சிபிஎஸ்இ: அடுத்த ஆண்டு மாணவர்களின் ரிப்போர்ட் கார்ட் எப்படி இருக்கும்?

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (11:05 IST)
கல்வி ஆண்டு 2021-22இல் இருந்து 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு முறை தேர்வை நடத்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திங்கள்கிழமை முடிவு செய்தது.
 
கோவிட் -19 பெருந்தொற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
சிபிஎஸ்இ இது தொடர்பான அறிவிப்பை திங்கள்கிழமை மாலை வெளியிட்டுள்ளது. இதில் பாடத்திட்டங்களை குறைப்பது முதல் தேர்வுகள் தொடர்பான செயல்முறை வரை, அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டுள்ளது.
 
கல்வி ஆண்டு 2021-22இல் தேர்வுகள் இரண்டு முறை நடைபெறும் என்று திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்ட அறிவிப்பில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
 
இந்த செயல்பாட்டில் பாடத்திட்டங்களும் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும். முழு அமர்வும் டெர்ம்-1 மற்றும் டெர்ம்-2 என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
 
நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள முதல் தேர்வில், முதல் ஐம்பது சதவிகித பாடத்திட்டங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.
 
கல்வி ஆண்டின் முடிவில் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் இரண்டாவது தேர்வில், மீதமுள்ள ஐம்பது சதவிகித பாடத்திட்டங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
 
ஒவ்வொரு டெர்ம் முடிவிலும் தேர்வுகளை நடத்துவதற்கான சாத்தியங்களை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
 
பாடத்திட்டங்கள் குறைக்கப்படும்
கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் பாடத்திட்டங்களை குறைப்பதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
 
கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் பொதுமுடக்கம் மற்றும் இணையத்தின் மூலமான கற்பித்தல் காரணமாக, படிப்பு சுமூகமாக இருக்கவில்லை.
 
இதன் காரணமாக ஒவ்வொரு பாடத்திலும் கற்பிக்கப்பட்ட தலைப்புகளை சிபிஎஸ்இ குறைத்துவிட்டது. இதற்குப் பிறகு மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் சுமார் 30% க்கும் குறைவாகவே படிக்க வேண்டியிருந்தது.
 
இந்த கல்வி ஆண்டில் இருந்து தேர்வுகளின் பாடத்திட்டத்தில் நடப்புசூழலுக்கு ஏற்றவையிலான மாற்றங்களை கொண்டுவருவது பற்றி சிபிஎஸ்இ தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. எளிமையான சொற்களில் இது பாடத்திட்டத்தில் குறைப்பைக் குறிக்கிறது. .
 
இருப்பினும், அதன் முழுமையான விவரத்தை அறிய, மாணவர்கள் இந்த மாத இறுதி வரை காத்திருக்க வேண்டும்.
 
தேர்வில் என்ன கேட்கப்படும்?
சிபிஎஸ்இயின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, மாணவர்களின் மனதில் பல கேள்விகள் உள்ளன, அதாவது- இந்த இரண்டு தேர்வுகளிலும் என்ன கேள்விகள் கேட்கப்படும்?
 
இந்த தேர்வுகள் வீட்டிலிருந்து எழுதப்பட வேண்டுமா? அல்லது இம்முறை மாணவர்கள் பள்ளிக்குச் சென்று தேர்வு எழுத முடியுமா?
 
இதனுடன், கோவிட்டின் மூன்றாவது அலை ஏற்பட்டால், கடந்த முறையைப் போல தேர்வுகள் ரத்தாகுமா என்ற கேள்வியும் உள்ளது.
 
இந்த கேள்விகளுக்கு சிபிஎஸ்இ பதிலளித்துள்ளது -
 
2021-22 கல்வி ஆண்டின் முதல் டெர்மின் பொதுத்தேர்வு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெறும்.
இந்தத்தேர்வின் கால அளவு 90 நிமிடங்கள் ஆகும். இதில் காரண ஆய்வு(Reasoning) தொடர்பான, பல பதில்களில் ஒன்றை தேர்வு செய்யும் விதத்திலான கேள்விகள் கேட்கப்படும்.
இந்தத்தேர்வில் 50 சதவிகித பாடத்திட்டங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
சிபிஎஸ்இ, தேர்வின் வினாத்தாள்களை பள்ளிக்கு அனுப்பும். மேலும் மதிப்பெண்கள் எவ்வாறு அளிக்கவேண்டும் என்பதையும் விளக்கும்.
தேர்வு OMR தாளில் நடைபெறும்.
இந்த தாளில் கிடைத்த மதிப்பெண்கள் மாணவரின் மொத்த மதிப்பெண்களில் சேர்க்கப்படும்.
இரண்டாவது தேர்வு தொடர்பான தகவல்களையும் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது, அதன்படி -
 
2021-22 கல்வி ஆண்டின் இரண்டாவது டெர்ம் வாரியத் தேர்வு, மீதமுள்ள 50% பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கும்.
இந்த தேர்வு , 2022 மார்ச்-ஏப்ரல் மாதத்திற்குள் நடைபெறும். இதன் காலம் இரண்டு மணி நேரம் ஆகும்.
இந்த தேர்வில் நீண்ட பதில் மற்றும் குறுகிய பதில் வகை கேள்விகள் இருக்கும்.
கோவிட் காரணமாக தேர்வு நடத்தப்படாவிட்டால், 90 நிமிட, பல பதில் தேர்வு முறை செயல்படுத்தப்படும்.
இந்த தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் இறுதி ரிப்போர்ட் கார்டில் சேர்க்கப்படும்.
கோவிட்டின் புதிய அலை ஏற்பட்டால்
வரவிருக்கும் நாட்களில் கொரோனா தொற்றுநோய் காலம் நீடித்து பள்ளிகளை திறக்க முடியாவிட்டால், அந்த சூழ்நிலையில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ கூறியுள்ளது.
டெர்ம் 1 இன் தேர்வுகள் அதாவது நவம்பர்-டிசம்பர் மாதங்களில் பள்ளிக்கூடங்களில் நடத்தமுடியாவிட்டால், குழந்தைகள் ஆன்லைன் மூலம் இந்தத் தேர்வை எழுத முடியும் என்று வாரியம் தெரிவித்துள்ளது.
 
ஆனால் இதுபோன்ற சூழ்நிலையில், மாணவர்களின் இறுதி ரிப்போர்ட் கார்டில், டெர்ம் 1 தேர்வின் பங்கு குறைக்கப்பட்டு, டெர்ம் 2 தேர்வின் பங்கு அதிகரிக்கப்படும்.
 
கூடவே, டெர்ம் 1 தேர்வு பள்ளிகளில் நடத்தப்பட்டு, டெர்ம் 2 தேர்வுக்குள் பள்ளிகளை மூடவேண்டிய சூழல் உருவானால், டெர்ம் 1 தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் மற்றும் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் இறுதி ரிப்போர்ட் கார்ட் வழங்கப்படும்.
 
இரண்டு தேர்வுகளுமே பள்ளியில் நடத்தப்படாவிட்டால், உள் மதிப்பீடு, செயல்முறை, ப்ராஜெக்ட் வேலை, டெர்ம் 1 மற்றும் டெர்ம் 2 தேர்வில் பெறப்பட்ட தியரி மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி ரிப்பார்ட் கார்ட் தயாரிக்கப்படும்.
 
இதனுடன் மாணவர்களை மதிப்பீடு செய்வதன் அடிப்படையில் அவர்களின் சிறப்புக்குறிப்பை பள்ளிகள், உருவாக்க வேண்டும். அதில் யூனிட் டெஸ்ட்கள், செயல்முறை மற்றும் ப்ராஜெக்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்