

"ரஷ்யாவின் சாதாரண மக்களே இந்த பொய் பிரசாரத்தை நம்புகின்றனர். ஆனால் ஆட்சிக்கு பின்னணியில் இருக்கும் பணம் படைத்தவர்களுக்கு என்ன நடக்கிறது என தெளிவாக புரிகிறது. யுக்ரேன் வெற்றி நெருங்கி வரும் தருணத்தில் பணம் படைத்தவர்கள் புதினை அதற்கு பதில் சொல்ல வைப்பார்கள்" என்றார் அவர்.

மரினா கடந்த மார்ச் மாதம் ரஷ்ய அரசு தொலைக்காட்சியான 'சேனல் ஒன்'-ல் நேரடி செய்தி ஒளிபரப்பின்போது 'போர் வேண்டாம். போரை நிறுத்துங்கள். தவறான பிரசாரத்தை நம்பாதீர்கள் அவர்கள் உங்களிடம் பொய் சொல்லுகின்றனர்.' என்ற பதாகையை ஏந்தி காட்டினார்.

அந்த சேனலில் அப்போது மரினா பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அந்த சம்பவம் நடந்த உடனேயே அவர் ரஷ்ய பாதுகாப்பு படையினரால் தனித்து வைக்கப்பட்டார். பணியில் அவருக்கு மேல் நிலையில் உள்ளவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

"நான் எனது அலுவலகத்தில் எனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறியபோது, எனது உடன் பணிபுரிந்தவர்களின் கண்களை பார்த்தேன்.. 'அவர்கள் நான் திரும்பி எப்போதும் வரப்போவதில்லை' என்ற உணர்வுடனே எனது கண்களை பார்த்தனர்" என்றார் மரினா.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மரினா ரஷ்யாவை விட்டு வெளியேறினார். ரஷ்யாவைவிட்டு ஜெர்மனிக்கு சென்ற அவர் கடந்த வருடத்தின் இறுதியில் தனது குழந்தைகளை தன்னுடன் அழைத்து போக வந்தார்.

கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவில் மரினாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. ரஷ்ய ராணுவத்தினர் மீது வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்பியதாக புதிய சட்டத்தின்கீழ் அவர் மீது மேலும் குற்றம்சாட்டப்பட்டது.

ரஷ்யாவில் 'யுக்ரேன் மீது படையெடுப்பு' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது புதிய சட்டத்தின்படி குற்றமாகும். ரஷ்யா இதனை யுக்ரேன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றே கூறி வருகிறது.

ஆனால் இப்போது ரஷ்யா மீதும் புதின் மீதும் குற்றம் சுமத்தும் மரினா ஒரு காலத்தில் ரஷ்யாவின் ஆதரவாளராக இருந்தார் என்பதால் யுக்ரேன் பத்திரிகையாளர்கள் மற்றும் ரஷ்ய எதிர்ப்பாளர்கள் பலர் அவர் மீது நம்பிக்கையற்று உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்