நகைக்கடன் 81.6% உயர்வு: ஆர்பிஐ அதிர்ச்சித் தகவலால் இனி என்ன நடக்கும்?

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (11:05 IST)
கொரோனா தொற்று காரணமாக, தங்க நகைக் கடன் வழங்குவது அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. `மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் தங்களிடம் இருக்கும் நகைகளை அடமானம் வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்' என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். என்ன நடந்தது?
 
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, மூன்றாவது அலைக்கு அரசுகள் தயாராகி வரும் நிலையில், கோவிட் பேரிடரால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் என்பது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
அரசுகள் வழங்கும் ரேசன் பொருள்களும் தேவையை நிறைவேற்றக் கூடிய அளவில் இல்லை. இதனால் குடும்பச் செலவுகளுக்கே சிரமப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், கடந்த ஓராண்டாக வாகனக் கடன், வீட்டுக்கடன், தனி நபர் கடன், வேளாண் கடன் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
 
81.6 சதவிகிதமாக உயர்ந்த நகைக்கடன்!

கடந்த ஜூன் 2019 முதல் 2020 வரையில் நடந்த விவரங்களை (Deployment of Gross Bank Credit by Major Sectors) ஆர்.பி.ஐ பட்டியலிட்டுள்ளது. அதன்படி, வாகன கடன் என்பது 7.1 சதவிகிதத்தில் இருந்து 11.0 ஆக உயர்ந்துள்ளது.
 
தங்க நகைக்கடன் என்பது 34.9 சதவிகிதத்தில் இருந்து 81.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தனி நபர் கடனும் 10.8 சதவிகிதத்தில் இருந்து 16.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதாவது, தனி நபர் கடனானது 27 லட்சத்து 86 ஆயிரத்து 519 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், வீட்டுக்கடன் வாங்குவதும் 9.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
 
இதில், தங்க நகைக்கு மட்டுமே 62,221 கோடி ரூபாய் கடன் தரப்பட்டுள்ளதாக ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. அதேநேரம், கல்விக் கடன் பெறுவது குறைந்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் 62,720 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 63,805 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டிருந்தது.
மேலும், கடன் அட்டைகள் (credit cards) மூலம் கடன் பெறுவது, வங்கி முதலீட்டுப் பத்திரங்களை அடமானமாக வைத்து கடன்பெறுவது போன்றவையும் அதிகரித்துள்ளதாக ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. அதிலும், முதலீட்டுப் பத்திரங்கள் மூலமாக 65,891 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆர்.பி.ஐ பட்டியலிட்டுள்ளது.
 
வைப்பு நிதியை எடுத்த 76 லட்சம் பேர்
 
`நகைக்கடன் அதிகரிப்புக்கு என்ன காரணம்?" என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் இணைச் செயலாளர் (தமிழ்நாடு) சி.பி.கிருஷ்ணனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
 
``கோவிட் தொற்றால் எளிய மக்களின் வருமானம் பறிபோய்விட்டது. அவர்களுக்கு இதுவரையில் வந்து கொண்டிருந்த வருமானங்களும் நின்றுவிட்டன.
 
என்னதான் திறமை இருந்தாலும் தனியார் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு சொற்ப ஊதியமே சம்பளமாக தரப்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் அதுவும் நின்றுபோய் வருமானம் இல்லாமல் சிலர் வேறு தொழில்களுக்குச் சென்று இறந்து போன சம்பவங்களும் நடந்துள்ளன.
 
தங்க நகைகள் மட்டுமல்லாமல், வருங்கால வைப்பு நிதியில் இருந்து 76 லட்சம் பேர் 18,600 கோடி ரூபாய் அளவுக்கு எடுத்துள்ளனர். இதற்குக் காரணம், கொரோனா காலத்தில் மக்களின் மருத்துவ செலவு என்பது எதிர்பாராதவிதமாக அதிகரித்துவிட்டதுதான்.
 
தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு விதித்த கட்டுப்பாடுகள் எல்லாம் வெறும் பேப்பர் அளவில்தான் உள்ளன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர், நாளொன்றுக்கு சாதாரணமாக 50,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி வந்தது.
 
3 லட்ச ரூபாய் இல்லாமல் சிகிச்சையைப் பெற முடியாத சூழல் நிலவியது. இதனால் தங்களிடம் இருக்கும் நகைகளை அடமானம் வைக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
 
வாகன கடன் அதிகரிப்பு ஏன்?
அதேபோல், வாகனக் கடன்களைப் பொறுத்தவரையில் கார் வாங்குவதைவிட டூவீலர்களை வாங்குவது அதிகரித்துள்ளது. அதற்குக் காரணம், இளைஞர்கள் பலரும் வேலையிழந்து உணவு டெலிவரி நிறுவனங்களை நோக்கிச் சென்றதுதான்.
 
அங்கு சென்றால் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. வாகனம் இல்லாமல் அங்கு பணிபுரிய முடியாது. அதனால் வாகனக் கடன் அதிகரித்துவிட்டது. இதன்மூலம் ஏழ்மையில் உள்ளவர்களை மேலும் ஏழ்மையை நோக்கித் தள்ளிய நிலையைத்தான் பார்க்க முடிகிறது" என்கிறார்.
 
தொடர்ந்து பேசிய சி.பி.கிருஷ்ணன், ``அண்மையில் டெல்லியில் 2,000 பேரிடம் எடுத்த சர்வே முடிவுகளில், கடந்த 3 மாதங்களில் 65 சதவிகித மக்களுக்கு வேலை போய்விட்டது தெரியவந்துள்ளது.
 
கொரோனா காலத்தால் சாதாரண மக்கள், தங்கள் வாழ்வாரத்தை இழந்து விட்டனர். அதேநேரம், கடந்த ஓராண்டில் 100 பணக்காரர்களால் மட்டும் 13 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துகளைச் சேர்க்க முடிந்துள்ளது.
 
இதன் காரணமாக, `கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் 7,000 ரூபாயை கொடுங்கள், அதுதான் அவர்களைக் காப்பாற்றும்' எனக் கூறி கடந்த வருட நவம்பர் மாதம் போராட்டம் நடத்தினோம். அதை அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை.
 
இதற்கிடையில், கிராம வங்கிகளில் லாபம் ஈட்டக் கூடிய `ஏ வகுப்பு' வங்கிகளை தனியார்மயமாக்கும் வேலையில் இறங்க உள்ளனர். `பி வகுப்பு' வங்கிகளில் உள்ள மத்திய அரசின் பங்கை, எந்த நிறுவனம் நிர்வகிக்கிறதோ அவர்களுக்கே அதில் 50 சதவிகிதம் கொடுக்க உள்ளனர்.
 
இதன்மூலம் தனக்கான பொறுப்பில் இருந்து மத்திய அரசு விலகிக் கொள்ளும் முடிவில் உள்ளது. இதனால் எந்த நோக்கத்துக்காக கிராம வங்கிகள் உருவாக்கப்பட்டதோ, அது சிதையும் நிலையில் உள்ளது. மத்திய அரசின் செயலால் இன்னும் 50 ஆண்டுகளுக்கு நாடு பின்னோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது" என்கிறார்.
 
வங்கிகளுக்கு பாதிப்பா?
 
``நகைக்கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போய்விட்டால், வங்கிகளுக்கு நெருக்கடிகள் ஏற்படாதா?" என்றோம்.
 
`` இது ஒரு பெரிய விஷயம் அல்ல. ஏழைகளுக்குக் கொடுக்கக் கூடிய நகைக்கடன், சுயஉதவிக் குழுக்களுக்கு கொடுக்கக் கூடிய கடன், 3 லட்ச ரூபாய் வரையில் உத்தரவாதம் இல்லாத பயிர்க்கடன், 2 லட்ச ரூபாய் வரையிலான சிறு தொழில் கடன், 4 லட்ச ரூபாய் வரையில் உத்தரவாதம் இல்லாத கல்விக் கடன் போன்றவற்றை லட்சக்கணக்கான மக்களுக்குக் கொடுத்தாலும் இதனால் ஏற்படக் கூடிய வராக் கடன் என்பது வெறும் ஒன்றரை சதவிகிதம்தான்.
 
அதுவே, 5 கோடிக்கு மேல் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாதவர்களால் ஏற்பட்டுள்ள வராக்கடன் என்பது 88 முதல் 90 சதவிகிதமாக உள்ளது. அதனால் நகைக்கடன் அதிகரிப்பு என்பது வங்கிகளை எந்தவகையிலும் பாதித்துவிடாது.
 
அதேநேரம், பெரும் நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அதாவது, மொத்த கடன் தொகையில் 6 சதவிகிதம் செலுத்தினாலே அவரது கம்பெனியை அவரிடமே கொடுத்துவிடுவார்கள். குறிப்பாக, பிரபலமான தொழிலதிபர் ஒருவர் வங்கிகளில் 4,800 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
 
இதில், 380 கோடியை அவர் கொடுத்து முடித்துவிட்டால் அவரது 94 சதவிகித கடனை தள்ளுபடி செய்துவிடுவார்கள். அதுவே, 1 லட்ச ரூபாய் நகைக்கடனை வாங்கியவர், `நான் 6,000 கொடுக்கிறேன், நகையைத் திருப்பிக் கொடுங்கள்' என்றால் அரசாங்கம் கொடுக்குமா?
 
அந்த நகையை ஏலத்தில்தான் விடுவார்கள். சாதாரண மக்கள் வைக்கக் கூடிய அடமானங்களில் பண சுழற்சி இருக்கிறது. இதனால் எந்தவித நஷ்டங்களும் ஏற்படப் போவதில்லை. பணக்காரர்கள் 10 சதவிகித உத்தரவாதம் கொடுத்தாலும் அவர்களிடம் சமரசம் செய்து கொள்கின்றனர்" என்கிறார்.
 
கள்ளச்சந்தையில் தங்கத்தின் ஆதிக்கம்!
 
``கடந்த ஓராண்டு காலத்தில் தங்க நகைகளுக்கான ஏலம் என்பது அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிகளை தனியார் நகைக்கடன் நிதி நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை. பொதுத்துறை வங்கிகளுக்கும் தனியார் நிதி நிறுவனங்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன.
 
பொதுவாக, தங்க நகைக்கு 2.5 சதவிகித கடனை வசூல் செய்கின்றனர். கொரோனா காலத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் வட்டியையும் குறைக்கவில்லை. இதனால் தங்கத்தை அடமானம் வைப்பவர்களால் அதனை மீட்க முடிவதில்லை" என்கிறார் கோவையைச் சேர்ந்த யூசுப் சித்திக். இவர் தங்க நகை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 
தொடர்ந்து பேசியவர், `` கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் நெல்லை மாவட்ட கிளையில் 300 கிலோ வரையில் தங்கத்தை ஏலம் விடுவார்கள். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மொத்த வியாபாரிகள் செல்வார்கள்.
 
அங்கே நடக்கின்ற ஏலத்தில் ஒவ்வொருவருக்கும் 5 கிலோ வரையில் தங்கம் கிடைக்கும். தற்போது தங்க நகையை அடமானம் வைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், கஸ்டமர்களால் அதை மீட்க முடிவதில்லை. இதனால், உள்ளூரில் தங்கத்தை வாங்குகிறவர்களிடம் மக்களே விற்றுவிடுகின்றனர். அவர்களும் பணத்தைக் கட்டி தங்கத்தை மீட்டுவிட்டு அதற்குரிய வித்தியாச தொகையை மக்களிடமே கொடுத்துவிடுகின்றனர்.
 
அடமான தங்கத்தை மீட்பதைவிட விற்பதையே மக்கள் விரும்புகின்றனர். காரணம், மக்களால் கடனைக் கட்ட முடிவதில்லை. ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு தொகையை வசூலிக்கின்றன. ஒரு லட்ச ரூபாய்க்கு 2,500 முதல் 5,000 வரையில் கடன் வசூலிக்கின்றனர்.
 
இதனால், அண்மைக்காலமாக கள்ளச் சந்தையில் தங்கத்தின் புழக்கம் அதிகமாக உள்ளது. 30,000 டன் தங்கத்துக்கு 10,000 டன்னுக்கு மட்டுமே பில் காட்டப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. மக்களால் நகைக்கடனை சரியாக செலுத்த முடியாததால் கள்ளச்சந்தையில் தங்கத்தின் புழக்கம் அதிகரித்துள்ளது" என்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்