'தலைமுடி' பற்றி பேசியதால் எழுந்த சர்ச்சை - மன்னிப்பு கேட்ட மம்மூட்டி

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (14:29 IST)
நிவின் பாலி, நஸ்ரியா நடித்த ‘ஓம் சாந்தி ஒஷானா’ படத்தின் மூலம் இயக்குநராக கவனம் ஈர்த்தவர் ஜூட் ஆண்டனி. இவர் தற்போது ‘2018’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
 
2018 கேரள வெள்ளத்தை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சூரரைப் போற்று புகழ் அபர்ணா பாலமுரளி, டொவினோ தாமஸ், ஆசிஃப் அலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் மம்மூட்டி பேசிய கருத்துதான் தற்போதைய பேசுபொருளாகியுள்ளது.
 
என்ன பேசினார் மம்மூட்டி?
2018 திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியபோது, “டீசர் சிறப்பாக உள்ளது. இயக்குநர் ஜூட் ஆண்டனி தலையில் முடி குறைவாக இருந்தாலும் அவருக்கு அதிகமாக புத்தி உள்ளது ” எனப் பேசினார். இதைக் கேட்டு, அங்கிருந்தவர்கள் கைதட்டிச் சிரித்தனர்.
 
மம்மூட்டியின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் சர்ச்சையாகி உருவ கேலி தொடர்பான விவாதத்தைக் கிளப்பியது. தான் பேசிய கருத்து சர்ச்சையானதைத் தொடர்ந்து முகநூல் பக்கத்தில் மம்மூட்டி வருத்தம் தெரிவித்துள்ளார்.
 
“ஜூட் ஆண்டனியை பாராட்டிப் பேசிய உற்சாகத்தில் எனது வார்த்தைகள் சிலரை அதிருப்தியடையச் செய்ததற்கு வருந்துகிறேன். இதுபோன்று இனி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். நினைவூட்டிய அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
Facebook பதிவின் முடிவு, 1
உருவ கேலிக்காக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்த அதே வேளையில், வெளிப்படையாக பிரபல நடிகர் ஒருவர் மன்னிப்பு கேட்டது வரவேற்பையும் பெற்றுள்ளது.
 
இதில் சம்மந்தப்பட்ட இயக்குநர் ஜூட் ஆண்டனி, மம்மூட்டியின் பதிவிற்கு கமென்ட் செய்துள்ளார். அதில், “நீங்கள் சொன்ன வார்த்தைகளை நான் பாராட்டாக எடுத்துக்கொண்டேன். மன்னித்து விடுங்கள் மம்மூக்கா, எனது அழகான தலைக்காக நான் வருந்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
‘முடி இல்லாதது பற்றிய கவலை இல்லை’
 
இதுதவிர, மம்மூட்டி பேசியதைத் தவறாக சித்தரிக்க வேண்டாம் என்றும் இயக்குநர் ஜூட் ஆண்டனி தனது முகநூலில் கருத்து பதிவிட்டுள்ளார். “மம்மூக்கா எனக்கு முடி இல்லாதது குறித்துப் பேசியதை உருவ கேலி என்று சிலர் குறிப்பிடுகின்றனர். எனக்கு தலைமுடி இல்லாதது குறித்து எனக்கோ என் குடும்பத்திற்கோ எந்தவித கவலையும் இல்லை.
 
என் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள் பெங்களூரு மாநகராட்சியின் தண்ணீர் மற்றும் பல்வேறு ஷாம்பு நிறுவனங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். என் முடி உதிர்வுக்கு அவர்களே காரணம். நான் மிகுந்த மரியாதை கொண்டுள்ள மம்மூக்கா பேசிய வார்த்தைகளை தயவு செய்து திரித்துப் பரப்பாதீர்கள்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
 
தமிழ் சினிமாவும் உருவ கேலியும்
அண்டை மாநிலமான கேரளாவில் நடந்த இந்தச் சம்பவம் தமிழ் ஊடகங்களிலும் செய்திகளாக வெளி வந்துள்ளன. அதே நேரத்தில், தமிழ் சினிமாவிலும் திரைப்பட நிகழ்ச்சிகளிலும் உருவ கேலி சகஜமான ஒன்றாக மாறியுள்ளது.
 
தமிழ் நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமனி, சந்தானம் உள்ளிட்டோர் உருவ கேலி செய்ததற்காக விமர்சிக்கப்பட்டுள்ளனர். அனபெல் சேதுபதி திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவை ஒரு குழந்தை பாத்திரம் கேலி செய்தது, அட்லி இயக்கிய பிகில் திரைப்படத்தில், பாண்டியம்மா கதாபாத்திரத்தை விஜய் உருவ கேலி செய்தது உள்ளிட்ட பல நிகழ்வுகள் சர்ச்சையாகியுள்ளன.
 
இதுதவிர, அண்மையில் பெண் திரைப்படக் கலைஞர் திவ்ய பாரதி தமது இன்ஸ்டாகிராமில் உருவ கேலி குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
 
“என் உடல் தோற்றத்தால் கல்லூரி நாட்களில் பல கேலி கிண்டல்களுக்கு ஆளாகியுள்ளேன். வாத்து போல நடப்பதாகவும் எலும்புக்கூடு போல் இருப்பதாகவும் பலர் விமர்சித்துள்ளனர். இதுவே என் உடலை வெறுப்பதற்குக் காரணமாக அமைந்தது.
 
சில நேரங்களில் மற்றவர்கள் முன்பு நடந்து செல்ல பயந்திருக்கிறேன். நான் மாடலிங் செய்யத் தொடங்கியதில் இருந்து எனது உடலமைப்பு குறித்து நேர்மறையான கருத்துகளை கேட்கத் தொடங்கினேன்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்