ஒடிஷாவில் கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளி வகுப்பறையில் அடைத்து வைத்த ஆசிரியர்கள்

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (09:36 IST)
ஒடிஷாவில் கட்டணம் செலுத்தாத பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் வகுப்பறையில் அடைத்து வைத்ததாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


ஒடிஷா மாநிலம் புவனேஸ்வர் நகரின் காதிகியா பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு பயிலும் 34 மாணவர்கள் பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி அவர்களை நேற்று முன்தினம் (ஆக. 22) ஒரு வகுப்பறையில் ஆசிரியர்கள் அடைத்து வைத்ததாக அச்செய்தி தெரிவிக்கிறது.

சுமார் 5 மணி நேரம் அவர்களை சாப்பிடவோ, நீர் பருகவோ, கழிப்பறை செல்லவோ கூட அனுமதிக்கவில்லை என்று கூறப்படுவதாகவும் பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் அடைத்து வைத்திருப்பதாக அந்த மாணவர்களிடம் தெரிவித்த நிர்வாகிகள், அவர்கள் தங்கள் பெற்றோருக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்க அனுமதி மறுத்துவிட்டதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 5 மணிநேரம் கழிந்த நிலையில், கட்டணம் செலுத்தாதது குறித்த நோட்டீசை மாணவர்களுக்கு வழங்கி, அதை அவர்கள் தங்கள் பெற்றோரிடம் கொடுக்கும்படி கூறியதாகவும், இந்த விவகாரத்தால் கோபமடைந்த பெற்றோர்கள் நேற்று பெருமளவில் திரண்டு, பள்ளி முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதாக அச்செய்தி கூறுகிறது.

அந்த பெற்றோரில் ஒருவர், தான் ஏற்கெனவே ஆன்லைன் வாயிலாக பள்ளிக் கட்டணத்தைச் செலுத்திவிட்டதாகவும், ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது தெரியவில்லை என்றும் கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழில் மாணவர்கள் கையொப்பம்: கல்வித்துறை புதிய உத்தரவு

பள்ளிப் பதிவேடுகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் தங்கள் கையொப்பத்தையும் பெயரின் முன்னெழுத்தையும் தமிழில் எழுதுமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக, 'தினமணி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார், முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், "பள்ளி மாணவர்கள் இனி தமிழில் கையொப்பமிட்டால் முன்னெழுத்தையும் (இனிஷியல்) கட்டாயம் தமிழில் எழுத வேண்டும். பள்ளிக்கு மாணவர்கள் அளிக்கும் விண்ணப்பம், வருகைப்பதிவேடு பள்ளி, கல்லூரி முடித்து பெறுகின்ற சான்றிதழ் வரையில் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்து தமிழ் பெயருக்கு முன் வழங்க வேண்டும்.

முதல்கட்டமாக பள்ளி தகவல் மேலாண்மை இணையப்பக்கத்தில் பராமரிக்கப்படும் மாணவர்களின் 30 பதிவேடுகளில் மாணவர்கள், பெற்றோர்கள் பாதுகாவலர் பெயர்களை தமிழில் பதிவேற்றம் செய்யும்போது அதனை தமிழ் முன்னெழுத்துடனேயே பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுதொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவுப் பணவீக்கம் உயர்வாக உள்ள நாடுகளின் பட்டியலில் 5 ஆம் இடத்தில் இலங்கை

உலக அளவில் உணவுப்பணவீக்கம் கூடிய முதல் 10 நாடுகளின் பட்டியலில் முறையே லெபனான், ஜிம்பாப்வே, வெனிசுவேலா, துருக்கி ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இலங்கை 5 ஆவது இடத்தில் இருப்பதுடன் அதன் ஆண்டுக்கு ஆண்டு சராசரி உணவுப்பணவீக்கமானது 91 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது என, 'வீரகேசரி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு உலக அளவில் ஒவ்வொரு நாடுகளினதும் உணவுப்பணவீக்கம், உணவுப்பொருட்களுக்கான கேள்வி மற்றும் நிரம்பல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக்கொண்டு அந்நாடுகளின் உணவுப்பாதுகாப்பு நிலை எவ்வாறான மட்டத்தில் உள்ளது என்பதை மதிப்பீடு செய்து, அதனை அடிப்படையாகக்கொண்டு உலக வங்கியினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே இலங்கை மேற்குறிப்பிட்டவாறான நிலையிலிருப்பதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் உலகநாடுகளில் அவதானிக்கப்பட்ட உணவுப்பொருட்களின் விலையேற்றம், அவற்றுக்கான கேள்வி, நிரம்பல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக்கொண்டு உணவுப்பணவீக்கம் கூடிய முதல் 10 நாடுகளின் பட்டியலை உலக வங்கி அதன் அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது. அதில் லெபனான், ஜிம்பாப்வே, வெனிசுவேலா, துருக்கி, இலங்கை, ஈரான், அர்ஜென்டினா, சூரிநாம், எத்தியோப்பியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகள் முறையே (சதவீதம்) 332, 309, 155, 95, 91, 90, 66, 38, 38, 34 என்ற ஆண்டுக்கு ஆண்டு சராசரி உணவுப்பணவீக்கத்துடன் 1 - 10 என்ற வரிசைப்படுத்தலில் உள்ளது என அச்செய்தி கூறுகிறது.

2022 ஜுலை மாதமாகும்போது தெற்காசியாவிலுள்ள பெரும்பாலான நாடுகளின் உணவுப்பணவீக்கம் உயர்வாகப் பதிவாகியிருப்பதாகவும், குறிப்பாக ஜுலையில் பூடான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உள்நாட்டு உணவுப்பொருள் நிரம்பலில் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்திருந்ததாகவும் உலக வங்கி அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.

மேலும் உரத்தட்டுப்பாட்டின் விளைவாக இலங்கையின் விவசாய உற்பத்தி 40 - 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்ததுடன் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அவசியமான வெளிநாட்டு நாணயக் கையிருப்புக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் அதன்படி இலங்கையின் உணவுப்பணவீக்கம் 80 சதவீதமாக உயர்வடைந்ததாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஐ.நாவில் முறையிடுவோம்"

இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் எதிர்ப்புகளை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரதான பேசுப்பொருளாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

பேரவாவியில் தள்ளியவர்களை தேடும் போலீசார், அமைதியானப் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை நடத்தியவர்களை தேடவில்லை என்பது பாரதூரமான பிரச்னை எனவும் அவர் தெரிவித்ததாக அச்செய்தி குறிப்பிடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்