சிஎஸ்கே அதிரடி வெற்றி: கெய்க்வாட்டின் ஆட்டம், தோனி தலைமைக்கு குவியும் பாராட்டு!

Webdunia
திங்கள், 2 மே 2022 (09:56 IST)
(இன்றைய (மே 2) நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)
 
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 99 ரன்கள் குவித்தார் என 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
சென்னை, ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் 46-வது லீக் ஆட்டம் புனேவிலுள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று இரவு 7:30 மணிக்கு நடைபெற்றது.
 
டாஸை வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். முதல் 8 போட்டிகள் வரை ரவீந்திர ஜடேஜா தலைமையில் களமிறங்கிய சென்னை அணி, நேற்றைய போட்டியில் எம்.எஸ். தோனி தலைமையில் விளையாடியது.
 
சென்னை அணி நிர்ணயித்த 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.
 
சென்னை அணியின் பேட்டிங்கின்போது தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ், டெவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர். முதல் 6 ஓவர்கள் வரை நிதானமாக விளையாடிய ருதுராஜ் அதன் பின்னர் வேகம் எடுத்தார். பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டார்.
 
சிறப்பாக ஆடி சதத்தை நெருங்கும்வேளையில் ருதுராஜ் ஆட்டமிழந்தார். அவர் 57 பந்துகளில் 99 ரன்கள் குவித்து வீழ்ந்தார். இதில் தலா 6 பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடங்கும்.
 
முதல் விக்கெட்டுக்கு ருதுராஜ்-கான்வே ஜோடி 182 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் போட்டிகளில் எந்தவொரு விக்கெட்டுக்கும் சென்னை அணி சார்பில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். இதற்கு முன் 2020-ஆம் ஆண்டு சென்னை வீரர்கள் ஷேன் வாட்சன் - ஃபா டூ பிளெசிஸ் ஜோடி 181 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.
 
மறுமுனையில் விளையாடிய கான்வே 55 பந்துகளில் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் தோனி 7 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
 
ஹைதராபாத் அணிசார்பில் அபிஷேக் சர்மா 39, எய்டன் மார்கிரம் 17,கேப்டன் கேன் வில்லியம்சன் 47, சஷாங்க் 15, வாஷிங்டன் சுந்தர் 2 ரன்கள் எடுத்தனர். நிக்கோலஸ் பூரன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி தரப்பில் முகேஷ் சவுத்ரி 4, பிரட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர் என, 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.
 
இதனிடையே, கெய்க்வாட்டின் அதிரடி ஆட்டம், தோனியின் தலைமைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்துவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்