சீனாவில் 'எனக்குத் தெரிந்த அனைவருக்கும் காய்ச்சல் உள்ளது'

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (10:40 IST)
சீனாவின் பல கோவிட் கட்டுப்பாடுகள் திடீரென நீக்கப்பட்டது நாடு தழுவிய தொற்றுப்பரவலை ஏற்படுத்தியுள்ளது. அதோடு சமூக ஊடகங்களில் குழப்பத்தையும் கோபத்தையும் தூண்டியுள்ளது.
 
விரைவு சோதனைக் கருவிகளுக்கு இருக்கும் கடும் பற்றாக்குறைக்கு நடுவில், ஷேஜியாங், அன்ஹூய், சோங்கிங் போன்ற பல மாகாணங்கள், லேசான அறிகுறிகள் முதல் அறிகுறிகள் இல்லாதவர்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கும் புதிய கொள்கையைச் செயல்படுத்துகின்றன.
 
ட்விட்டருக்கு இணையாக சீனாவில் செயல்படும் வெய்போவில், இந்த அறிவிப்பு தொடர்பான ஹேஷ்டேக் திங்கள்கிழமை முதல் 3.3கோடி முறை குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு அதிர்ச்சியும் ஆத்திரமும் இந்த அறிவிப்பால் ஏற்பட்டுள்ளது.
 
“கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த முன் தயாரிப்பும் இல்லை. திடீரென கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. உடல்நிலை சரியில்லை என்றாலும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறீர்கள். எங்கள் வாழ்க்கை எறும்புகளைப் போல் மதிப்பற்றதாகிவிட்டது,” என்று கூறும் ஒரு வெய்போ கருத்து, 200 லைக்குகளை பெற்றுள்ளது.
 
“பல மாதங்களுக்கு முன்பு, சோதனையில் பாசிடிவ் என வந்த பிறகு வேலைக்குச் சென்றதற்காக மக்கள் கைது செய்யப்பட்டார்கள்,” எனக் குறிப்பிட்ட ஒரு பதிவுக்கு 1,000 லைக்குகள் வந்துள்ளன.
 
வெளிநாடு சென்று சமீபத்தில் திரும்பி ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில சீனர்களும் கூட தொற்றுநோய் பரவும் வேகத்தைக் கண்டு ஆச்சர்யப்படுகிறார்கள்.
 
“கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வசிக்கும்போது எனக்கு கோவிட் இருந்ததில்லை. ஆனால், திரும்பி வந்து பல நாட்களுக்குப் பிறகு இங்கு ஏற்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்த அனைவருக்கும் காய்ச்சல் உள்ளது, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே, சமீபத்தில் நாட்டை விட்டு வெளியேறியவராக இருந்தால், மீண்டும் வர வேண்டாம்,” என்று சீனாவில் பிரபல சமூக ஊடக தளமான ஷியாவ்ஹோங்ஷூவில் ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
 
கடந்த இரண்டு வாரங்களில், தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிறகு மக்கள் எவ்வாறு அதைக் கையாளுகிறார்கள் என்பது குறித்த பதிவுகளால் சீனாவின் இணையம் நிரம்பியுள்ளது.
எந்த அறிகுறியும் இல்லாத இளம் குழந்தைகள் தங்கள் உடல்நிலை சரியில்லாத பெற்றோருக்கு உணவும் தண்ணீரும் கொண்டு செல்லும் காணொளிகள் சீன சமூக ஊடகங்களில் பரவியுள்ளன.
 
உறவினர்களுக்குத் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக ஒரே வீட்டில் இருக்கும்போதும் சமூக இடைவெளியைப் பின்பற்றும் ஆக்கப்பூர்வமான வழிகளைச் சிலர் காட்டியுள்ளார்கள்.
 
தேசிய அளவிலான மருந்து பற்றாக்குறைக்கு நடுவில், ஊடகங்களும் சமூக ஒற்றுமை உணர்வு குறித்த கதைகளை வெளிப்படுத்த முயல்கின்றன.
 
தனிநபர்கள் தங்களுக்குத் தேவையில்லாத வலி நிவாரண மருந்துகளை மூட்டையாக, தேவைப்படுபவர்களுக்கு அவற்றை வழங்குவது போன்ற எண்ணற்ற காணொளிகள் வெய்போவில் காணப்படுகின்றன.
 
கடினமாக உழைக்கும் மருத்துவப் பணியாளர்களிடம் கருணையோடு இருக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றன. மேலும் முதல்நிலை ஊழியர்களிடம் கருணை கொண்ட செய்ல்பாடுகள் நடப்பதும் எடுத்துக்காட்டப்படுகின்றன.
 
சான்றாக, செய்தி இணையதளமான தி பேப்பர், செங்டூவில் உள்ள ஓர் அரசாங்க ஆபரேட்டருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பில், அவரது தொண்டை கரகரப்பாகவும் இருமலோடு இருப்பதை முன்னிலைப்படுத்தியுள்ளது.
 
“கவலைப்படாதே, எந்தப் பிரச்னையில் இல்லை. தயவு செய்து உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்” என்று எதிர்முனையில் இருந்த பெண்ணிடம் அவர் பேசுகிறார்.
சீனாவில் உள்ள சமூக ஊடக தளங்கள், துன்பங்களை எதிர்கொண்டு சமாளித்த நேர்மறையான செய்திகளைக் கொண்ட “டிரெண்டிங்” கதைகளைப் பெருக்க முயல்கின்றன.
 
மருத்துவர்களுக்கும் செவிலியர்களும் கடுமையாகத் தொடர்ந்து உழைக்கிறார்கள் என்பதைக் குறிக்கும் #PersistentDoctorsandNursesWorkHard என்ற ஹேஷ்டேக் கடந்த 24 மணிநேரத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. மாகாண ஊடகங்கள் அவர்களுடைய முன்னணி பங்களிப்பைப் பாராட்டுகின்றன.
 
ஆனால், சுதந்திரமான சவுத் சைனா மார்னிங் போஸ்ட், கடந்த வாரத்தில் “சிறந்த ஊதியத்தையும்” சீனாவின் முதல்நிலையில் உள்ளோருக்குப் பாதுகாப்பையும் கோரி மருத்துவ மாணவர்களிடையே புதிய போராட்டங்கள் எப்படிப் பெருகியுள்ளன என்பதைப் பற்றிப் பதிவு செய்து வருகிறது.
 
அரசு ஊடகங்களில் இவை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. தற்போதைய நிலையில் அதிருப்தியைப் பிரதிபலிக்கும் போராட்டங்களின் படங்களும் காணொளிகளும் வழக்கமாக தணிக்கை செய்யப்படுகின்றன.
 
கடந்த மாதம் கடுமையான கோவிட்-19 நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் வெடித்தபோதும் இதுதான் நடந்தது.
 
இருப்பினும்கூட, சுகாதாரத் துறையின் மிகைப்படுத்த கதைகள் தெளிவாகத் தெரிகின்றன. வெளிநோயாளிகள் மையங்களுக்கு வெளியே “நீண்ட வரிசைகளும்” காய்ச்சல் கிளினிக்குகள் “கடுமையான அழுத்தத்திலும்” இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால், ஆயிரக்கணக்கான ஓய்வுபெற்ற மருத்துவ ஊழியர்கள் மீண்டும் முதல்நிலையில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
 
பல முக்கிய நகரங்களில் உள்ல ஆவணங்கள் அவசரகால சேவைகளுக்கான அழைப்புகளில் எண்ணிக்கை “அதிகரித்து வருவதை” ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், முற்றிலும் தேவைப்பட்டாலொழிய அழைக்க வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தியுள்ளது.
 
மருத்துவப் பணியாளர்கள் தங்கள் மேசைகளில் உறங்கும் எண்ணற்ற படங்களை வெய்போவில் காணலாம். சோர்வடைந்த தொழிலாளர்கள் ஐவி சொட்டு மருந்துகளைப் பெறுவதைக் காட்டும் படங்களும் பரப்பப்பட்டன.
தொற்றுநோயாளிகள் அதிகமுள்ள மாகாணமான குவாங்டாங்கில் உள்ள காய்ச்சல் மருத்துவமனையில் சிகிச்சை தனது குழந்தைக்கு சிகிச்சை அளிக்குமாறு ஒருவர் கெஞ்சும் வீடியோவை ஒரு கோடிக்கும் அதிகமான சமூக ஊடக பயனர்கள் கடந்த 24 மணிநேரத்தில் பார்த்துள்ளனர்.
 
காணொளியில், “நானும் என் முழங்காலில் தான் இருக்கிறேன். நிலைமை இப்படித்தான் உள்ளது. வரிசைகள் 6-8 மணிநேர நீளத்திற்கு உள்ளன. நீங்கள் மட்டுமில்லை, குழந்தைகள், வயதானவர்கள் என்று அனைவரும் காத்திருக்கிறார்கள்,” என்று மருத்துவர் பதிலளிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்