கருணா அம்மான்: சிங்கள கட்சிகளை விடுத்து தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைய விரும்புவது ஏன்?

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (12:17 IST)
இலங்கையிலுள்ள தேசிய கட்சிகளுடன் இணைந்து, தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தமக்கு கிடையாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (ஜனவரி 3) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தாம் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கு தான் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்பது, முழுமையாக தமிழர்களுக்கான கட்சி என்பதனால், இனிவரும் தேர்தல்களில் தாம் தமிழ் கட்சிகளுடன் இணைந்து பயணிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் வரவானது, ஏனைய கட்சிகளின் நடவடிக்கைகளை மந்தப்படுத்துவதற்கான செயற்பாடு அல்லவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மக்கள் மத்தியில் காணப்படுகின்ற இடைவெளியை நிரப்பும் வகையிலேயே, தமது கட்சியை வடக்கு மாகாணத்திலும் ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வன்னி நிலப்பரப்பில் இடம்பெற்ற போராட்டத்தில், களத்திலிருந்து போராடியவர் தான் என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியிலுள்ள மக்களின் துன்பங்கள், துயரங்களிலும் தான் பங்கெடுத்த ஒருவன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இவ்வாறான பின்னணியில், வன்னி மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய பாரிய கடமை தன்வசம் காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.
 
அவ்வாறான கடமைகளை நிறைவேற்றும் நோக்குடனேயே தான் வடக்கு மாகாணத்தை நோக்கி வருகைத் தந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
 
இவ்வாறான நிலையில், தேர்தலில் யாருடன் சேர்ந்து போட்டியிடுவது அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் தீர்மானிப்பதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தான் விமர்சித்தாலும், கூட்டமைப்புடன் நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே, கூட்டமைப்பை தான் விமர்சித்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சியை உருவாக்கியவர்களில் தானும் ஒருவர் என விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.
 
கிழக்கு மாகாண சபையில் 11 ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமிழத் தேசியக் கூட்டமைப்பு, அந்த மாகாண சபையை முஸ்லிம் தலைவர்களுக்கு தாரைவார்த்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.
 
அதேபோன்று, ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் அரசாங்கத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காப்பாற்றியதாகவும் அவர் கூறுகின்றார்.
 
தமிழ் மக்களுக்கு எந்தவித உதவிகளும் கிடைக்காத பின்னணியிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதாக அவர் குறிப்பிடுகின்றார்.
 
இலங்கை தமிழர் பகுதியில் சிங்களத்தில் வழங்கப்பட்ட சான்றிதழ்: வாங்க மறுத்த இளைஞர்கள் 40 லட்சம் ரூபாயை டேபிளில் பரப்பி வைத்து ஏழைகளுக்கு தரப் போவதாக கூறிய இலங்கை எம்.பி. இவ்வாறான நடவடிக்கைகளையே தாம் கூட்டமைப்பை விமர்சித்ததாக விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறாயினும், அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராகி வருவதாக அவர் தெரிவிக்கின்றார்.
 
அரசாங்கத்தின் அடிமைகள் அல்ல - கருணா அம்மான்
 
இலங்கை அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியாக இருக்க விரும்புகின்றோமே தவிர, அரசாங்கத்தின் அடிமைகளாக இருக்க தாம் விரும்பவில்லை என தமிழர் 
 
ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
 
தமிழர்களுக்கான பிரச்சனைகள் அதிகளவில் காணப்படுகின்றதாக சுட்டிக்காட்டிய அவர், அவர்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் சக்தியாக செயற்படுவதே தமது நோக்கம் எனவும் கூறியுள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதில்
 
இருவேறு காலக் கட்டங்களின் அடிப்படையில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை தாம் அவதானிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவிக்கின்றார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைய தயாராகவுள்ளதாக விநாயாகமூர்த்தி முரளிதரன் வெளியிட்ட கருத்து குறித்து, பிபிசி தமிழுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
2006ஆம் ஆண்டுக்கு முற்பட்ட கருணா அம்மான் வேறு, 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான விநாயகமூர்த்தி முரளிதரன் வேறு என அவர் கூறுகின்றார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராகவும், தளபதியாகவும் செயற்பட்ட காலத்தில், தமிழர்களுக்காக ஆற்றிய பணிகளுக்காகவும், சேவைகளுக்காகவும் அதற்கான மரியாதை மற்றும் அந்தஸ்த்து ஆகியன கருணா அம்மானுக்கு தமிழர்கள் மத்தியில் இன்றும் உள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
 
ஆனால், அதே கருணா அம்மான், விநாயகமூர்த்தி முரளிதரனாக மாறியதன் பின், அவர் தமிழ் மக்களுக்கு செய்த துரோகங்கள் என்பது தமிழ் மக்கள் மனங்களில் இன்றும் மறக்க முடியாதுள்ளதாக எஸ்.சிறிதரன் குறிப்பிடுகின்றார். இவ்வாறான இரண்டு தரசு படிகளை கொண்ட ஒருவரே விநாயகமூர்த்தி முரளிதரன் என அவர் கூறுகின்றார்.
 
மாபெரும் தேசிய தலைவர் ஒருவரின் தலைமையில் போராட்டமொன்றை வழிநடத்த முடியாத கருணா அம்மான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, தமிழ் மக்களுக்கான விடிவை பெற்றுக்கொடுப்பார் என்பது நகைப்பான விடயம் என அவர் தெரிவிக்கின்றார்.
 
இலங்கை தமிழரசு கட்சியின் பதில்
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணையவுள்ளதாக கருணா அம்மான் வெளியிட்ட கருத்து தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் பிபிசி தமிழ் வினவியது.
 
விநாயமூர்த்தி முரளிதரன் இதுவரை தம்மிடம் அவ்வாறான கோரிக்கையொன்றை முன்வைக்கவில்லை என கூறிய அவர், அவ்வாறான கோரிக்கையொன்று முன்வைக்கப்படும் பட்சத்தில், கூட்டமைப் பிலுள்ளவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி தீர்மானத்தை எட்டவுள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவிக்கின்றார்.
 
ராஜபக்ஷவுடன் இணைந்திருக்கும் கருணா அம்மான்
 
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய கருணா அம்மான், அன்று முதல் தொடர்ச்சியாக மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்துடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பின்னணியிலேயே, தற்போது தமிழ் கட்சிகளுடன் இணைவது தொடர்பிலான கருத்தை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்