4.05 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான க்ரிப்டோகரன்சி ஒரு கம்ப்யூட்டர் விஞ்ஞானிக்கு சொந்தமானது எப்படி?

புதன், 8 டிசம்பர் 2021 (13:46 IST)
தாம் பிட்காயினை கண்டுபிடித்ததாகக் கூறும் கணினி விஞ்ஞானி ஒருவர், அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் வென்று, பல பில்லியன் டாலர் மதிப்பிலான பிட்காயினை வைத்துக் கொள்ள அனுமதி பெற்றுள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, க்ரேக் ரைட்டின் முன்னாள் வணிகக் கூட்டாளிக்கு பாதி பிட்காயினைக் கொடுக்க வேண்டும் என்று கோரிய வாதத்தை நிராகரித்துள்ளார்.

இதன் விளைவாக க்ரேக் ரைட் 1.1 மில்லியன் பிட்காயினை தானே வைத்துக் கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. இதன் மதிப்பு 54 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 4.05 லட்சம் கோடி ரூபாய்) என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கின் தீர்ப்பு க்ரேக் ரைட்டுக்கு சாதகமாக வந்தாலும், அவர் முன்னாள் வணிகக் கூட்டாளி டேவ் க்ளேமென்னின் குடும்பத்துக்கு அறிவுசார் சொத்துரிமை மீறலுக்காக, 100 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு காலமான கணினி பாதுகாப்பு நிபுணர் டேவ் க்ளேமென் மற்றும் க்ரேக் ரைட் இணைந்துதான் அப்போதிருந்த பிட்காயினை உருவாக்கியதாகவும், க்ரிப்டோகரன்சியை கண்டுபிடித்ததாகவும் டேவ் க்ளேமென்னின் குடும்பம் கூறுகிறது. அதை க்ரேக் ரைட் திருடிவிட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது டேவின் குடும்பம்.

கடந்த 2008ஆம் ஆண்டு சடோஷி நகமொடொ என்கிற புனைப்பெயரில், ஒரு வெள்ளை அறிக்கையில் க்ரிப்டோகரன்சி குறித்த கண்டுபிடிப்பு விளக்கப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல், க்ரேக் ரைட் அவர்தான் சடோஷி நகமொடோ (பிட்காயினை உருவாக்கியவர்) என கூறி வருகிறார் என்கிற போதிலும், அது சர்ச்சையான ஒன்றாகவே இருந்து வருகிறது.

டேவ் க்ளேமென் குடும்பத்தினர் தொடுத்த சிவில் வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்த பிரச்னைகளில், கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் இருந்து க்ரேக் ரைட்டை விடுவித்துள்ளார் மியாமி நீதிமன்ற நீதிபதி.

நீதிபதி அறிவுசுசார் சொத்துரிமைக்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார். டேவ் எதை உருவாக்க உதவினாரோ, அதற்கான நியாயமான பங்கை டேவ் க்ளேமென் குடும்பத்தினர் பெற உதவியுள்ளது எங்களுக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது என டேவ் க்ளேமென் தரப்பில் வாதாடிய வழக்குரைஞர்கள், ஓர் அறிக்கையில் கூறியுள்ளனர்.

இந்தத் தீர்ப்பின் மூலம் அவர்தான் பிட்காயின் க்ரிப்டோகரன்சியின் நிறுவனர் என்பது உறுதியாகியுள்ளதாகக் கூறியுள்ளார் க்ரேக் ரைட்.

"நான்தான் பிட்காயினின் நிறுவனர் என்பதை நீதிபதி கண்டுபிடித்துள்ளார், இல்லையெனில் இப்படி ஒரு தீர்ப்பை அவர் வழங்கியிருக்கமாட்டார்" என கூறினார் ரைட்.
மேலும் "இது மிக முக்கியமான நல்ல தீர்ப்பு, எனக்கு நியாயம் வழங்கப்பட்டதாக உணர்கிறேன்" எனவும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்