அமெரிக்காவின்முதல்விண்வெளிவீரரானஆலன்ஷெப்பர்ட்டின்மகள், தன் 74ஆவதுவயதில்விண்வெளிக்குச்சென்றுள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடங்கிய ப்ளூ ஆரிஜின் என்கிற வணிக ரீதியிலான விண்வெளி நிறுவனத்தின் விமானத்தில் லாரா ஷெப்பர்ட் சர்ச்லே இந்த விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார்.
இப்பயணத்தில் ஆறு பேர் கலந்து கொண்டனர். பயணிகள் சில நிமிடங்களுக்கு புவியீர்ப்பு விசையற்ற நிலையை அனுபவித்தனர். ப்ளூ ஆரிஜின் நிறுவனம், விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிக்கவும், புதிய சந்தையைப் பிடிக்கவும் நடத்திய மூன்றாவது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
லாரா ஷெப்பர்ட்டின் தந்தை, கடந்த 1998ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் 1961 மே 5ஆம் தேதி ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனவெரலிருந்து ஏவப்பட்ட மெர்குரி விமானத்தில் விண்வெளிக்குப் பயணித்து, அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரானார்.
லாரா ஷெப்பர்ட்டுடன், முன்னாள் என்.எஃப்.எல் நட்சத்திர வீரர் மற்றும் குட் மார்னிங் அமெரிக்காவின் நிகழ்ச்சித் தொகுப்பாளரான மைக்கெல் ஸ்ட்ராஹன்னும் இருந்தார். இவர்களோடு பணம் செலுத்தி நான்கு பேர் விண்வெளிக்குப் பயணித்தனர்.
ப்ளூ ஆரிஜின் நிறுவனம் நியூ ஷெப்பர்ட் விமானத்தில் மேற்கொண்ட விண்வெளி பயணத்தில் ஆறு இருக்கைகளும் நிரம்பியது இதுவே முதல் முறை என்பதும் ஒரு கூடுதல் சுவாரசியத் தகவல்.
அதிகப்படியான காற்று வீசியதால் இருதினங்களுக்கு பயணம் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு ப்ளூ ஆரிஜின் நிறுவனத்துக்குச் சொந்தமான டெக்ஸாஸ் ஏவுதளத்திலிருந்து நியூ ஷெப்பர்ட் விமானம் புறப்பட்டது.
கடந்த முறை பயணித்த அதே வழித்தடத்தில்தான் இந்த முறையும் பயணம் மேற்கொள்ளப்பட்டது. விமானம் டெக்ஸாஸ் பாலைவனத்தில் தரையிறங்கிய போது, பயணிகளை ஜெஃப் பெசோஸ் வரவேற்றார்.
இந்த பயணம் சுமார் 10 நிமிடங்களுக்கு நீடித்தது. நியூ ஷெப்பர்ட் விமானம் 100 கிலோமீட்டர் உயரம் வரை பயணித்தது குறிப்பிடத்தக்கது.
லாரா ஷெப்பர்ட் தன் தந்தைக்குச் சொந்தமான சில கேப்ஸ்யூல் பாகங்களையும், அவர் 1971 ஏப்ரல் 14ஆம் தேதி நிலவுக்குச் சென்றது தொடர்பான நினைவுப் பொருட்களையும் கொண்டு வந்தார்.
விண்வெளி சுற்றுலா காலநிலை மாற்ற பாதிப்பை அதிகப்படுத்துவதாக கடந்த மாதம் இளவரசர் வில்லியம்ஸ் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது.
ஸ்பேஸ் ஆரிஜினைப் போல, வெர்ஜின் கெலாக்டிக் என்கிற நிறுவனமும் விண்வெளி சுற்றுலாவுக்கென தனி விமானத்தை வடிவமைத்து சோதனைப் பயணங்களை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.