ஆட்டம் போடுகிறார்கள் ; விரைவில் அடங்குவார்கள் - தினகரன் அதிரடி

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (11:58 IST)
தனக்கு எதிராக ஆட்டம் போடுகிறார்கள் விரைவில் அடங்குவார்கள் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
அதிமுக கட்சி மற்றும் ஆட்சி விவகாரங்களில் தினகரனை ஒதுக்கி விட்டு செயல்பட்டு வந்த முதல்வர் எடப்பாடி அணி, சமீபத்தில் அவரை அதிகாரப்பூர்வமாக கட்சியிலிருந்து நீக்கியது. அவரை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தது சட்டவிரோதம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இந்த விவகாரத்திலிருந்து, தினகரன் மற்றும் எடப்பாடி அணியினரிடையே நேரிடையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தினகரன் தலைமையில் மதுரை மேலூரில் இன்று மாலை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்காக இன்று காலையே தினகரன் மதுரைக்கு வந்துவிட்டார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
 
இந்த கூட்டம் மாபெரும் பொதுக்கூட்டமாக அமையும். அனைத்து கேள்விகளுக்கும் இன்று பதில் கிடைக்கும். என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. இன்றைய கூட்டத்தில் பழனிசாமி யார் என்பதை மக்களுக்கு தெரிவிப்பேன்..
 
சூழ்நிலை காரணமாக, விபத்தின் காரணமாக எங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி. பதவி இருப்பதால் ஆட்டம் போடுகிறார்கள். விரைவில் அவர்கள் திரும்புவார்கள் என நம்புகிறேன். இல்லையேல் திருத்தப்படுவார்கள்” என அதிரடியாக பேசினார்.
அடுத்த கட்டுரையில்