சென்னையில் நடந்த லெஸ்பியன் திருமணம்: தமிழ் பெண்ணை கரம்பிடித்த வங்கதேச பெண்

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (12:53 IST)
சென்னையில் தமிழ்ப் பெண்ணுக்கும் வங்கதேசப் பெண்ணுக்கும் மரபான முறைப்படி திருமணம் நடந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"தமிழ்நாட்டைச் சேர்ந்த சுபிக்ஷா சுப்பிரமணி என்ற பெண்ணும் வங்கதேசத்தைச் சேர்ந்த டினா தாஸ் என்ற பெண்ணும் சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். சுபிக்ஷா தமிழ்நாட்டு முறைப்படி சேலை அணிந்து கொண்டும் டினா தாஸ் பைஜாமா அணிந்துகொண்டும் திருமண நிகழ்வில் பங்கேற்றனர்.

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட சுபிக்ஷாவின் குடும்ப முறைப்படி இந்தத் திருமணம் நடந்தது. மதுரையிலிருந்து அவருடைய குடும்பம் கத்தார் நாட்டுக்கும் அங்கிருந்து கனடாவிலுள்ள கல்கரிக்கும் இடம் பெயர்ந்தது. சுபிக்ஷாவின் தாய் பூர்ண புஷ்கலா, கல்கரி நகரில் குழந்தைகளுக்கான பள்ளியை நடத்தி வருகிறார்.

வங்கதேசத்தின் வடகிழக்கில் உள்ள மூல்விபசார் என்ற சிறிய நகரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் டினா தாஸ். இவருடைய சகோதரி, திருமணமாகி கனடாவின் மான்ட்ரியல் நகரத்தில் வசித்து வந்தார். அவரோடு, கடந்த 2003ஆம் ஆண்டு தனது பெற்றோருடன் சென்று தங்கினார் டினா தாஸ். சிறு வயதிலிருந்து பெண்கள் மீது ஈர்ப்பு கொண்டிருந்தார் டினா தாஸ். இதை ஒரு நோயாகக் கருதிய அவருடைய பெற்றோர், 19 வயதில் ஆண் ஒருவரோடு திருமணம் செய்து வைத்தனர். நான்கு ஆண்டுகளில் அந்த உறவை முறித்துக் கொண்டவர், இப்போது சுபிக்ஷாவை திருமணம் செய்துள்ளார்," என்று அந்தச் செய்தி குறிப்பிட்டுள்ளது.

வாரத்தில் ஒரு நாள் புத்தக பைகள் அவசியமில்லை

பள்ளி மாணவர்கள் கொண்டு செல்லும் புத்தக பைகளுக்கான எடை வரைமுறையை நிர்ணயித்துள்ள மத்திய பிரதேச அரசு, பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் 'புத்தக பைகள் இல்லாத நாளாக' கடைபிடிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அது குறித்த செய்தியில், "தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக பள்ளிக் கல்விக் கொள்கையை மத்திய பிரதேச அரசு வெளியிட்டுள்ளது. அதில், மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பதற்கு முக்கியத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1, 2 ஆகிய வகுப்பு மாணவர்கள், 1.6 முதல் 2.2 கிலோ வரையிலான பைகளையும் 3, 4, 5 ஆகிய வகுப்பு மாணவர்கள் 1.7 முதல் 2.5 கிலோ வரையுள்ள பைகளையும் கொண்டு செல்ல வரைமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 6, 7ஆம் வகுப்பு மாணவர்கள் 2 முதல் 3 கிலோ வரையுள்ள பைகளையும் 8-ம் வகுப்பு மாணவர்கள் 2.5 முதல் 4 கிலோ வரையுள்ள பைகளையும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், 9, 10ஆம் வகுப்பு மாணவர்கள் 2.5 முதல் 4.5 கிலோ வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகப் பைகளின் எடை குறித்து பள்ளிகள் துறைசார்ந்து முடிவெடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாடத் திட்டம் சாராத கூடுதல் நடவடிக்கைகளில் மாணவர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கில், வாரத்தில் ஒரு நாள் 'புத்தக பைகள் இல்லாத நாளாக' அனுசரிக்கப்படும் என்று மாநில பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கணினி, பொது அறிவு, விளையாட்டுகள், உடற்பயிற்சிகள், சுகாதாரத் தகவல்கள், கலைகள் உள்ளிட்டவை குறித்து அந்த நாளில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டுமென பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய விதிகள் அனைத்தும் மாநிலத்திலுள்ள 1.30 லட்சம் பள்ளிகளிலும் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் விதிகள் முறையாகக் கடைபிடிக்கப்படுகின்றனவா என்பது தொடர்பாக அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்த வேண்டுமென்றும் மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

பிராங்க் வீடியோ என்ற பெயரில் மக்களை அச்சுறுத்தினால் நடவடிக்கை

கோவை மாநகரில் பிராங்க் வீடியோ தயாரிப்பு என்ற பெயரில் மக்களை அச்சுறுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கோவை மாநகார காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், "பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பூங்கா, நடைபயிற்சி மைதானம், பள்ளி வளாகம் போன்ற பல பகுதிகளில் தனிநபர்கள் சிலர் பொதுமக்களிடம் குறும்புத்தனமான செயல்களில் ஈடுபட்டு அவற்றை வீடியோக்களாக எடுத்து, பிராங்க் வீடியோஸ் என்ற பெயரில் தங்களது யூட்யூப் சேனலில் வெளியிடுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

பிராங்க் வீடியோ என்ற பெயரில் வீடியோ எடுக்கும் பலர் அதை தொழில்முறையாகச் செய்து யூட்யூப் சேனலில் வெளியிட்டு வருவாய் ஈட்டுகின்றனர். இவ்வாறு பிராங்க் வீடியோ எடுப்பவர்களின் செயல்படுகள், அமைதியான சூழலை விரும்பி பூங்காக்களை நாடி வருபவர்கள், நடை பயிற்சிக்காக மைதாங்களுக்கு வருபவர்கள், பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்குச் செல்பவர்கள் மீது மிகுந்த தாக்கத்தையும் திடீர் பரபரப்பையும் ஏற்படுத்துகிறது.

சில வீடியோக்களில் நடிப்பவர்கள், பொதுவெளியில் முகம் சுழிக்கும் வகையிலும் வரம்பு மீறிய செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால், சம்பந்தப்பட்டவர்களுக்கு உடல்ரீதியாக அதிர்ச்சியும் மனரீதியாக திகைப்பும் ஏற்படுகிறது.

அவர்களின் செயல்கள், பொதுமக்களிடம் விரும்பத்தகாத எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு எடுக்கப்பட்ட வீடியோக்கள், சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியின்றியும் அவருக்குத் தெரியாமலும் யூட்யூப் சேனல்களில் வெளியிடப்படுவதால் அவர்களுடைய தனிமனித சுதந்திரம் மற்றும் இயல்பு வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பிராங்க் வீடியோக்கள் எடுப்பவர்களின் இந்தச் செயலானது அடிப்படை உரிமையான தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது.

கோவை மாநகரிலும் சமீபகாலமாக ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில், பிராங்க் வீடியோ எடுப்பவர்களின் செயல்பாடுகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, கோவை மாநகரில் யாரேனும் பிராங்க் வீடியோ எடுத்தல் என்ற விதத்தில் பொதுமக்களின் தனிமனித சுதந்திரத்திற்கும் அவர்களுடைய இயல்பு வாழ்வுக்கு பாதிப்பு உண்டாக்கும் வகையில் நடந்து கொண்டாலோ, அது பற்றி புகார் வரப் பெற்றாலோ சம்பந்தப்பட்ட பிராங்க் வீடியோக்களை எடுக்கும் நபர்கள் மீது குற்ற வழக்கு பதியப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுடைய வீடியோ சேனல் முடக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்