கரூரில் காங்கிரஸ் பெண் நிர்வாகி ஒருவர் திமுகவில் இணைந்தது தொடர்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவிட்ட ட்வீட், கூட்டணி கட்சிகளுக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, செந்தில் பாலாஜியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் கவிதா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையை கண்டு ஈர்க்கப்பட்டு, திமுகவில் இணைந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், இந்த பதிவுவுக்கு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடுமையாக கண்டித்தார். இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது என்றும் ஜோதிமணி தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.
மேலும், இந்த விவகாரத்தை மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு எடுத்து செல்வார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, "கூட்டணி தர்மத்தை கருத்தில் கொண்டு, செந்தில் பாலாஜி இப்படி செய்திருக்கக் கூடாது. நான் உடனடியாக இந்த விவகாரத்தை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன். அதன் பிறகு, அந்த பதிவு நீக்கப்பட்டது.
இத்தகைய செயல்கள் முதலமைச்சருக்கு தேவையற்ற நெருக்கடியை உருவாக்கும். எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மிகவும் பெருந்தன்மையுடன் இந்த விவகாரத்தை கையாண்டுள்ளார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவருக்குரிய மரியாதையும் மதிப்பும் அளிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.