பா.ஜ.க. ஆதரவாளர் கிஷோர் கே சுவாமி மீண்டும் கைது

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (13:40 IST)
சமூக வலைதளத்தில் ஆபாசமாகப் பேசியதற்காக பா.ஜ.க. ஆதரவாளர் கிஷோர் கே. சுவாமி என்பவரை சென்னை நகரக் காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு கைதுசெய்துள்ளது. பாண்டிச்சேரியில் இருந்த இவர், இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டார்.

சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கிவரும் கிஷோர் கே. சுவாமி, நவம்பர் மாதத் துவக்கத்தில் மழை, வெள்ளத்தை எதிர்கொள்வது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைத் தொடர்புபடுத்தி ஆபாசமாகத் தோன்றும் வகையில் கருத்துகளைப் பதிவுசெய்திருந்தார்.

இது குறித்து கிஷோர் கே. சுவாமி மீது இ.பி.கோ. 153, 294 B, 505 -1, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இது குறித்த விசாரணைக்காக ஆஜராகும்படி நவம்பர் மாதத்தில் நான்கு முறை அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், கிஷோர் கே. சுவாமி விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதற்கிடையில், தன் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பதால் முன் ஜாமீன் வழங்கும்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கிஷோர் கே. சுவாமி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

தனது நண்பரைக் குறிப்பிட்டே ட்விட்டரில் பதிவிட்டதாக கிஷோர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், அவர் இதுபோல மற்றவர்களை ஆபாசமாக பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் அவர் மீது ஏழுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் பாண்டிச்சேரியில் இருந்த கிஷோர் கே. சுவாமியை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

இதற்கு சில நாட்களுக்கு முன்பாக, கோயம்புத்தூர் சிலிண்டர் வெடிப்பு பற்றி மிக மோசமான கருத்துகளை அவர் பதிவிட்டுவந்த நிலையில், அவர் மீது காவல்துறை ஒரு வழக்கைப் பதிவுசெய்தது.

அதற்கு முன்பாக முன்னாள் முதலமைச்சர்கள் சி.என். அண்ணாதுரை, மு. கருணாநிதி உள்ளிட்டோர் குறித்து ஆபாசமாகப் பேசியதற்காக அவர் கைதுசெய்யப்பட்டார். அதற்கு முன்பாக, பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி பதிவுசெய்ததற்காக அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்