பாலியல் வல்லுறவுக்கு உள்ளான, திருமணத்துக்கு முன் கருவுற்ற பெண்களின் குழந்தைகள் விற்பனை!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (11:52 IST)
சட்டவிரோதமான முறையில் குழந்தைகளை விற்பனை செய்யும் வணிகம் (குழந்தைகள் பண்ணை) தொடர்பிலான பரபரப்பு தகவலொன்றை இலங்கை போலீஸார் நேற்று (செவ்வாய் கிழமை) வெளியிட்டனர்.
 
பாலியல் வல்லுறவுக்கு உள்ளான மற்றும் திருமணத்துக்கு முன் கருத்தரித்த பெண்களிடமிருந்து குழந்தைகளை பெற்று, இந்த சட்டவிரோத வணிகம் நடப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
 
போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
 
சிறுவர் மற்றும் மகளிர் போலீஸார் நடத்திய விசாரணைகளின் ஊடாக இந்த சட்டவிரோத வர்த்தகம் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
இணையத்தளத்தில் காணொளி விளம்பரம் ஊடாக பிரசாரம் செய்து, இந்த வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு அல்லது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களை, குறித்த நபர் முதலில் தமது இடத்திற்கு வரவழைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
 
அதனைத் தொடர்ந்து, குறித்த பெண்களுடன், இந்த சந்தேகநபர் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
 
இந்த உடன்படிக்கையின் பிரகாரம், தமது குழந்தைகளை குறித்த நபர் தன்வசப்படுத்திக்கொண்டு, அந்த குழந்தைகளை மூன்றாவது தரப்பிற்கு விற்பனை செய்து வந்துள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
 
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 12 பெண்களை, சிறுவர் மற்றும் மகளிர் போலீஸ் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
 
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர்களில் ஐந்து பேரின் குழந்தைகளை, குறித்த நபர் மூன்றாவது தரப்புக்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளின் ஊடாக வெளியாகியுள்ளது.
 
அதுமாத்திரமன்றி, சந்தேகநபரின் பாதுகாப்பில் மேலும் 12 கர்ப்பணி பெண்கள் தங்க வைக்கப்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கிறார்.
 
கொழும்பு புறநகர் பகுதியான மொறட்டுவை நகரில் இரண்டு இடங்களில் இந்த சட்டவிரோத குழந்தை வணிகம் முன்னெடுக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
 
பாலியல் வல்லுறவுக்கு உள்ளான மற்றும் திருமணத்துக்கு முன்பாக கர்ப்பம் தரித்த பெண்களிடமிருந்து குழந்தைகள் விற்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
 
இலங்கையின் குற்றவியல் சட்டத்தில் ஆள் கடத்தல் வர்த்தக குற்றச்சாட்டின் கீழ் இது தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றம் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கிறார்.
 
குழந்தையொன்று பிறப்பதற்கு முன்பதாகவே விற்பனை செய்வதற்கு தயார்படுத்தப்படுவதானது, ஆள் கடத்தல் வர்த்தகத்துடன் தொடர்புடைய குற்றம் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
 
இலங்கை சட்டத்தின் படி, குழந்தையொன்று மூன்றாவது தரப்புக்கு வழங்கப்படுவதாயின், அது மாவட்ட நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை என அவர் கூறுகிறார்.
 
இந்த சம்பவம் தொடர்பில் மாத்தளை - உக்குவளை பகுதியைச் சேர்ந்த 47 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
 
1980களில் நடத்தப்பட்ட குழந்தைகள் பண்ணை
 
இலங்கையில் 1980ம் ஆண்டு காலப் பகுதியில் குழந்தைகள் பண்ணையொன்று நடத்தப்பட்டதை இலங்கை அதிகாரிகள் கடந்த காலங்களில் ஏற்றுக்கொண்டிருந்தனர்.
 
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அந்த காலப் பகுதியில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
 
1980ம் ஆண்டு காலப் பகுதியில் மாத்திரம், சுமார் 11,000 குழந்தைகள் ஐரோப்பிய நாடுகளிலுள்ள குடும்பங்களுக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதாக கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
 
நெதர்லாந்து, ஸ்வீடன், டென்மார்க், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இவ்வாறான நிலையில், மீண்டும் குழந்தைகள் வர்த்தகம் தொடர்பிலான தகவல்கள் இன்று வெளியாகியுள்ளன.
 
இந்த சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் போலீஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாக அஜித் ரோஹண தெரிவிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்