ஐஸ் போதைப்பொருள் - ஒரே வாரத்தில் ரூ. 128 கோடி மதிப்புள்ள பாக்கெட்டுகள் பறிமுதல்

சனி, 17 ஏப்ரல் 2021 (14:33 IST)
இலங்கையில் கடந்த காலங்களில் ஐஸ் போதைப்பொருள் அதிகளவில் பறிமுதல் செய்யப்படுவதை அவதானிக்க முடிகிறது.

 
கடந்த ஒரு வார காலமாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் ஊடாக 128 கோடி இலங்கை ரூபாய் மதிப்புள்ள சுமார் 128 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் இரண்டு பெண்கள் உள்பட 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடக பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கூறினார்.
 
கொழும்பு புறநகர் பகுதியான வத்தளை பகுதியில் கடந்த 10ஆம் தேதி 113 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 101 கிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, கொழும்பு புறநகர் பகுதியான ஜா-எல பகுதியில் 15 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த சம்பவம் தொடர்பில் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இவ்வாறு கைது செய்யப்பட்ட மொத்தம் 7 சந்தேக நபர்களிடமும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர்.
 
அதைத்தொடர்ந்து, ஐஸ் போதைப்பொருள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த களஞ்சியசாலையொன்றை கைப்பற்றுவதற்கான இயலுமை போலீஸாருக்கு கிடைத்ததாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். பின்னர் கடந்த 12ம் தேதி கொழும்பு புறநகர் பகுதியான சப்புகஸ்கந்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் ஊடாக 110 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
 
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் 5 சந்தேக நபர்களை போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இன்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வசமிருந்து 2.433 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில், இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 128 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் தலைமறைவாகியுள்ள நிபுண என்ற நபரினாலேயே, இந்த போதைப்பொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
 
அத்துடன், இந்த போதைப்பொருளை நாட்டிற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளில் ருபன் மற்றும் லால் என்ற இருவரே செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த இரண்டு சந்தேக நபர்களும், இருவேறு நாடுகளில் தலைமறைவாகியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். 
 
இந்த சந்தேக நபர்கள் அனைவரும், இலங்கை போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் கூறினார். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஐஸ் போதைப்பொருளின் ஒரு கிலோ கிராம் சந்தையில் விற்கப்படுவதாக இருந்தால், அதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் ஆக இருக்கும் என மதிப்பிட முடிவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
 
குறித்த போதைப்பொருள் வெளிநாடுகளில் இருந்தே, இலங்கைக்கு கடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய, வெளிநாடுகளில் வாழும் நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்