மக்களவை தேர்தல் 2019: நரேந்திரமோதியின் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதா?

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (20:17 IST)
2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது நாட்டில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதை முதன்மையான தேர்தல் வாக்குறுதியாக ஆளும் பாஜக முன்வைத்தது.
இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து மிகவும் குறைந்தளவு தரவுகளே மத்திய அரசால் வெளியிடப்பட்டிருந்தாலும், அதுகுறித்து சமீபத்தில் கசிந்த சில தகவல்கள் எதிர்வரும் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய கூறாக உருவெடுத்துள்ளது.
 
நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசு, தாங்கள் உறுதியளித்தவாறு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சியில் தோல்வியடைந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டுகிறார்.
 
வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டதா?
இந்தியாவின் மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 11ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் விடுக்கும் உறுதிமொழிகள், குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை பிபிசி ஆராய்ந்து வருகிறது.
 
மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (என்எஸ்எஸ்ஓ) அறிக்கையை ஊடகம் ஒன்று வெளியிட்ட பிறகு இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.
 
 
அதாவது, இந்தியாவில் கடந்த நான்கு தசாப்தகாலங்களில் இல்லாத அளவுக்கு நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.1 சதவீதத்தை அடைந்துவிட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மத்திய அரசுக்கு தேவையான பல்வேறு விவகாரங்கள் குறித்த மாதிரி தரவுகளை இந்த என்எஸ்எஸ்ஓ என்னும் அரசு நிறுவனம் திரட்டி ஆய்வு செய்து வருகிறது.
 
மேற்கண்ட தரவு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒன்று என்று தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் முன்னாள் செயல் தலைவர் மோஹனன் கூறிய நிலையில், மத்திய அரசு அது வரைவு அறிக்கை மட்டுமே என்று கூறியதுடன், நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தது. அதைத்தொடந்து அவருக்கும் மத்திய அரசுக்கும் நீடித்த தொடர் மோதல்போக்குக்கு பின்னர் மோஹனன் தனது பதவியிலிருந்து விலகினார்.
 
இதைத்தொடர்ந்து, நாட்டிலுள்ள 100க்கும் மேற்பட்ட பொருளாதார அறிஞர்களும், சமூகவியல் பேராசிரியர்களும், இந்தியாவின் புள்ளிவிவர அமைப்புகள் அரசியல் சார்ந்த விடயங்களுக்காக கட்டுப்படுத்தப்படுவதாக ஒருமித்த எதிர்ப்பு குரலை வெளிப்படுத்தினர்.
 
தேசிய மாதிரி புள்ளிவிவர அலுவலகத்தின், வேலைவாய்ப்பின்மை குறித்த கடைசி அறிக்கை கடந்த 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அறிக்கையில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை 2.7 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
 
சமீபத்தில் கசிந்த வேலைவாய்ப்பின்மை குறித்த அறிக்கையின் தரவுகளை நேரடியாக பார்ப்பதற்கு முன்னர், அதை 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகளுடன் ஒப்பிடுவது சரியான முடிவுகளை அளிக்குமா என்று கேள்விக்குறியே.
 
இருந்தபோதிலும், தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் செயல் தலைவர் பதவியிலிருந்து சமீபத்தில் விலகிய மோஹனன், 'தி இந்து' ஆங்கில பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில், "இரண்டு ஆய்வுகளும் ஒரே முறையின்படியே மேற்கொள்ளப்பட்டன. எனவே, அவற்றை ஒப்பிடுவதில் எவ்வித பிரச்சனையும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
 
 
2012 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சற்றே குறைந்த நிலையில் இருந்தது. அது கடந்த 2018ஆம் ஆண்டில் 3.5 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரித்ததாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த தரவும், தேசிய மாதிரி புள்ளிவிவர அலுவலகத்தின் தரவை மையமாக கொண்டே கணக்கிடப்பட்டுள்ளது.
 
மேற்கண்ட ஆய்வில் பயன்படுத்தப்பட்ட ஆய்வுமுறையை அடிப்படையாக கொண்டே, மத்திய தொழிலாளர் அமைப்பு 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை நான்கு கருத்து கணிப்புகளை மேற்கொண்டுள்ளது. 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கடைசி கட்ட ஆய்வில், வேலைவாய்ப்பின்மை விகிதம் ஐந்து சதவீதமாக இருந்த நிலையில், அது சமீபத்திய ஆண்டுகளில் மேலும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
அதுவும் குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில் பெண்களின் வேலைவாய்ப்பின்மை மிகவும் அதிகமாக உள்ளது. இந்த விகிதம் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பதாக அதுகுறித்து ஆய்வு நடத்தி வரும் அமைப்பொன்று கூறுகிறது.
 
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) என்ற அமைப்பு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.2 ஆக அதிகரித்துள்ளதாக கூறுகிறது.
 
தொழிலாளர் பங்கு விகிதம்
 
இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தையின் நிலவரம், தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தையும் பொருத்து கணக்கிடப்படுகிறது. அதாவது, தொழிலாளர் பங்கு விகிதம் என்பது, 15 வயதுக்கு மேற்பட்டோர் வேலைவாய்ப்பு தளத்தில் பங்கு பெறுவதை குறிப்பிடுகிறது.
 
"2016ஆம் ஆண்டு அதிகபட்சமாக சுமார் 47-48 சதவீதமாக இருந்த தொழிலாளர் பங்கு விகிதம், தற்போது 43 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் மூலம் ஐந்து சதவீத தொழிலாளர்கள், அந்த தளத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது" என்று அந்த மையத்தின் தலைவரான மகேஷ் வியாஸ் கூறுகிறார்.
 
குறைந்து வரும் வேலைவாய்ப்புகள், வேலைவாய்ப்பு சந்தையின் மீதான ஏமாற்றம் ஆகியவை அதற்கு காரணமாக இருக்கலாம்.
 
கடந்த 2016ஆம் ஆண்டு ஊழல் மற்றும் சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பணத்தை ஒழிப்பதாக கூறி, இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு என்ற நடவடிக்கையின் மூலம் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
 
நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, நாட்டில் குறைந்தது 3.5 மில்லியன் வேலை இழப்புகளை ஏற்படுத்தியதுடன், தேசிய தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் இளைஞர்களின் பங்களிப்பை குறைத்துவிட்டதாக செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
 
'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை குறைப்பதுடன், சீனா, தைவான் போன்ற சர்வதேச சந்தையை இந்தியாவில் உருவாக்கும் முயற்சிகள் பாஜக அரசால் முன்னெடுக்கப்பட்டாலும், உள்கட்டமைப்பில் உள்ள பிரச்சனைகள், தொழிலாளர் சட்டத்திலுள்ள சிக்கல்கள், அதிகாரத்துவம் போன்றவற்றின் காரணமாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
 
அதுமட்டுமின்றி, இந்தியாவில் அதிகரித்து வரும் இயந்திரமயமாக்கம் வேலைவாய்ப்பின்மைக்கான முக்கியமான பிரச்சனையாக கருதப்படுகிறது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
 
"ஒரு நிறுவனம் தனது உற்பத்தியை பெருக்க விரும்பினால், அவை தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதைவிட, இயந்திரங்களிலேயே முதலீடு செய்கின்றன" என்று பொருளாதார நிபுணரான விவேக் கவுல் கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்