திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மகா தீப திருவிழா!!

Webdunia
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது. இச்சிவாலயம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். சைவ சமயத்தில் நினைத்தாலே முக்தி தரக் கூடியத் தலமாக திருவண்ணாலை உள்ளது. கார்த்திகை தீப திருநாளன்றும், முழுநிலவு நாட்களிலும் சிவ பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருகிறார்கள். இதனை மலைவலம் என்று அழைக்கின்றனர்.

 
திருவண்ணாமலை சிவாலயத்தில் ஆண்டுக்கு நான்கு முறை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இவற்றுள் கார்த்திகை மாதத்தில் கொண்டாப்படுகின்ற பிரம்மோற்சவம் சிறப்பானதாகும். இந்த பிரம்மோற்சவ விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் பத்தாம் நாள் கார்த்திகை தீப திருநாளாகும். இச்சிவாலயத்தில் கார்த்தை தீப நாளான்று மகா தீபம் ஏற்றப்படுகிறது. 
 
அந்நாளில் சிவாலயத்திற்கு வந்து, திருவண்ணாமலையை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். மலையின் உச்சியில் இந்த தீபம் ஏற்றப்படுகிறது. இதனை பரணி தீபம் என்று அழைக்கின்றனர்.
 
பிரம்மாவும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டையிட்டுக் கொண்டபோது, சிவபெருமான் அக்னி தூணாக நின்றார். அவருடைய அடியைத் தேடி திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்துச் சென்றார். பிரம்மா சிவபெருமானின் முடியைத் தேடி அன்ன வாகனத்தில் பறந்து சென்றார். இவர்கள் இருவராலும் சிவபெருமானின் அடிமுடியை காண முடியவில்லை. அப்போது சிவபெருமானின் தலையில் சூடப்பட்டிருந்த தாழம்பூ ஒன்று பூமியை நோக்கி சென்று கொண்டிருந்தது.
 
பூமியை நோக்கி சென்றுகொண்டிருந்த தாழம்பூவிடம் பிரம்மதேவர் “தாழம்பூவே! சிவபெருமானின் முடியைக் காண்பதற்கு இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும்” என்று கேட்டார். அதற்கு தாழம்பூ, ஐயா! நானே பல நூறு ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டிருக்கிறேன். தாங்கள் இப்போது தான் பாதி அளவு வந்திருக்கிறீகள்.  மேலே செல்ல உங்களுக்கு இன்னும் பல நூறு ஆண்டுகள் பிடிக்கும். இதனால் அயர்ச்சி அடைந்த பிரம்மதேவர், தாழம்பூவின் உதவியோடு தான் சிவபெருமானின் முடியை கண்டுவிட்டதாக பொய்யுரைத்தார்.
 
மகாவிஷ்ணு ”அப்படியானால் நீங்கள்தான் என்னை விட பெரியவர்” என்று தன் தோல்லியை ஏற்க முன்வந்தார். அதற்குள் சிவபெருமான் கண்களில் நெருப்பு பறக்க பிரம்மதேவரை நோக்கி, ‘என் முடியை கண்டதாக பொய் கூறிய உனக்கு இனிமேல் பூலோகத்தில் கோவில் கட்டி வழிபாடு நடத்தப்படாது. உனக்கு பொய் சாட்சி கூறிய தாழம்பூவை என் பூஜைகளில் நான் ஏற்க மாட்டேன் என்று சாபம் கொடுத்தார்.
 
கார்த்திகை தீபத் திருநாள்
 
சிவபெருமானின் அடி முடி காண முடியாத ”அக்னி ஜோதியாக நின்ற தினம் கார்த்திகை தீபத் திருநாள்” ஆகும். இதனை நினைவு கூறும் வகையில்தான் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
 
திருவண்ணாமலையில் கிரிவலம் வருகின்ற பாதையில் எண்ணற்ற சித்தர்களின் ஜீவசமாதிகள் அமைந்துள்ளன. இரமண மகரிஷி ஆசிரமம், சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம், விசிறி சாமியார் ஆசிரமம் போன்றவை உள்ளன.
அடுத்த கட்டுரையில்