சனி பகவானை எவ்வாறு வழிபடுவது?

Webdunia
சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார்.


 


மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி சூரியனின் மகனாவார். பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் கிரகம் சனியாவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது. சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். உச்ச வீடு துலாம். நீச வீடு மேஷம். பகை வீடு சிம்மம்.
 
சனிக்கு நட்பு கிரகங்கள் புதன், சுக்கிரன், ராகு, கேது, சமகிரகம் குரு. பகை கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய்.  பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு சனி அதிபதியாவார். சனி திசை 19 வருடங்களாகும். சனி ஆண்கிரகமும் இல்லாமல் பெண் கிரகமாகாவும் இல்லாமல் அலியாக இருக்கிறார்.
 
சனியின் வாகனம் காக்கை, எருமை. பாஷை அன்னிய பாஷைகள், உலோகம் இரும்பு, வஸ்திரம் கறுப்பு பூ போட்டது, நிறம் கருமை, திசை மேற்கு, தேவதை யமன், சாஸ்தா, சமித்து வன்னி, தானியம் எள்ளு, புஷ்பம் கருங்குவளை, சுவை கசப்பு ஆகும்.
 
சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர். சனி தோஷம் நீங்க சனிக் கிழமைகள்தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு, எள்ளன்னம் நைவேத்யம் படைத்து, மனமுருக, சனி கவசம், சனிஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்திடலாம். முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தரலாம். சனி பகவானை நேருக்குநேர் வணங்காமல் பக்கவாட்டில் நின்றவாறு வணங்க வேண்டும்.
 
இவ் வழிபாட்டை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி செய்வது மிகச் சிறந்த பலன்களை தரும். திருநள்ளாற்று தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபடுவது சனி தோஷம் தீர்க்கும். 
 
காக்கைக்கு தினந்தோறும் அன்னம் இடுவதும், உளுந்து தானியத்தை தானம் செய்வதும், கோவில்களில் நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து வணங்குவதும், நீலக் கல் அணிந்த மோதிரத்தை அணிந்து கொள்வதும், சனிக் கிழமை அதிகாலை வேளைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷம் குறைக்கும்.
 
சனி தோஷத்தினால் துன்பங்கள் அதிகமாகும் நேரங்களில், கருப்பு தோல் அகற்றாத முழு உளுந்து தானியத்தை 108 என்ற எண்ணிக்கையில், இரவு தலையணை அடியில் வைத்து உறங்கி, பின்னர் காலையில் எழுந்து நீராடி, சனி பகவானை 108 முறை வலம் வந்து, ஒவ்வொரு வலம் முடிந்தவுடனும் ஒரு உளுந்தை தரையில் இட வேண்டும். உளுந்து தானியம் தானம் சனி பகானின் நல்லாசி கிடைத்திட அருளும்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்