மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெறும் நிலையில் மதுரை முழுவதுமே பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 8ம் தேதி மீனாட்சி - சுந்தரர் திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில், இன்று அழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது.
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக அழகரின் ஊர்வலத்தைக் காண மதுரை மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் குவிவது வாடிக்கை. அவ்வாறாக இன்றும் மதுரை வீதிகள் பக்தர்கள் அலையில் மூழ்கியுள்ளது.
நேற்று மாலை 5.15 மணியளவில் அழகர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார். மாலை 6.15 மணியளவில் தங்கப்பல்லக்கில் மதுரையை நோக்கி புறப்பட்டார் அழகர். செல்லும் வழியில் பல மண்டபங்களில் தங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இன்று காலை மதுரை மூன்று மாவடியில் எழுந்தருளிய கள்ளழகரை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி மதுரை செல்லும் அழகருக்கு இரவு 11.30 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. அதன் பின்னர் நாளை காலை அழகர் ஆற்றில் இறங்க உள்ளார்.
நாளை அதிகாலை 5.45 மணிக்கு மேல் 6.05 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் சென்று இறங்குகிறார் அழகர். இந்த நிகழ்வையொட்டி மதுரை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K