பருவநிலை மாற்றம்- நரேந்திர மோதி உறுதி: '2070-இல் இந்தியா பூஜ்ய உமிழ்வு இலக்கை அடையும்'

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (00:17 IST)
பருவநிலை மாற்றத்துக்கு கூட்டு முயற்சி மூலமே தீர்வு காண முடியும் என்று இந்தியப் பிரதமர் மோதி கூறினார். 2070-இல் இந்தியா பூஜ்ய உமிழ்வு இலக்கை அடையும் என்றும் அவர் அறிவித்தார்.
 
இது உலக அளவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் 20 ஆண்டுகள் தாமதமாகும்.
 
கார்பன் உமிழ்வு தொடர்பான உறுதியை இந்தியா தொடர்ந்து பின்பற்றி வந்திருப்பதாகவும் மோதி கூறினார். பருவநிலை மாற்றத்தில் வாழ்வியல் முறைகளும் முக்கிய அம்சமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
 
நரேந்திர மோதியின் 5 வாக்குறுதிகள்
1. 2070-இல் இந்தியா பூஜ்ய உமிழ்வு இலக்கை அடையும் என்று உறுதியளிக்கிறோம்.
 
2. 2030-ஆம் ஆண்டில் புதுப்பிக்க எரிசக்தித் திறனை 500 கிகாவாட்டாக அதிகரிக்க இந்தியா உறுதியளிக்கிறது.
 
3. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுக்குத் தேவைப்படும் எரிசக்தித் தேவையில் 50 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறப்படும்.
 
4. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது கார்பன் உமிழ்வில் 1 பில்லியன் டன் அளவைக் குறைக்கும்.
 
5. 2030-ஆம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் கார்பனின் சார்பை 45 சதவிகிதம் குறைப்போம்.
 
ஆபத்தில் சென்னை; காலநிலை மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் என்ன?
பருவநிலை மாற்றம்: பேரழிவுக்கு காரணம் மனிதர்கள் என்பதற்கு ஆதாரம் என்ன?
மோதி உரையின் பிற முக்கிய அம்சங்கள்
 
1. பருவநிலை மாற்றத்துக்கு கூட்டு முயற்சி மூலமே தீர்வு காண முடியும்
 
2. கார்பன் உமிழ்வு தொடர்பான உறுதியை இந்தியா தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறது.
 
3. வாழ்வியல் மாற்றங்கள் பருவநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணியாக இருக்கிறது. அதனால் சூழலுக்குத் தக்க வாழ்வியல் என்ற இயக்கத்தை நாம் தொடங்க வேண்டும்.
 
4. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதில் இந்தியா 4-ஆவது இடத்தில் இருக்கிறது
 
முன்னதாக மற்றொரு அமர்வில் பேசி மோதி இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக இருப்பதாக கூறினார்.
 
பிரிட்டனின் கிளாஸ்கோவில் நடைபெறும் பருவநிலை மாநாட்டில் பங்கேற்று அவர் பேசினார். அவர் மூன்று முக்கிய அம்சங்களை வலியுறுத்தினார்.
 
சூழலுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்ளுதல்
 
நம்முடைய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் சூழ்நிலைக்கு தக்கபடி இயைந்து திட்டமிடும் பண்பை முக்கிய அம்சமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தினார்.
 
பருவநிலை மாற்றம் தொடர்பான விவாதங்களில் இந்த அம்சத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறிய மோதி, இது பருவநிலை மாற்றத்தால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் வளரும் நாடுகளுக்கு செய்யப்பட்டிருக்கும் அநீதி என்று கூறினார்.
 
இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் பருவநிலை மாற்றம் விவசாயத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் மோதி குறிப்பிட்டார். அடிக்கடி ஏற்படும் புயல், வெள்ளம், மழை காரணமாக பயிரிடும் முறைகள் மாறிவிட்டதாகவும் அவர் கூறினார்.
 
குடிநீர் ஆதாரங்கள் முதல் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலான வீட்டுவசதி வரை அனைத்தும் பருவநிலை மாற்றத்துக்கு தாக்குப்பிடிக்கக் கூடியவையாக மாற்றப்பட வேண்டும் என்றும் மோதி வலியுறுத்தினார்.
 
 
பள்ளிக்கூடங்களில் பருவநிலை மாற்றப் படிப்பு
பல பாரம்பரிய சமூகங்கள் இயற்கையோடு இயைந்து வாழும் அறிவைப் பெற்றுள்ளன. இந்த அறிவு அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமானால் அவற்றைப் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று மோதி கூறினார்.
 
அந்தத்தப் பகுதிகளுக்கு ஏற்ற வாழ்க்கை முறையும் இயைந்து செயல்படுவதில் முக்கிய பகுதியாக இருக்ககலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
 
உலகளாவிய உதவிகள் தேவை
 
சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் திட்டங்கள் இருந்தாலும், பாதிப்பின் அபாயத்தில் இருக்கும் நாடுகளுக்கான உதவிகள் உலகளாவியதாக இருக்க வேண்டும் என்று நரேந்திர மோதி கூறினார். உதாரணத்துக்கு பேரிடருக்கு தாக்குப்பிடிக்கும் கட்டுமானங்களை இந்தியா உருவாக்கும்போது அதற்கு உலகளாவிய உதவிகள் தேவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
 
இந்தியாவில் அனைவருக்கும் குடிநீர், தூய்மை இந்தியா, பசுமை எரிவாயு உள்ளிட்ட திட்டங்கள் சூழலுக்கு ஏற்ப மாறும் பலன்களை மக்களுக்கு கொடுப்பதுடன், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தியிருக்கிறது என்று மோதி பேசினார்.
 
நமது சவக்குழியை நாமே தோண்டுகிறோம்: எச்சரிக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர்
அன்டோனியோ
 
புதைபடிவ எரிபொருள்களுக்கு அடிமையாகி இருப்பதன் மூலம் நமது சவக்குழியை நாமே தோண்டிக் கொண்டிருக்கிறோம் என்று ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் எச்சரித்துள்ளார்.
 
"இப்போது நாம் நிறுத்தாவிட்டால், அது நம்மை நிறுத்திவிடும். போதும் என்று கூறுவதற்கு இதுவே நேரம். கார்பன் மூலமாக நம்மை நாமே கொல்லும் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. எரிபொருளை ஆழமாக நாம் தோண்டிக் கொண்டே இருந்தால், நமது சவக்குழியைத் தோண்டுகிறோம் என்றே பொருள்" என்று அவர் கூறினார்.
 
இந்தத் தருணத்தை தவறவிட்டால் யாரும் தப்பிக்க முடியாது : ஜோ பைடன்
நாம் நடவடிக்கைகளை எடுக்க இதுவே சரியான தசாப்தம். இதை தவறவிட்டால் யாரும் தப்பிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.
 
பருவநிலை மாற்றம் என்பது கற்பனையானது அல்ல. அது மக்களின் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் அழித்துக் கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.
 
சமீபத்திய ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட சிக்கல்களை அமெரிக்கா அனுபவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
"இந்த தருணத்தை நாம் தவறவிட்டால், இன்னும் வரவிருக்கும் மோசமானவற்றிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது" என்றும் அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்