புதுச்சேரியில் வீடுகளில் கழிவறை கட்டுவோருக்கு 'கபாலி' படத்தின் டிக்கெட் இலவசமாக தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள எல்லா கிராமங்களையும், நகர பகுதிகளையும் தூய்மையானதாக மற்றும் 100 சதவீதம் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதி இது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் ஜவஹர் கூறியதாவது: ''புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் 45,000 வீடுகள் மற்றும் நகரப் பகுதிகளில் 9,000 வீடுகளிலும் கழிவறை வசதிகள் இல்லை என்று கணக்கெடுப்பில் தெரியவந்தது. பொது மக்களின் பங்கேற்பு கழிவறை கட்டும் திட்டத்தில் அவசியம். அவர்களை ஈர்க்க புதிய வழியை யோசித்தோம். கபாலி படத்தின் டிக்கெட் அவர்களை கவரும் என்பதை அறிந்து இதை அறிவித்தோம்,'' என்றார்.
இந்த அறிவிப்பிற்கு பிறகு 76 வீடுகளில் கழிவறை கட்ட முன்வந்துள்ளனர் என்றார். ''கபாலி படம் வெளியாகும் முதல் நாள் படம் பார்க்க ஒரு வீட்டிற்கு நான்கு டிக்கெட்டுகள் வழங்கப்படும். திரையரங்கு உரிமையாளர்களிடம் பேசி தற்போது 200 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டோம். இன்னும் அதிக மக்கள் பங்கேற்கவேண்டும். புதுச்சேரி முழுவதும் தூய்மையாக மாற வேண்டும் எனபதே எங்கள் இலக்கு'' என்றார்.