கமலா ஹாரிஸ்: “ஒரேயொரு பலவீனம் இதுதான்”- டெல்லியில் வாழும் தாய்மாமா பகிரும் புதிய தகவல்கள்

வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (23:33 IST)
ஐந்து வயதில் துடிப்பும், துடுக்கும் நிறைந்தவராக அறியப்பட்டவர் கமலா ஹாரிஸ். தாத்தா பி.வி. கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோரின் வெளிநாட்டு வாழ்க்கையே, இன்று அமெரிக்க அரசியல் வரலாற்றில் நாட்டின் துணை அதிபர் வேட்பாளராக ஒரு தெற்காசிய இந்திய வம்சாவளியினரை அடையாளம் காண வித்திட்டுள்ளது.

 
1930களில் தாத்தா பி.வி. கோபாலன், தமிழகத்தின் மன்னார்குடியில் உள்ள பைங்கநாடு கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். பிரிட்டிஷ் இ்ந்தியா ஆட்சிக்காலத்தில் கல்லூரிப்படிப்பை முடித்து விட்டு, அரசுப் பணியில் சேர்ந்தார். பின்னர் 1960களில் இந்திய அரசு சார்பில் ஜாம்பியா நாட்டின் ரொடீசியா நாட்டில் உள்ள அகதிகள் கணக்கெடுப்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இணைச்செயலர் அந்தஸ்துவரை அவர் மத்திய அரசுப் பணியில் தொடர்ந்தார்.

 
தாத்தாவின் அயலுறவுப்பணி, தாயாரின் வெளிநாட்டு வாழ்க்கை, பிரபலங்களின் அறிமுகங்கள், சமூக ஈடுபாடு போன்றவைதான் கமலாவை பொதுவாழ்க்கை அரசியலுக்குள் நுழைய வழியமைத்திருக்க வேண்டும்.

 

கணவருடன் தோன்றிய கமலா

இது பற்றி ஒருமுறை நேர்காணலின்போது பேசிய கமலா ஹாரிஸ், உலகில் நான் நேசிக்கும் மிகப்பெரிய நபர்களில் எனது தாத்தா பி.வி. கோபாலன் குறிப்பிடத்தக்கவர்" என்று குறிப்பிடுகிறார்.

 

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, தனது கணவர் டக்ளஸ் எமோஃபுடன் முதல் முறையாகப் புதன்கிழமை கமலா ஹாரிஸ் தோன்றி, இவர்தான் எனது கணவர் என்று கூறி அவரை முத்தமிட்டார்.கமலா-டக்ளஸ் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்றாலும், ஏற்கெனவே விவாகரத்து ஆனவரான டக்ளஸின் முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தைகளான கோல் மற்றும் எல்லா இவர்களின் பராமரிப்பிலேயே வளர்க்கப்படுகிறார்கள்.

 
"குடும்பம்தான் எனக்கு எல்லாம். எனது சிறந்த கணவர் டக்ளஸ் எங்களுடைய பிள்ளைகள் கோல், எல்லா என்பதை அமெரிக்காவுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்" என்றார் கமலா.

 
அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன், தமது கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக செனட்டர் கமலா ஹாரிஸை தேர்வு செய்யப்பட்டது முதல், அவரது இந்திய வம்சாவளி வேர்கள் பற்றி பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
 

இந்தியாவை இணைக்கும் இரு உறவுகள்

 

இந்தியாவை பொருத்தவரை, தற்போது கமலா ஹாரிஸின் இரு நெருங்கிய குடும்ப உறவுகள் மட்டுமே உள்ளனர். ஒன்று டெல்லியில் வாழும் அவரது தாய்வழி மாமா கோ. கோபாலன், மற்றொருவர் சென்னையில் வாழும் தாய்வழி சித்தி சரளா கோபாலன்.


1998-இல் கமலாவின் தாத்தா பி.வி. கோபாலன் காலமானார். அவரது மகள் டாக்டர் ஷியாமளா, அமெரிக்காவுக்கு மருத்துவம் படிக்கச் சென்று அங்கேயே குடியேறினார். அந்த நாட்டின் தலைசிறந்த மார்பக புற்றுநோய் மருத்துவச் சிகிச்சை நிபுணராக அவர் விளங்கினார்.

 
ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த டொனால்ட் ஹாரிஸ் என்பவரை ஷியாமளா திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிக்கு பிறந்தவர்கள்தான் கமலா ஹாரிஸ், மாயா ஹாரிஸ். இருவருமே அமெரிக்காவில் பிறந்தவர்கள். தொழில்முறை வழக்கறிஞர்கள்.

தாத்தா பி.வி. கோபாலன், பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு சென்னையில் குடியேறியபோது, அவரை சந்திப்பதற்காக அவ்வப்போது கமலா ஹாரிஸ், மாயா ஹாரிஸ் குடும்பம் இந்தியாவுக்கு வந்துபோவதுண்டு.

இந்த நிலையில்தான் கமலா ஹாரிஸின் அமெரிக்க அரசியல் உச்சநிலை வாய்ப்பு பற்றிய தகவல் அவரது இந்தியக் குடும்பத்தினருக்குக் கிடைத்தது.

 

தாய்மாமாவின் நெகிழ்ச்சியான அனுபவம்

 
இது குறித்து டெல்லியில் உள்ள அவரது தாய்வழி மாமா கோபாலனிடம் பிபிசி பேசியது.
"அன்றைய தினம், காலை 5 மணிக்கு எனது செல்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது."
அதில் பேசிய எனது சென்னை தங்கை சரளா, "கமலா, அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக தேர்வாகியுள்ளார்" என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 
பிறகு கமலாவின் செல்பேசிக்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என வாழ்த்துச் செய்தி அனுப்பினேன்.

"கமலாவை, கடைசியாக நாங்கள் கடந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில், சான் பிரான்சிஸ்கோ சென்றபோது நேரில் சந்தித்தோம்."

 
கமலாவின் குழந்தைப்பருவம் எல்லாம் அமெரிக்காவில்தான். அங்குதான் படித்தார், அட்டர்னி ஆனார். ஆனால், அவ்வப்போது, இந்தியாவில் வாழும் எங்களுடைய அப்பா, அம்மாவை (கமலாவின் தாத்தா, பாட்டி) பார்க்க அவர் வருவார். அப்போது நாங்களும் சென்னைக்குச் செல்வோம்." என்றார் கோபாலன்.

எங்களுடைய தந்தையின் சஷ்டியப்தபூர்த்திக்கு பிறகு அவருக்கு உடல் நலமில்லாமல் போனது. அதனால், சண்டீகரில் அவர் இருக்க நேர்ந்தது. அப்போது கமலா அங்கு வருவார். நாங்களும் அவரைப் பார்க்க அங்கு செல்வோம்.

 

"எனது தங்கையும் கமலாவின் தாயாருமான ஷியாமளா 2009-ஆம் ஆண்டில் காலமானார். அதனால், அவரது அஸ்தியை கரைக்க அமலா இந்தியா வந்து வங்காள விரிகுடாவில் அஸ்தியை கரைத்தார்." என்று கோபாலன் கூறினார்.

 
 

அட்டர்னி முதல் செனட்டர்வரை

 

கமலா ஹாரிஸின் தனித்தன்மை பற்றி கேட்டபோது, "எது செய்தாலும், அது சமூகத்துக்கு பயன் தர வேண்டும் என கமலா சிந்திப்பார். அதனால்தான் அவர் வழக்கறிஞரான பிறகு, தனியாக தொழில் செய்யாமல், அரசு வழக்கறிஞராக பணியாற்றினார்." கோபாலன் கூறினார்.

"சட்டம் படிக்க கமலா விரும்பியபோது, படிப்பு என்பது அடிப்படைதான். ஆனால், வழக்கறிஞர் தொழிலை செய்ய விரும்பினால், அது சமூகத்துக்கானதாக இருக்க வேண்டும் என்று எனது தங்கை ஷியாமளா அறிவுறுத்தினார். தனது இரு மகள்களையும் இப்படிச்சொல்லித்தான் அவர் வளர்த்தார். அதுவே கமலாவை செழுமைப்படுத்தி இந்த அளவுக்கு முன்னேறக் காரணமாகியிருக்கிறது" என்று கோபாலன் பெருமிதப்பட்டார்.

 மேலும் அவர், "சமூகத்தில் உயர்ந்த பதவிக்கு வருவதென்றால் அதற்கு ஒரு இலக்கு தேவை என கமலா விரும்பினார். அதனால்தான் சான் பிரான்சிஸ்கோவில் மாவட்ட அட்டர்னி ஆக இருந்தபோது அடுத்த நிலைக்கு தன்னை தயார்படுத்தினார்.

 பிறகு கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரல் ஆக இருந்தபோது அதற்கு அடுத்த நிலைக்கு தன்னை தயார்படுத்தினார். ஆனால், ஒரு மாவட்டம், ஒரு மாகாணம் என அவரது சமூக பங்களிப்பு நின்று விடவில்லை. மேலும், மேலும் சாதிக்க வேண்டும் என விரும்பினார். அதன் விளைவாகவே அவரால் செனட்டர் ஆக முடிந்தது" என்று கோபாலன் விவரித்தார்.
 

நிறவெறிக்கு எதிரானவர்

 

"சிவில் உரிமைகள், கருப்பின பிரச்சினைகள் பற்றி அதிகமாகக் கமலா விவாதிப்பார். அமெரிக்க சட்டவிதிகளின்படி ஒருமுறை குற்ற வழக்கில் சிறை தண்டனை அனுபவித்தவர், தேர்தலில் வாக்குரிமையை இழப்பார். ஆனால், இதற்கு உடன்படாத கமலா, செய்த தவறுக்கு அந்த நபர் தண்டனை அனுபவித்து முடித்த பிறகு, அவருக்கான வாக்குரிமையை ஏன் மறுக்க வேண்டும் என குரல் கொடுத்தார்" என்கிறார் கோபாலன்.

குறிப்பாக, கருப்பு, வெள்ளை இன பிரச்னைகள் மட்டுமின்றி, சிறை கைதிகள் உரிமைகள், லெஸ்பியன்கள், ஓரின ஈர்ப்பாளர்கள் ஆகியோரின் உரிமைகளுக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

"1990களில் எங்களுடைய குடும்பம் முதல் முறையாக அனைவரும் நிறைந்ததாக இருந்தது. அப்போது கமலா, அவரது சகோதரி மாயா, மாயவின் மகள், எனது மனைவி, மகள், சென்னை தங்கை சரளா என எல்லோரும் ஒன்றாக நேரில் கூடினோம். சென்னை பெசன்ட் நகரில் இருந்த மூன்று படுக்கை அறை கொண்ட அந்த வீட்டில் நாங்கள் சந்தித்தோம். கடற்கரைக்குச் செல்வது, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பது என கேளிக்கை, குதூகலத்துடன் அந்த விடுமுறை நாட்கள் கழிந்தன" என்று பழைய நினைவுகளைக் கோபாலன் நினைவுகூர்ந்தார்.
 

பாட்டி சொல்லை தட்டாதவர்

 

கமலாவுக்கு முற்போக்கு சிந்தனை அதிகம், சென்னை வீட்டில் நாங்கள் அனைவரும் கூடியதை பார்த்து எங்களுடைய அம்மா, எல்லோரும் வெளியே போகும்போது ஒன்றாக போகாதீர்கள், கண்ணு பட்டு விடும். இருவர், இருவராக சென்று வெளியே ஒன்றாக கலந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவார். அப்போது கமலா, என்ன பாட்டி இந்த காலத்தில் போய் இப்படியெல்லாம் பார்க்கிறீர்களே என்பார்.

ஆனால், எங்களுடைய அம்மா, அது எல்லாம் பேசக்கூடாது. எனது வீட்டில் எனது சொல்படிதான் கேட்கணும் என்பார். உடனே கமலா அவர் சொல்வதை அப்படியே செய்கிறேன் என பாசத்துக்கு கட்டுப்படுவார்.

பொதுவாழ்வில் அவருக்கு உறுதியான கோட்பாடுகள் உள்ளன. கருப்பினத்தவர் இயக்கம் என எடுத்துக் கொண்டால், நிறத்தின் பெயரால் ஒருவரை தாக்கக் கூடாது. ஏன் அப்படி செய்ய வேண்டும் என அவர் கேட்பார். அந்த மக்களுக்காக வாதாடுவார்.

 
சிறு வயதிலேயே பரந்து பட்ட சூழலில் வளர்ந்ததால் அவருக்கு நிற வேற்றுமை எல்லாம் அறியவில்லை. அதனால், அந்த நிற வேற்றுமை அடிப்படையில் யாருக்காவது தீங்கு நேர்ந்தால் உடனே குரல் கொடு்ப்பவராக கமலா முன்னிற்பார்.

 
அமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்படவும் அந்தப் பதவிக்கு தேர்வானால் அதை வகிக்கவும் சிறந்த முறையில் கமலா தகுதி பெறுவார். தான் பணியாற்றும் எந்த அவையானாலும், அங்கே தனது குரலை அச்சமின்றி துணிவுடன் ஒலிக்க கமலா தவற மாட்டார்.

 
அட்டர்னி ஆனபோதும், அட்டர்னி ஜெனரல் ஆனபோதும், செனட்டர் ஆனபோதும் அவரை சுற்றி பல ஏச்சுகளும் பேச்சுகளும் விமர்சனங்களும் வந்தாலும், ஒரு ஆசிய கருப்பின பெண் தங்களுக்கு நிகராக பேசுவதாக என்று சக எம்.பி.க்கள் பேசியபோதும், துணிச்சலாக தமது கருத்துகளை பதிவு செய்வார்.

மரண தண்டனை எதிர்ப்பாளர்

அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு கமலா தேர்வானால், இந்தியா, அமெரிக்கா இடையிலான நல்லுறவு மேலும் உறுதிபெறும் என்று நம்புகிறேன். இரு பெரிய நாடுகள் இடையே பெரும்பாலும் ஏற்படும் பிரச்னைகள், தொடர்பு இடைவெளியாலேயே நிகழ்கின்றன. அந்த தொடர்பை இணைக்கும் வகையில் கமலா செயல்படுவார் என்பதால், இரு நாட்டு உறவுகளும், பிரச்னைகளும் உடனடியாக தீர்க்கப்பட அதிக வாய்ப்புண்டு.

 

"அவர் மாவட்ட அட்டர்னி ஆக இருந்த காலகட்டத்தில், ஒரு போலீஸ் காவலரை ஒருவர் சுட்டு விட்டார். அந்த வழக்கில் அவர் வாதிட வேண்டும். அப்போது, குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பதை நான் உறுதிப்படுத்துவேன். ஆனால், மரண தண்டனை கேட்க மாட்டேன் என்றார். அந்த கொள்கையில் அவர் கடைசிவரை உறுதியாக இருந்தார்."

 
"அங்கு போலீஸ் சங்கம் மிக வலுவான அமைப்பு. நீங்கள் மரண தண்டனை கோராவிட்டால் உங்களுடைய மறுதேர்வின்போது நாங்கள் உங்களை ஆதரிக்க மாட்டோம் என சங்கத்தினர் கூறினார்கள். ஆனாலும், பின்வாங்காமல் என்னை நீங்கள் ஆதரிக்காவிட்டாலும் மரண தண்டனையை என்னால் கோர முடியாது என்பதில் கமலா உறுதியாக நின்றார்."

 
"பிறகு மறுதேர்தல் நடந்தபோது அதே போலீஸ் சங்க ஆதரவுடன் கமலா தேர்வானார். ஆனால், அவரது ஒரே பலவீனம், தனது அம்மாவும் எனது தங்கையுமான ஷியாமளா பற்றி யாராவது தவறாக பேசினால் அவர்களை ஒரு வழிபார்த்து விடுவார்" என்றார் பாலசந்திரன்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்