தலித்திய அறிஞர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு பிணை - எல்கர் பரிஷத் வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கியது

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (15:50 IST)
பீமா கொரேகான் - எல்கர் பரிஷத் வழக்கில் நீண்டகாலமாக சிறையில் இருந்துவந்த முன்னாள் ஐஐடி பேராசிரியரும் தலித்திய அறிஞருமான ஆனந்த் டெல்டும்டேவுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது பம்பாய் உயர் நீதிமன்றம்.

அவருக்கு எதிரான வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13 (சட்ட விரோத செயல்களுக்கான தண்டனை), பிரிவு 16 (பயங்கரவாத செயல்களுக்கு தண்டனை), பிரிவு 18 (சதிச் செயல்களுக்கு தண்டனை) ஆகியவை இந்த வழக்கில் பொருந்தும் என்பதற்கு பூர்வாங்க ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

மகாராஷ்டிராவில் 2017 டிசம்பர் 31 அன்று நடந்த எல்கர் பரிஷத் விழாவில் ஆனந்த் டெல்டும்டே பேசிய கருத்துகள், பீமா கொரேகான் வன்முறைக்கு வித்திட்டதாக கூறும் புனே போலீஸ் 2019 பிப்ரவரியில் அவரை கைது செய்தது.

ஆனந்த் டெல்டும்டே யார்?

தலித் இயக்கங்களுடன் தொடர்புடைய முன்னணி அறிவுஜீவி ஆனந்த் டெல்டும்டே. மகாராஷ்டிராவில் யவட்மால் மாவட்டம் ரஜூர் கிராமத்தில் பிறந்தவர். நாக்பூரில் உள்ள விஸ்வேரய்யா தேசிய தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் பொறியியல் படித்தவர்.

சில இடங்களில் பணியாற்றிய பிறகு அவர், ஆமதாபாத் ஐ.ஐ.டி.யில் சேர்ந்தார். அங்கு பல தலைப்புகளில் அவர் ஆராய்ச்சி மேற்கொண்டார். கார்ப்பரேட் துறையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட்டில் செயல் தலைவராகவும், பெட்ரோநெட் இந்தியாவின் நிர்வாக இயக்குநராகவும் இருந்துள்ளார்.

காரக்பூர் ஐ.ஐ.டி.யில் கல்வி கற்பித்துள்ளார். இப்போது கோவா மேலாண்மைக் கல்வி நிலையத்தில் பணியாற்றுகிறார். இப்போது வரை அவர் 26 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

பல செய்தித்தாள்கள் மற்றும் சஞ்சிகைகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். பெருநிறுவனங்கள் தவிர, சமூக இயக்கங்களிலும் அவர் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார். வகுப்புவாரி பகுப்பாய்வு மற்றும் பொதுக் கொள்கையில் நிபுணராகவும் அவர் கருதப்படுகிறார். ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் கமிட்டியின் (சி.பி.டி.ஆர்.) , கல்விக்கான உரிமை குறித்த அகில இந்திய அமைப்பு ஆகிய அமைப்புகளின் சார்பில் சிவில் உரிமைகளுக்காக செயல்படுகிறவர் அவர்.

பீமா-கொரேகான் வழக்கு என்றால் என்ன?

புனே அருகே பீமா-கொரேகானில் 2018 ஜனவரி 1 ஆம் தேதி வன்முறை நிகழ்ந்தது. அன்றையதினம் லட்சக்கணக்கான தலித்துகள் அங்கு கூடினர். அந்த வன்முறை நாடு முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த வன்முறைக்கு முந்தைய நாள், 2017 டிசம்பர் 31 ஆம் தேதி, புனேவில் எல்கார் பரிஷத் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் ஆற்றிய உரைகள் காரணமாகத்தான், மறுநாள் நடந்த வன்முறை தூண்டப்பட்டது என்று கூறி ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் புனே காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

எல்கார் பரிஷத் நிகழ்ச்சியை நடத்தியதில் மாவோயிஸ்ட்டுகள் பின்னணி உள்ளது என்ற சந்தேகத்தில், இந்த செயற்பாட்டாளர்களுக்கு, அந்த மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்பு இருக்கும் என்று கருதி, நாடு முழுக்க இடதுசாரி ஆதரவு செயற்பாட்டாளர்கள் பலரை புனே காவல் துறை கைது செய்தது.

அதன் பிறகு, குற்றச்சாட்டுக்கு ஆளான செயற்பாட்டாளர்கள் சட்டப் போராட்டத்தைத் தொடங்கினர். ஆனந்த் டெல்டும்டே மற்றும் கௌதம் நவலாகா ஆகியோர் உச்ச நீதிமன்றம் வரை சென்றனர். அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், மூன்று வார காலத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்