இலங்கையில் ஜூலை, ஆகஸ்ட் மாதம் உணவு தட்டுப்பாடு ஏற்படும் - ரணில் எச்சரிக்கை

புதன், 13 ஏப்ரல் 2022 (11:25 IST)
இன்றைய (13.04.2022) இலங்கை, இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.
 
 உலக உணவுத் தட்டுப்பாட்டுடன் இலங்கையிலும் பாரிய உணவுத் தட்டுப்பாடு  ஏற்படக் கூடும் என அந்நாட்டு முன்னாள் பிரதமரும்  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க  தெரித்திருப்பதாக  'வீரகேசரி' இணைய தளத்தில் செய்தி வெளிகியுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக கொழும்பு, காலி முகத்திடலில் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து அவர் கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர்,  "மே மாதத்துடன்  இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறும் உதவிகள் நிறைவுக்கு வரும். அதன் பின்னர் என்ன செய்யப் போகின்றனர்? 
ஜூன் மாதத்தில்  தனியார் துறைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படும்.  ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத அளவில் மக்களுக்கு வாழ முடியாத சூழல் ஏற்படும்", என்று தெரிவித்துள்ளார். 
 
தீவிரமான அரசியல் புரட்சியை ஏற்படுத்தும் இலக்கில் இளைஞர்களின் போராட்டம்  முன்னெடுக்கப்படுகின்றது என்று அவர் கூறியுள்ளார். 
 
கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க மறுத்த 11 கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 
 
இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து  அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில்  சுயேட்சியாக உள்ள  11 கூட்டணி கட்சி உறுப்பினர்கள், இடைக்கால அரசு குறித்து பேச்சுவார்த்தை நடத்த,  அதிபர்  கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க மறுத்துள்ளதாக 'டெய்லி மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது. 
 
கூட்டணி கட்சி உறுப்பினர்களுக்கும், இலங்கை அதிபருக்கும் இடையே செவ்வாய்க்கிழமையன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.  ஆனால், அவர்கள் அவரை சந்திக்க மறுத்ததால், இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இலங்கை அரசுக்கு ஆதரவாக பேரணி நடத்திய பிக்குகள்போலியான போராட்டங்கள் என்ற போர்வையில் சிங்கள பௌத்த மக்களின் நிலைப்பாட்டில் கை வைக்க வேண்டாம் என்ற தொனிப்பொருளில் செவ்வாய்க்கிழமையன்று  கொழும்பில் பெளத்த பிக்குகள் பேரணி நடத்தியதாக 'தமிழன்'  நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. பெளத்த பிக்குகளை அடிப்படையாகக் கொண்டு  கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கத்திற்கு அருகிலிருந்து  கொழும்பு கோட்டையை நோக்கி இந்த பேரணி நடைபெற்றது.  அந்நாட்டு அதிபர் மற்றும் அரசுக்கு  ஆதரவாக பிக்குகள் தலைமையிலான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது.
 
இந்திய கடனுதவியை நீடிக்க இலங்கை அரசு பேச்சு வார்த்தை
 
இந்திய கடன் உதவியை மேலும் நீட்டிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடந்துவருவதாக இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதாக 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
ஏற்கெனவே உலக வங்கியிடம் உதவி கோரப்பட்டுள்ளதாகவும், கடன்களை மறுசீரமைப்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
 
அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது எனவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
கேரளாவில்  மின்வெட்டு காரணமாக அலைபேசி வெளிச்சத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் 
கேரளாவில் கடந்த திங்கட்கிழமையன்று பெய்த கனமழை காரணமாக, எர்ணாகுளம்  பகுதியில் உள்ள மஹாராஜாஸ் கல்லூரியில் மின்வெட்டு ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து,  அங்கு தேர்வு எழுத சென்ற  இளங்கலை, முதுகலை மாணவர்கள் தங்கள் அலைபேசியில் உள்ள ஃப்ளாஷ் லைட் வெளிச்சத்தைப் பயன்படுத்தி தேர்வு எழுதியதாக 'தி நியூஸ் இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் அங்கு  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் ஒரு கையில் அலைபேசியை பிடித்துக்கொண்டு மற்றொரு கையில்,  இரண்டு மணி நேரம் தேர்வு எழுதியுள்ளனர்.  அக்கல்லூரி 77 லட்ச செலவில் வாங்கிய மின் திறனாக்கியை ஏன் பயன்படுத்தவில்லை என்று மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.  கல்லூரி அதிகாரிகள்  தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தியிருக்கலாம் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
 
ஒரே சமயத்தில் 2 முழு நேர பட்டப்படிப்பு படிக்கலாம் - யுஜிசி அனுமதி 
 
ஒரே நேரத்தில் இரண்டு முழுநேர பட்டப்படிப்புகளை மாணவர்கள் இனி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர்  ஜகதேஷ் குமார் தெரிவித்துள்ளதாக 'தினமணி' செய்தி வெளியிட்டுள்ளது. 
 
இந்த இரண்டு பட்டப் படிப்புகள்  இணைய வழியிலோ அல்லது தொலைதூர  வழியிலோ மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.  யுஜிசியின் இந்த புதிய நடைமுறையை  ஏற்பது என்பது பல்கலைக்கழகங்களின் தனிப்பட்ட விருப்பம் என்றும்,  அந்த இரண்டு பட்டப்படிப்புகளுக்குமான  தேர்வுகள் ஒரே நேரத்தில் குறுக்கிடாத வகையில் உரிய நடைமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்