தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி: சிறுவர்களுக்கு முதல் டோஸ், முதியோருக்கு 3ஆவது டோஸ் எப்போது?

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (13:17 IST)
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தமிழ்நாட்டில் 18 வயதுக்கு உட்பட்ட 33 லட்சம் சிறுவர்களுக்கு பள்ளிகளுக்கே நேரடியாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.

தமிழ்நாட்டில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 33 லட்சத்து 20 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி ஜனவரி 3-ஆம் தேதியே தமிழ்நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கும்.
அதேபோல், தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு கோடியே நான்கு லட்சம் பேருக்கும், முன்கள பணியாளர்கள் 9 லட்சத்து 78 ஆயிரம் பேருக்கும் ஜனவரி 10-ஆம் தேதி முதல் 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி செலுத்தப்படும்.

15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பள்ளிகளுக்கே நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகாம்கள் அமைத்தும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் பாஜக நபர் யூடியூப் சேனல் அலுவலகம் சூறை

தெலங்கானா மாநில நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.டி.ராமராவின் மகனை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து வெளியிட்டதற்காக பாஜக நிர்வாகியின் யூடியூப் சேனல் அலுவலகம் வெள்ளிக்கிழமை சூறையாடப்பட்டது என்கிறது தினமணி செய்தி.

சமூக வலைதளத்தில் 'தீன்மார் மல்லண்ணா' என்று பரவலாக அறியப்படும் சிந்தபண்டு நவீன்குமார் என்பவர் அண்மையில் பாஜகவில் இணைந்தார். இவர் சமூக வலைதளத்தில் தெலங்கானா அமைச்சா் கே.டி.ராமராவின் மகனைக் குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் கருத்து பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவரது யூடியூப் சேனல் அலுவலகத்தை தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தொண்டர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாக்கி சேதப்படுத்தினர். இந்தக் காட்சி சமூகவலைதளத்தில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நவீன்குமார் போலீசில் புகார் அளித்திருப்பதாகவும் இதன் மீது விசாரணை நடத்தி வருவதாகவும் மஜ்கிரி உதவி போலீஸ் ஆணையர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார் என்கிறது அந்தச் செய்தி.

மின் கட்டணங்களுக்கான ஜிஎஸ்டி - ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு

மின் கட்டணங்களுக்கான ஜிஎஸ்டி வசூலிப்பை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

"எதிர்க்கட்சித் தலைவராக மு.க. ஸ்டாலின் இருந்தபோது, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்து பல்வேறு விமர்சனங்களை தெரிவித்துவிட்டு, முதல்வரான பிறகு அதிமுக ஆட்சியில் ஜிஎஸ்டி வசூலிக்காதவற்றுக்கு எல்லாம் வரி வசூலிக்க உத்தரவிட்டு வருவது திமுகவின் இரட்டை நிலைப்பாட்டுக்கு உதாரணமாக உள்ளது," என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்