ஆஸ்திரேலியாவில் ரியோ டின்டோ சுரங்க நிறுவனம் சிதைத்த அபாரிஜினல் பழங்குடியினரின் குகைகளை, அந்த நிறுவனமே சீரமைத்துத் தரவேண்டும் என ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் குழு உத்தரவிட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவில் அபாரிஜினல் பழங்குடியினர் வசித்துவந்த 46,000 ஆண்டுகள் பழமையான குகைகளை, இரும்புத் தாது வெட்டியெடுத்த போது, ரியோ டின்டோ என்ற சுரங்க நிறுவனம் இந்த ஆண்டு மே மாதம் வெடிவைத்து தகர்த்துவிட்டது.
இது அந்நாட்டில் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. இப்பகுதியில் உள்ள ஜுகன் கார்ஜ் குகைகள் என்ற பெயருடைய இந்த குகைகள் சேதமடைந்தன.
மேற்கு ஆஸ்திரேலியாவில் பில்பாரா என்னுமிடத்தில் உள்ள இந்த பாரம்பரிய தளத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த பல சின்னங்கள் காணப்படுகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவத்துக்கு ரியோ டின்டோ நிறுவனம் மன்னிப்பு கோரியது.
இந்த குகைகளை சேதப்படுத்தியதற்கு, பொது மக்கள் மற்றும் நிறுவன பங்குதாரர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இதையடுத்து, ரியோ டின்டோ நிறுவனத்தின் பல உயரதிகாரிகள் பதவி விலகினர். இதில் முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரி ஜீன் செபஸ்டின் ஜேக்ஸும் ஒருவர்.
ரியோ டின்டோவின் இச்செயல் குறித்து விசாரிக்க ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில், சுரங்க நிறுவனம் ரியோ டின்டோ 46,000 ஆண்டுகள் பழமையான அபாரிஜினல் குகைகளை மறுகட்டுமானம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.