COP26 மாநாடு என்பது என்ன? இது ஏன் நடக்கிறது?

திங்கள், 1 நவம்பர் 2021 (14:00 IST)
புதைபடிம எரிபொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் வெளியாகும் புகையால் உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருகிறது.

 
முதலில் இதை ஏன் COP26 மாநாடு என்று சொல்கிறார்கள் என தெரிந்து கொள்ளுங்கள்...
COP: COP என்பது கான்ஃப்ரன்ஸ் ஆஃப் த பார்ட்டீஸ் (Conference of the Parties) என்பதன் சுருக்கம். COP1 மாநாடு 1995 ஆம் ஆண்டு நடைபெற்றது. தற்போது நடக்கும் மாநாடு 26வது மாநாடு என்பதால் COP26 என்று அழைக்கப்படுகிறது.
 
பருவநிலை மாற்றம் காரணமாக உண்டாகும் தீவிர நிகழ்வுகளான வெப்ப அலைகள், வெள்ளம், காட்டுத்தீ ஆகியவை அதிகரித்து வருகின்றன. இதுவரை வெப்பம் பதிவு செய்யப்பட்ட காலங்களிலேயே கடந்த தசாப்தம்தான் மிகவும் அதிக வெப்பம் வாய்ந்ததாக உள்ளது.
 
அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும் இவற்றைக் கட்டுப்படுத்த கூட்டு நடவடிக்கை தேவை என்று ஒப்புக் கொண்டுள்ளன. கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள COP26 உச்சிமாநாட்டில் 2030ஆம் ஆண்டுக்குள் எரிபொருள் வாயிலான தங்கள் உமிழ்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கு தங்களிடம் கொண்டுள்ள திட்டம் என்ன என்பதை, இதில் பங்கேற்கும் 200 நாடுகளும் தெரிவிக்க வேண்டும்.
 
தொழிற்புரட்சி காலத்துக்கு முன்பு இருந்த வெப்பநிலையை விட 2 டிகிரி செல்சியசுக்கும் மிகாமல் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த வேண்டும் என்று 2015ஆம் ஆண்டு உலக நாடுகள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. 2 டிகிரிக்கும் மிகக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், தொழிற்புரட்சி காலத்துக்கு முந்தைய வெப்பநிலையை விட 1.5 டிகிரி செல்சியஸ் அளவில் அதை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அந்த ஒப்பந்தத்தின் இலக்கு.
 
பருவநிலை மாற்றம் காரணமாக உண்டாகும் பேரழிவுகளை தவிர்ப்பதற்காக உலக நாடுகள் கையெழுத்திட்டு இந்த ஒப்பந்தம்தான் "பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், 2050ஆம் ஆண்டில் தங்களது நிகர எரிபொருள் உமிழ்வுகளை பூஜ்ஜியம் எனும் அளவில் கொண்டு வருவதற்கு உலக நாடுகள் பெருமளவில் தங்கள் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க வேண்டி இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்