ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான கௌதம் அதானி தலைமையில் இயங்கும் அதானி குழுமம் பங்கு சந்தையில் திருகு வேலை செய்ததாகவும், கணக்கு மோசடியில் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்கு அதானி நிறுவனம் பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க்கின் அறிக்கை தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது என்றும் ஒன்றைவிட்டு ஒன்றைக் காட்டும் தவறான தகவல்களைக் கொண்டது என்றும் அதானி குழுமம் கூறியுள்ளது.
கடந்த புதன்கிழமை ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், அதானி குழுமம், 88 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான சந்தை மதிப்பை இழந்தது.
தற்போது, நியூயார்க்கில் செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதானி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமம், பொருட்கள் வணிகம், விமான நிலையம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்பட பலவகை வணிகங்களில் ஈடுபடும் நிறுவனங்களை நடத்துகிறது. இந்தக் குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உலகின் நான்காவது பெரிய பணக்காரர் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.
ஹிண்டன்பர்க் என்பது குறுகிய கால பங்கு விற்பனையில் தனித்திறன் பெற்றது, அல்லது, ஒரு நிறுவனத்தின் பங்கு விலை குறையும் என்று எதிர்பார்த்து அதற்காக பந்தயம் கட்டக்கூடியது.
அதானி "கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ளது ஹிண்டன்பர்க். அதானி குழுமம் தன் பங்குகளை பொதுவெளியில் விற்பனை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த அறிக்கை வெளிவந்தது.
மொரிஷியஸ், கரீபியன் தீவுகள் போன்ற கடல்கடந்த வரிப் புகலிடங்களில் அதானி குழுமத்துக்கு உரிமையாக உள்ள நிறுவனங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது ஹிண்டன்பர்க் அறிக்கை.
அதானி நிறுவனங்களுக்கு "கணிசமான கடன்" இருப்பதாகவும் இது முழு குழுமத்தையும் ஆபத்தான நிதி நிலையில் வைத்திருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் வியாழக்கிழமை, அதானி குழுமம் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆய்வு செய்துவருவதாக தெரிவித்தது.
“இந்த அறிக்கை மூலம் இந்திய பங்குச் சந்தையில் உருவாக்கப்பட்டுள்ள ஏற்ற இறக்கமான நிலை மிகவும் கவலையளிப்பதாகவும், இந்தியக் குடிமக்களுக்கு தேவையற்ற வேதனையை ஏற்படுத்தியுள்ளது” என்றும் அதானி குழும சட்ட அணியின் தலைவர் ஜதின் ஜலுந்த்வாலா கூறினார்.
“இந்த அறிக்கையும் அதன் ஆதாரமற்ற உள்ளடக்கங்களும் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. ஹிண்டன்பர்க் நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளபடி, அதானி பங்குகளின் மதிப்பு சரிவதன் மூலம் பலனடையும் நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனம் உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது அறிக்கை குறித்து அதானி நிறுவனம் வெளியிட்ட கருத்துகளுக்கு ஹிண்டன்பர்க் வியாழக்கிழமை பதில் தந்துள்ளது.
“தாங்கள் எழுப்பிய முக்கியமான பிரச்னை ஒன்றுக்கு கூட அதானி நிறுவனம் பதில் அளிக்கவில்லை” என்று கூறியுள்ள ஹிண்டன்பர்க், தங்களது அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், தங்களுக்கு எதிரான எந்த புகாருக்கும் அடிப்படை ஏதும் இருக்காது என்பதால் சட்ட நடவடிக்கையை வரவேற்பதாகவும் அதானி நிறுவனத்துக்கு தாங்கள் அளித்த பதிலில் கூறியுள்ளது ஹிண்டன்பர்க்.
அதானி குழுமத்தின் முன்னணி நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் தனது பங்குகளை பொதுமக்களுக்கு விற்கும் நடவடிக்கையை வெள்ளிக்கிழமை தொடங்குவதாகத் திட்டமிட்டது.
பிரதமர் நரேந்திர மோதிக்கு நெருக்கமாக இருப்பதன் மூலம் அதானி பலன் அடைந்து வருவதாக நீண்ட காலமாகவே கூறிவரும் எதிர்க்கட்சி தலைவர்கள், இந்த அறிக்கைக்கு உடனடியாக எதிர்வினையாற்றத் தொடங்கியுள்ளனர்.
"விரிவான ஆய்வு தற்போது பொது வெளிக்கு வந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்" என்று நாடாளுமன்ற உறுப்பினரும் சிவசேனா கட்சி நிர்வாகியுமான பிரியங்கா சதுர்வேதி ட்வீட் செய்துள்ளார்.
பாரதிய ராஷ்ட்ரிய சமிதி (முன்னர் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி) கட்சியைச் சேர்ந்த கே.டி.ராமா ராவ், அதானி குழுமத்தின் செயல்பாடு தொடர்பாக இந்தியப் புலன்விசாரணை நிறுவனங்களும், பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பும் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக ஒழுங்காற்று அமைப்பு தாமாக எந்த நடவடிக்கையையும் தொடங்க வாய்ப்பில்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி, தங்களுக்கு எதாவது குறிப்பான புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கும். இந்த விஷயத்தில் அப்படி ஏதும் இல்லை," என்று இன்கவர்ன் ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீராம் சுப்பிரமணியம் கூறினார்.
“அறிக்கையில் உள்ள பல குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களில் ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவை” என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கேட்க செபி அமைப்பை பிபிசி தொடர்புகொண்டது. எனினும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
அதானி குழுமம் வெள்ளியன்று சுமார் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான பொதுப் பங்கு விற்பனையைத் தொடங்குவதற்குத் தயாராகிவிட்டது. ஆனால், அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் காரணமாக சில முதலீட்டாளர்கள் பின்வாங்கக் கூடும் என்று நிதிச் சந்தை ஆய்வாளர் அம்பரீஷ் பாலிகா கூறினார்.
ஆனால், இந்த அறிக்கை அதானி குழுமத்தையும் தாண்டி பரந்த பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.
அதானியையும் தாண்டி, “நிதித்துறையின் உலக மயமாக்கல் – அரசியலின் தேசியமயமாக்கல் ஆகிய இரண்டின் அழுத்தங்களுக்கு இடையே சிக்கிக்கொண்டுள்ள இந்திய பங்குச் சந்தையின் நம்பகத் தன்மை தொடர்பாக பல கேள்விகள்” இருப்பதாக கூறியுள்ளார்
ப்ளூம்பெர்க் செய்திச் சேவையின் கட்டுரையாளர் ஆண்டி முகர்ஜி.
“பொதுமக்கள் வெகுண்டெழுந்த பிறகு சந்தையை சுத்தம் செய்யலாம் என்று செபி காத்திருக்கிறதா” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.