கொரோனாவால் சரிந்த அம்பானியின் சொத்து மதிப்பு - ரூ 1.44 லட்சம் கோடி இழப்பு!

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (09:48 IST)
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "வீழ்ந்த அம்பானி சொத்து மதிப்பு"

கொரோனா வைரசால் பங்கு சந்தையில் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து, முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 400 கோடி வீழ்ச்சி அடைந்தது. அவர் உலக பணக்காரர்கள் வரிசையில் 8 இடங்கள் கீழே இறங்கினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ்.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை நிலவியது. அத்துடன், கொரோனா வைரஸ் பாதிப்பும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இதனால் கடந்த 2 மாதங்களில் பங்குச்சந்தையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கூட வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதுதொடர்பான தகவல்களை திரட்டி, ஹருன் என்ற நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவின் முதல் பணக்காரரான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு கடந்த 2 மாதங்களில் 28 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதாவது, நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 280 கோடி வீதம் 2 மாதங்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 400 கோடி குறைந்துள்ளது.

தற்போது, அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 800 கோடியாக உள்ளது. மேலும், உலக பணக்காரர்கள் வரிசையில், முகேஷ் அம்பானி 8 இடங்கள் கீழே இறங்கி, 17-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதுபோல், இதர முன்னணி தொழிலதிபர்களின் சொத்து மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.45 ஆயிரத்து 600 கோடி குறைந்துள்ளது. இது, அவரது சொத்து மதிப்பில் 37 சதவீதம் ஆகும்.

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் சிவநாடாரின் சொத்து மதிப்பு ரூ.38 ஆயிரம் கோடி (26 சதவீதம்) குறைந்துள்ளது. வங்கித் துறை ஜாம்பவான் உதய் கோடக் கின் சொத்து மதிப்பு ரூ.30 ஆயிரத்து 400 கோடி (28 சதவீதம்) குறைந்துள்ளது.

அதானி, சிவநாடார், உதய் கோடக் ஆகிய மூவரும் உலகின் முன்னணி 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறி விட்டனர். முகேஷ் அம்பானிதான் அதில் நீடிக்கும் ஒரே இந்தியர் ஆவார்.

உலக அளவில் அதிகமாக நஷ்டம் அடைந்தவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆடை அலங்கார ஜாம்பவான் பெர்னார்டு அர்னால்ட் ஆவார். அவருக்கு ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு அடுத்தபடியாக இழப்பு ஏற்பட்டது, முகேஷ் அம்பானிக்குத்தான்.

உலகின் முன்னணி 10 பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பில்கேட்ஸ், 'ஃபேஸ்புக்' நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் ஆகியோரின் சொத்து மதிப்பிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அமேசான் அதிபர் ஜெஃப் பெசோஸ், உலகின் முதல் பணக்காரராக தொடர்ந்து நீடிக்கிறார். ஆனால், அவரது சொத்து மதிப்பும் 9 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதே சமயத்தில், சீன தொழிலதிபர்கள் பலன் அடைந்துள்ளனர். உலகின் முன்னணி 100 பணக்காரர்கள் பட்டியலில், சீனாவை சேர்ந்த 6 பேர் புதிதாக இடம் பெற்றுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்