சீனாவில் தடை இருந்தாலும் பல லட்சம் பேர் ரகசியமாக பின்தொடரும் 'ஃபலூன் காங்' - ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (21:43 IST)
அனைவரும் எங்கிருந்து பூமிக்கு வந்தார்களோ, அந்த இடத்துக்கே செல்லப் பயிற்சி அளிப்பதாக ஃபலூன் காங்கைப் பின்பற்றுபவர்கள் கூறுகின்றனர்.
 
ஒரு குடையின் கீழ் விரிக்கப்பட்ட பிளாஸ்டிக் தாளில் பெண் ஒருவர் வெறுங்காலுடன் நிற்கிறார். பக்தி இசை, ஆன்மீக சொற்பொழிவுகள் ஒலிபெருக்கிகளில் இருந்து ஒலித்துக்கொண்டு இருக்கும் போது, அந்தப் பெண் தியானத்தில் ஆழ்ந்தார்.
 
சீனா அளிக்கும் சிகிச்சைக்கு எதிராகப் போராடும் ஃபாலுன் காங் பிரிவின் ஒரே எதிர்ப்பாளர் அவர் தான். அவர் முன்னால் நிற்கும் கட்டிடம் ஹாங்காங்கில் உள்ள சீன அரசு அலுவலகம்.
 
முன்னதாக, இங்கு எப்போதும் ஏராளமானோர் கூடி போராட்டம் நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் 2020 ஆம் ஆண்டில், சீனா ஹாங்காங்கில் ஒரு தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது வழக்குத் தொடர அந்தச் சட்டம் அரசுக்கு அனுமதியளித்தது. எனவே, ஃபலுன் காங் உறுப்பினர்கள் இங்கு எதிர்ப்பு தெரிவிக்கத் துணிவதில்லை.
 
உண்மையில், ஃபலுன் காங் உறுப்பினர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் நபர்களைக் கண்டுபிடிக்க நீங்கள் சீனாவுக்கு வெளியே செல்ல வேண்டும்.
 
ஃபலுன் காங் வழிபாட்டு முறை என்ன?
தைவானின் தலைநகரான தைபேயின் புறநகரில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் தளத்தில் ஃபலுன் காங் பயிற்சியாளர்கள் கால்மேல் கால் போட்டு அமர்ந்துள்ளனர்.
 
இந்தப் பிரிவை நிறுவிய லீ ஹாங் ஷியின் போதனைகளை அவர்கள் உரக்கப் பாடுகிறார்கள். அவர்களது குருவின் பிரேம் செய்யப்பட்ட படம் சுவரில் தொங்குகிறது. அவரது சக்தி வாய்ந்த சொற்கள் அறையில் எதிரொலிக்கின்றன.
 
தனி நாடாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட தைவான் தீவில், கைது செய்யப்படும் நிலை ஆபத்து எதுவும் இன்றி இந்த மதப் பிரிவினர் தங்கள் நம்பிக்கைகளைப் பின்பற்றலாம்.
 
ஃபலூன் காங் இயக்கத்தைப் பின்பற்றுபவர்கள் பல நாடுகளில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
 
ஆனால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இந்த ஆன்மீகப் பிரிவைத் தடை செய்து, இது ஒரு “தீய இயக்கம்'' என்று குறிப்பிட்டுள்ளது. இது அறிவிக்கப்பட்டு இருபதாண்டுகள் ஆகின்றன.
 
அதன் உறுப்பினர்கள் சீனாவில் துன்புறுத்தலை எதிர்கொள்வதாக ஃபலுன் காங் குற்றம் சாட்டியுள்ளது. அவர்கள் கடுமையாக வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பதுடன் அவர்களின் உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யப்படுகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
 
ஆனால் சீன அரசு நிர்வாகம் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது, இருப்பினும் ஒரு சுதந்திரமான சர்வதேச நீதிமன்றம் அவை உண்மை என்று கண்டறிந்தது.
 
டிசம்பர் 2018 இல் வெளியான ஒரு இடைக்கால தீர்ப்பு, "சிறையில் அடைக்கப்படும் கைதிகளின் உடல் உறுப்புகளை சட்டவிரோதமாக அபகரிக்கும் வழக்கம் சீனாவில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது என்பதுடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாக உள்ளது," எனத்தெரிவித்தது.
 
ஃபலூன் காங் சீன அரசாங்கத்திற்கு மிகப்பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பாகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்டுள்ளது எனக்கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அது என்ன மாதிரியான வழிபாட்டு முறை என்பதைக் கண்டுபிடிப்போம்.
 
தைவானில் உள்ள ஃபலூன் காங் மாஸ்டர் லியாவோ இது குறித்துப் பேசுகையில், "இது ஒரு ஆன்மீக இயக்கம். இது உடற்பயிற்சி மற்றும் தியானம் இரண்டையும் உள்ளடக்கியது," என்றார்.
 
"நாங்கள் அவரை ஒரு கடவுளாகக் கருதுகிறோம்," என்று இப்பிரிவின் குருவான லி ஹாங் ஷியைப் பற்றி ஓய்வில் இருக்கும் தொழிலதிபரான வாங் கூறுகிறார். “அவர் ஏசு அல்லது முகமது நபி போன்றவர். அவருக்கு நிறைய அறிவு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்," என்கிறார் அவர்.
 
வாங் மற்றும் அவரது மனைவி சென் ஆகியோர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஃபலூன் காங்கைப் பின்பற்றி வருகின்றனர். இந்த இயக்கம் பற்றிப் பேசிய சென், "ஃபாலுன் காங் ஒரு அதிசய இயக்கம்," என்றார்.
 
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு ஹெபடைடிஸ் பி இருப்பது கண்டறியப்பட்டது. ஃபலூன் காங்கின் பிரார்த்தனை அமர்வில் பங்கேற்ற பிறகு அவருக்குக் கிடைத்த விமோசனம் மருத்துவத்தில் கூட கிடைத்திருக்காது என அவர் கூறினார்.
 
ஃபலூன் காங் அளிக்கும் பயிற்சிகள் அரிய நோய்களையும் குணப்படுத்துவதாக அந்த இயக்கதைதைப் பின்பற்றுபவர்கள் நம்புகின்றனர்.
 
தொடர்ந்து பேசிய சென், "எனக்கு உடல் முழுவதும் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் ஏற்பட்டன. ஆனால் அந்தத் தடிப்புகள் மறைந்த பின் புண்கள் ஏற்பட்டன," என்றார்.
 
மேலும், "மாஸ்டர் லி என் உடலை சுத்தப்படுத்தியதாக உணர்கிறேன். எனது நோயைக் குணப்படுத்தியதற்காக மாஸ்டர் லிக்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவராக இருக்கிறேன். பெரும்பாலான நோய்வாய்ப்பட்டவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட, ஃபலூன் காங்கால் குணப்படுத்தப்பட்டுள்ளனர்," என்றார்.
 
இருப்பினும், ஃபலூன் காங்கின் நோய் குணமானது குறித்துத் தெரிவித்த தகவல்களுக்கு அதிகாரப்பூர்வமான மருத்துவ ஆதாரம் எதுவும் இல்லை.
 
மேலும் பேசிய சென், "ஃபலூன் காங்கில் இணைந்து பயிற்சி செய்பவர்கள் நோய்வாய்ப்படுவதில்லை. நீங்கள் நோய்வாய்ப்பட்டால், அது உங்கள் கர்மாவின் விளைவு என்று மாஸ்டர் லீ எங்களிடம் கூறினார். இதற்கு மருந்து சாப்பிடத் தேவையில்லை," என்றார்.
 
இந்த போதனையே ஃபலூன் காங்கை ஆபத்தானதாக ஆக்குகிறது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி கூறுகிறது.
 
தங்கள் இயக்கத்தை இழிவுபடுத்துவதற்காக அரசாங்கம் ஒரு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதாக ஃபலூன் காங் பிரிவினர் கூறுகின்றனர்.
 
ஆனால் இந்த இயக்கத்தின் நிறுவனர் லி ஹாங் ஷியையும், அவரது நோய் தீர்க்கும் போதனைகளையும் விமர்சிப்பவர்களும் உள்ளனர்.
 
 
இருபதாண்டுகளுக்கு முன்பே சீனா ஃபலூன் காங் இயக்கத்தைத் தடை செய்தது.
 
இந்த வழிபாட்டு முறையின் முன்னாள் உறுப்பினரான சாம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பிபிசியிடம் பேசியபோது, "அவர்கள் தங்களை குணப்படுத்துபவர்களாக சித்தரிக்கிறார்கள். மக்கள் நம்பிக்கையைப் பெறுவதற்காக அவர்கள் நோயை வாழ்க்கை மற்றும் இறப்புக்கு இடையே வரும் சோதனை என்று பேசுகின்றனர்,” என்றார்.
 
“ஒருவன் தன் மனத்தால் குணமாகும்போது, ​​அவன் அற்புதமாக குணமடைந்துவிட்டான் என்று சொல்லப்படுகிறது, நோயாளியின் நம்பிக்கையும் வலுவடைகிறது. மக்கள் இறக்கும் போது, ​​அவர்களின் நம்பிக்கை அதிகரித்து, இந்த வழிபாட்டு முறைக்கு அடிமையாகிறார்கள்."
 
மேலும், "அங்கு சென்று சிகிச்சை பலனின்றி இறந்த பலரை எனக்குத் தெரியும். குணமடைந்தவர்கள் அல்லது உயிருடன் இருப்பவர்கள் ஃபலூன் காங்கின் போதனைகளால் குணமடையவில்லை அல்லது உயிருடன் இருக்கவில்லை. மாறாக அவர்களால் தான்," என்று விளக்கினார்.
 
1992 ஆம் ஆண்டு வடகிழக்கு சீனாவில் ஃபலூன் காங் பரவத் தொடங்கியபோது, ​​சீன அதிகாரிகள் அதை பொது சுகாதாரத்திற்கு பயனுள்ள ஒரு வழியாக உணர்ந்தனர்.
 
இதற்குப் பிறகு, கிகோங் குறித்த ஆர்வம் நாட்டில் எழுந்தது. இது உடல் இயக்கங்களையும் சுவாசத்தையும் கட்டுப்படுத்தும் ஒரு தோரணையாகும்.
 
1990 களின் பிற்பகுதியில், கம்யூனிஸ்ட் கட்சியை விட அதிகமான பின்தொடர்பவர்கள் இருப்பதாக ஃபலுன் காங் அமைப்பு கூறியது. 1999 இல், அதன் நிறுவனர் உலகம் முழுவதும் ஒரு கோடி பின்தொடர்பவர்களைக் கொண்டிருப்பார் என்று மதிப்பிட்டார்.
 
அமெரிக்க அரசு சாரா நிறுவனமான ஃப்ரீடம் ஹவுஸ் தெரிவிக்கும் தகவலின் படி, சீனாவில் 20 முதல் 40 லட்சம் மக்கள் அவரை ரகசியமாக பின்தொடர்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.
 
 
சீன அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஃபலூன் காங் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அரசாங்கத்தின் தலையீட்டிற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர் என்பதுடன் மதப் பிரிவின் மீது அடக்குமுறையை ஏவிவிட்டதாகக் குற்றம் சாட்டினர். அதைத் தொடர்ந்து போராட்டக் காரர்கள் ஒடுக்கப்பட்டனர்.
 
இந்த போராட்டம் சமூகத்திற்கு ஆபத்தானது என்று கம்யூனிஸ்ட் கட்சி கூறியது.
 
ஃபலூன் காங்கின் புகழ் மற்றும் செல்வாக்கால் ஆட்சியாளர்கள் பயந்ததாகவும் அதனால் இந்த ஆன்மீகக் குழுவை அகற்றத் தீர்மானித்ததாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
 
சீனாவில் தொடங்கிய ஃபலூன் காங் இன்று உலகம் முழுவதும் 70 நாடுகளில் பின்பற்றுபவர்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் அதன் போதனைகள் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அது எங்கிருந்து வந்தது என்பதற்கான சரியான ஆதாரம் இல்லை.
 
இது குறித்துப் பேசிய வாங்,"கம்யூனிஸ்ட் கட்சி மோசமானது என்று நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் ஃபலூன் காங் பிரிவினரின் குரலை அவர்கள் அடக்குகிறார்கள்."
 
மருத்துவ ரீதியான எந்த மருந்தையும் சாப்பிட வேண்டாம் என்று இந்த ஆன்மீகக் குழுவினர் கூறுவதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்த பிரிவினர் மறுத்துள்ளனர்.
 
உள்ளூர் குருவான லியாவோ இது குறித்துப் பேசியபோது, "எங்கள் இயக்கத்தில், வெவ்வேறு நபர்களுக்கு நோய்க்கான வெவ்வேறு காரணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. மருத்துவமனைக்குச் செல்லவே வேண்டாம் என்று நாங்கள் யாரிடமும் சொல்லவில்லை," என்கிறார்.
 
தொடர்ந்து பேசிய அவர், "நோய் என்பது நமது கெட்ட கர்மாவின் விளைவு. கெட்ட கர்மா என்பது மக்களின் மோசமான நடத்தையால் ஏற்படுவது. அதாவது, ஒழுக்க ரீதியாக நீங்கள் செய்யக்கூடாத ஒன்றைச் செய்யும் போது கெட்ட கர்மா ஏற்படுகிறது," என்றார்.
 
மேலும், "மக்கள் இறக்கிறார்கள். நீங்கள் ஒரு நாட்டின் மன்னராக இருந்தாலும் சரி, அதிகாரம் மிக்கவராக இருந்தாலும் சரி, எல்லோரும் நோய்வாய்ப்பட்டுத்தான் ஆகவேண்டும். நோய் என்பது கர்மாவின் ஒரு வடிவம். பூமிக்கு வந்த பின்னர் தான் உங்களுக்கு நோய் தாக்கம் ஏற்படுமா என்பது தீர்மானம் செய்யப்படுகிறது. எனவே மருந்து உட்கொள்வதில் எந்தப் பயனும் இல்லை," என்றார் அவர்.
 
சாம் (பெயர் மாற்றப்பட்டது) என்பவர் இந்த பிரச்னை குறித்துப் பேசியபோது, "இந்த சர்ச்சை இரண்டு நம்ப முடியாத அமைப்புகளுக்கு இடையே உள்ளது. ஃபலூன் காங் மீதான கம்யூனிஸ்ட் கட்சியின் விமர்சனம் ஓரளவுக்கு உண்மையாகவே கருதப்படுகிறது. ஏனென்றால் அவர்கள் செய்யத் தொடங்கிய விஷயங்களை நம்புவது கடினம்," என்றார்.
 
மேலும், "ஃபலூன் காங் தன்னை ஆரோக்கிய உணர்வுள்ள மற்றும் தங்கள் சொந்த காரியத்தைச் செய்ய விரும்பும் நபர்களின் குழு என்று அழைத்துக் கொள்கிறது. அவர்கள் ஆன்மீக முன்னேற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறார்கள். ஆனால் உண்மையில் ஃபலூன் காங் அப்படிச் செயல்படவில்லை.இது மிகவும் இறுக்கமான கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பாகும்," என விளக்கினார்.
 
அமெரிக்காவில் இருப்பதாக நம்பப்படும் இந்த இயக்கத்தின் நிறுவனர் ஹாங் ஜியையும் அவர் விமர்சிக்கிறார். சாம் மட்டும் விமர்சிக்கிறார் என்பது அல்ல உண்மை. கற்றறிந்த பலர் தங்கள் பிரபலமான அறிவியல் புனைகதைகள் திருடப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
 
ஃபலூன் காங்கின் போதனைகள் பூமியில் வேற்று கிரக வாழ்க்கையைப் பற்றி பேசுகின்றன. அவர்கள் மீண்டும் வெளி உலகிற்கு செல்ல விரும்புகிறார்கள்.
 
ஃபலூன் காங்கைப் பின்பற்றுபவரும் ஆசிரியருமான லியாவோ, "எல்லோரும் பூமியில் எப்போதும் வாழ முடியாது," என்கிறார்.
 
"நாங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து வருகிறோம் என்று நம்புகிறோம். மேலும் இங்கு வந்ததன் நோக்கம் நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே திரும்பிச் செல்ல வேண்டும் என்பதற்காக பயிற்சி செய்வது தான் ஃபலூன் காங்கின் பணியாக உள்ளது."

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்