பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையில் ஒரு புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், "நம்மிடம் மீண்டும் கட்டுப்பாடு வரும் வகையில் ஒரு புதிய ஒப்பந்தம் கிடைத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்திற்கான சட்ட ஆவணங்கள் தயாரிக்கும் பணியை இரு தரப்பும் செய்து வருகிறது. எனினும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றங்களின் ஒப்புதல் இதற்கு வேண்டும்.
பிரதான எதிர்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் இதுதொடர்பாக கூறுகையில், முன்னாள் பிரதமர் தெரீசா மே கலந்து பேசி முடிவெடுத்த ஒப்பந்தத்தைவிட இது மிகவும் மோசமானது என்று தெரிவித்தார். இதனை எம்பிக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இது வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான் என்று கூறும் ஐக்கிய ஜனநாயக கட்சி, இதற்கு ஆதரவளிக்க முடியாது என்று கூறுகிறது.
ஆனால், இது நியாயமான மற்றும் இருதரப்புக்கும் சமமான ஒப்பந்தம் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான ஜீன் கிளாட் ஜங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை பரிந்துரை செய்து அவர், ஐரோப்பிய சபை தலைவர் டொனால்ட் டஸ்கிற்கு எழுதிய கடிதத்தில், "பிரிட்டனுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால உறவை குறித்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.
ஜீன் கிளாட் மற்றும் பிரிட்டன் பிரதமர் ஜான்சன் இருவருமே இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்கும்படி பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளனர்.