கிரிஜா வைத்தியநாதனை தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினராக நியமித்தது செல்லும்"

ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (00:05 IST)
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் உறுப்பினர் பதவியை வகிக்கத் தேவையான தகுதியை தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பெற்றிருப்பதாகவும் அவர் அந்த பதவிக்கு நியமனம் செய்ய தகுதியானவர் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
கடந்த வாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் - உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணையின் முடிவில் அவரை உறுப்பினர் பதவியில் நியமனம் செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
தமிழ்நாட்டின் அரசு தலைமைச் செயலராக பணியாற்றிய கிரிஜா வைத்தியநாதன், கடந்த ஆண்டு பணி ஓய்வு பெற்றார். இந்த நிலையில், சமீபத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணர் - உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார். ஆனால், அவரின் நியமனத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் என்ற சுற்றுசூழல் அமைப்பின் ஜி. சுந்தர்ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொழில்நுட்ப உறுப்பினராக நியமிக்கப்படுபவர்கள் கல்வித் துறை சார்ந்தவர்களாக இருந்தால் 15 ஆண்டு அனுபவமும் அதில் ஐந்தாண்டு சுற்றுச்சூழல் சார்ந்து நேரடி களத்தில் பணியாற்றிய அனுபவமும் தேவை என கூறப்பட்டுள்ளது.
 
அதுவே அதிகாரிகள் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டால் 15 ஆண்டு அனுபவமும் அதில் ஐந்தாண்டு சுற்றுச்சூழல் சார்ந்து பணியாற்றிய அனுபவமும் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 
இதில் சுற்றுச்சூழல் சார்ந்த பணி என்ன என்பது விளக்கப்படவில்லை. ஆகவே கல்விப்புலம் சார்ந்தவர்களுக்கு குறிப்பிடப்பட்ட தகுதியை இங்கேயும் பொருத்திப் பார்த்தால், அதிகாரிகளும் சுற்றுச்சூழல் சார்ந்து நேரடியாக கள அனுபவம் பெற வேண்டும் என்றே சொல்ல வேண்டும். கிரிஜா வைத்தியநாதனுக்கு அந்த அனுபவம் இல்லை. ஆகவே அவரது நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுந்தர்ராஜனின் மனுவில் கூறப்பட்டிருந்தது.
 
இது குறித்து மத்திய அரசும் கிரிஜா வைத்தியநாதன் தரப்பும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர்கள் தாக்கல் செய்த பதில் மனுவில், கிரிஜா வைத்தியநாதன் மூன்றரை ஆண்டுகள் சுற்றுச்சூழல்துறை செயலராக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், தலைமைச் செயலராக இருந்தபோது அவர் சுற்றுச்சூழல் துறை சார்ந்த விவகாரங்களையும் கவனித்ததாகச் சொல்லப்பட்டிருந்தது.
 
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, இந்த வழக்கு முடிவடையும்வரை கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்கத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர்.
 
இதைத்தொடர்ந்து இன்று இந்த வழக்கின் இறுதி விசாரணைக்கு நடந்தபோது, பூவுலகு அமைப்பின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், "கிரிஜா வைத்தியநாதனை நாங்கள் எதிர்க்கவில்லை. தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு தகுதியான நபர் நியமனம் செய்யப்படவேண்டும் என்பதிலேயே தங்கள் தரப்பு கவனமாக உள்ளது," என்று கூறினார்.
 
இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதிகள், "கிரிஜா வைத்தியநாதன் தரப்பு பதிலை பரிசீலித்ததில், அவர் சுற்றுச்சூழல் செயலாளராகவும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராகவும் செயல்பட்டது மற்றும் சுகாதார செயலாளராக இருந்த போது, பயோமெடிக்கல் கழிவு மேலாண்மை விதிகளை அமல்படுத்திய நடவடிக்கை போன்றவற்றை கவனத்தில் கொண்டு, அவரது நியமனம் செல்லும்," என குறிப்பிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்