சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

Webdunia
சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர். சனி தோஷம் நீங்க சனிக் கிழமைகள்தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு, அல்லது எள் விளக்கு, எள்ளன்னம் நைவேத்யம் படைத்து, மனமுருக, சனி கவசம், சனிஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்திடலாம்.


 


முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தரலாம். 
 
இவ் வழிபாட்டை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி செய்வது மிகச் சிறந்த பலன்களை தரும். திருநள்ளாற்று தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபடுவது சனி தோஷம் தீர்க்கும். 
 
கறந்த பசும் பாலினைக் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்வதும், சனிக் கிழமைகளில் சிவனை வில்வம் கொண்டு அர்ச்சித்து, விளக்கேற்றி வழிபடுவதும் சிறப்பு. பிரதோஷ வழிபாடு மிக நன்று. சிவ புராணம், பஞ்சாட்சரம், சுதர்சன மூல மந்திரம், சுதர்சன அஷ்டகம் போன்றவற்றை பாராயணம் செய்வதும், சிறந்த பலன்களை கொடுக்கும். 
 
விநாயக பெருமானை வழிபடுவதும், ஆஞ்சனேயரை சனிக் கிழமைகளில் துளசி மாலை அல்லது வடை மாலை அணிவித்து, அர்ச்சித்து 27 முறை வலம் வருவதும் அஷ்டமச் சனி தோஷ நிவர்த்தி தரும். 
 
காக்கைக்கு தினந்தோறும் அன்னம் இடுவதும், உளுந்து தானியத்தை தானம் செய்வதும், கோவில்களில் நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து வணங்குவதும், நீலக் கல் அணிந்த மோதிரத்தை அணிந்து கொள்வதும், சனிக் கிழமை அதிகாலை வேளைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷம் குறைக்கும்.
 
சனி தோஷத்தினால் துன்பங்கள் அதிகமாகும் நேரங்களில், கருப்பு தோல் அகற்றாத முழு உளுந்து தானியத்தை 108 என்ற எண்ணிகையில், இரவு தலையணை அடியில் வைத்து உறங்கி, பின்னர் காலையில் எழுந்து நீராடி, சனி பகவானை 108 முறை வலம் வந்து, ஒவ்வொரு வலம் முடிந்தவுடனும் ஒரு உளுந்தை தரையில் இட வேண்டும். உளுந்து தானியம் தானம் சனி பகானின் நல்லாசி கிடைத்திட அருளும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்