இந்த ஆய்வு ஏன் அதிக கவனத்தைப் பெறுகிறது என்றால் பூமிக்கு வெளியே உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்த இடமாக வெள்ளியை ஆய்வாளர்கள் கருதியதில்லை.
பூமியுடன் ஒப்பிடும் பொழுது இதை ஒரு நரகக்குழி என்றே கூறலாம்.
வெள்ளியின் வளி மண்டலத்தில் 96% கரியமில வாயுதான் நிறைந்திருக்கிறது; பசுமை இல்ல வாயுக்கள் விளைவால் இதன் வெப்பநிலையும் மிகவும் அதிகமாக உள்ளது.
வெள்ளியின் மேற்பரப்பின் வெப்பநிலை 400 டிகிரி செல்சியஸ் அளவைவிட அதிகம்.
வெள்ளிக்கு அனுப்பப்பட்ட விண்கலன்கள் தரையிறங்கிய சில நிமிடங்களே அங்கு தாக்குப்பிடித்துள்ளன. அதன்பின்பு அவை செயலிழந்து விட்டன.
ஆனால் அந்த மேற்பரப்பில் இருந்து 50 கிலோமீட்டர் உயரத்தில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக புதிய ஆய்வு கூறுகிறது.
வெள்ளியின் வளிமண்டலத்தில் பாஸ்பீன் வாயு
வெள்ளியின் வளி மண்டலத்தில் நுண்ணுயிர்கள் வாழ உதவும் வாயு ஒன்றை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
பாஸ்பீன் எனப்படும் அந்த வாயுவின் மூலக்கூறு ஒரு பாஸ்பரஸ் மற்றும் மூன்று ஹைட்ரஜன் அணு ஆகியவற்றால் ஆனது.
பென்குயின் போன்ற உயிரினங்களின் குடல் நாளத்தில் வசிக்கும் நுண்ணுயிர்கள், ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கும் உயிர்ச்சூழல் ஆகியவற்றில் வாழும் உயிரினங்கள் ஆகியவற்றால் இந்த பாஸ்பீன் வாயு உருவாக்கப்படும்.
இந்த வாயுவை செயற்கையாகவும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்ய முடியும்.
ஆனால் வெள்ளி கோளில் பென்குயின்களும் இல்லை தொழிற்சாலைகளும் இல்லை.
இப்படிப்பட்ட சூழலில் வெள்ளியின் மேல் பரப்பில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் பாஸ்பீன் வாயு இருப்பதாக பிரிட்டனில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜேன் கிரீவ்ஸ் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தங்கள் ஆய்வின் முடிவுகளை நேச்சர் அஸ்ட்ரானமி எனும் அறிவியல் சஞ்சிகையிலும் அவர்கள் பதிப்பித்துள்ளனர்.
வெள்ளி கோளின் மேற்பரப்பில் மிகவும் கணிசமான அளவில் பாஸ்பீன் வாயு கண்டறியப்பட்டுள்ளது.
உயிரினங்கள் அல்லாத ஒரு மூலத்திலிருந்து இந்த வாயு உருவாகி இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள்.
அப்படியானால் உயிருள்ள ஏதாவது ஓர் உயிரினத்தில் இருந்து அந்த வாயு உருவாகி இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்பது இதன் பொருள்.
"என் தொழில்முறை வாழ்க்கை முழுதும் இந்த பேரண்டத்தில் வேறெங்கும் உயிர்கள் உள்ளதா என்பதை அறியும் நோக்கிலேயே நான் ஆராய்ச்சி செய்து வருகிறேன். அதற்கு வாய்ப்புள்ளது என்பது மிகவும் பிரமிப்பூட்டும் வகையில் உள்ளது," என்கிறார் பேராசிரியர் கிரீவ்ஸ்.
"ஒருவேளை நாங்கள் தவறான முடிவுக்கும் வந்து இருக்கலாம்; அப்படி இருந்தால் எங்கள் ஆய்வில் என்ன குறை உள்ளது என்பதை சுட்டி காட்டுவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். எங்கள் ஆய்வு முடிவுகள் மற்றும் தரவுகள் ஆகியவற்றை அனைவரும் அணுக முடியும்; ஆய்வு முடிவுகளை கேள்விக்கு உட்படுத்த வேண்டும்; அறிவியல் அப்படித்தான் இயங்குகிறது," என்கிறார் அவர்.
இந்தப் பேராசிரியர் மற்றும் அவரது குழுவினர் ஹவாயில் உள்ள ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் தொலைநோக்கி மூலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் பாஸ்பீன் இருப்பதை கண்டுபிடித்தனர்.
சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் உள்ள தொலைநோக்கிகளை வைத்தும் இதை உறுதிப்படுத்திக் கொண்டனர்.
வெள்ளியில் வேற்று கிரக உயிர்கள் - ஆய்வு முடிவு மீது சந்தேகம்
இந்த அனுமானத்தின் மீதான சந்தேகங்களும் எழாமலில்லை. அந்த ஆய்வுக் குழுவினர் தங்கள் ஆய்வுகள் குறித்து முடிவுகளை தெரிவிப்பதில் மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்கின்றனர்.
வெள்ளியில் உயிரினங்கள் வாழ்வதாக தாங்கள் கண்டறிந்து விட்டோம் என்று அவர்கள் கூறவில்லை. வாய்ப்பு உள்ளது என்றே கூறுகின்றனர்.
வெள்ளியின் மேற்பரப்பிலுள்ள மேகங்கள் மிகவும் அடர்த்தியானவை. அந்த மேகங்களில் 75 சதவிகிதம் முதல் 95 சதவிகிதம் வரை சல்ஃபூரிக் அமிலம் உள்ளது. இந்த அமிலம் பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதல்ல.
இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற உயிரியலாளர் முனைவர் வில்லியம் பெய்ன்ஸ், அமெரிக்காவில் உள்ள மசாச்சூட்டஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பணியாற்றுகிறார்.
எரிமலைகள், மின்னல், விண்கற்கள் ஆகியவை வெள்ளி கிரகத்தில் பாஸ்பீன் வாயு உருவாக காரணமாக இருந்திருக்கலாம் எனும் நோக்கில் இவர் ஆய்வுகளை மேற்கொண்டார்.
ஆனால் மேற்கண்ட வற்றின் மூலம் நிகழும் வேதியியல் மாற்றங்கள் வெள்ளியின் வளிமண்டலத்தில் உள்ள பாஸ்பீன் வாயுவை உருவாக்க 10,000 மடங்கு வலிமை குறைந்தவையாக இருக்கின்றன என்று அவர் கூறுகிறார்.
வெள்ளி கிரகத்தில் ஒருவேளை நுண்ணுயிர்கள் இருந்தால் அவை சல்ஃபூரிக் அமிலத்தின் பாதிப்பில் இருந்து தப்புவதற்காக மிகவும் மாறுபட்ட ஒரு உயிர்வேதியியல் கோட்பாட்டை பின்பற்றலாம் அல்லது அதில் இருந்து தப்புவதற்கான கவசம் எதையேனும் பரிமாணம் அடைந்திருக்கலாம் என்கிறார் பெய்ன்ஸ்.
பூமிக்கு வெளியே உயிர்கள் சாத்தியமா?
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் காலின் வில்சன் ஐரோப்பிய விண்வெளி முகமை 'வீனஸ் எக்ஸ்பிரஸ்' எனும் வெள்ளி ஆராய்ச்சித் திட்டத்தில் பணியாற்றினார்.
பேராசிரியர் கிரீவ்ஸ்-இன் கண்டுபிடிப்பு அந்தக் கோள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளின் புதிய அலையை உருவாக்கும் என்று அவர் கூறுகிறார்.
"இது மிகவும் வியப்பாக உள்ளது; ஒருவேளை தொலைநோக்கிகளின் தவறான கணிப்பால் அங்கு பாஸ்பீன் இருப்பதாகக் கருதப்பட்டாலும் இது புதிய கண்டுபிடிப்புகளுக்கு இட்டுச்செல்லும். ஆனால் அப்படி தவறு நிகழ்ந்து இருக்க வாய்ப்பில்லை," என்று அவர் கூறுகிறார்.
வெள்ளியின் மேகங்களின் மேல் அடுக்குகளில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் இருந்தால் அது ஓர் ஒளிமயமான கண்டுபிடிப்பு. உயிர்கள் வாழ்வதற்கு பூமி போன்ற ஒன்று வேண்டும் என்று அவசியமில்லை. நமது பால் வெளியிலிருக்கும் வெள்ளி போன்ற அதீத வெப்பம் வாய்ந்த கோள்களில் கூட உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறது என்கிறார் பிரிட்டனின் வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லெவிஸ் டார்ட்னெல்.