அவமதிக்கும் சசிகலா ; பலம் பெறும் ஓ.பி.எஸ் - அரசியல் பரபரப்பு

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (14:06 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதால், முதல்வருக்கு அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு பெருகி வருவதாக செய்திகள் வெளியானது.


 

 
சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற சில நாட்களிலேயே, அவரே முதல்வர் பதவியையும் அலங்கரிக்க வேண்டும் என தம்பிதுரை உள்ளிட்ட சில அதிமுக எம்.பி.க்கள் குரல் உயர்த்தினர். அதனால், தன்னுடைய ராஜினாமா கடித்தை ஓ.பி.எஸ். சசிகலா தரப்பினரிடம் கொடுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், வர்தா புயல் மற்றும் ஜல்லிக்கட்டு மற்றும் ஆந்திர முதல்வரிடம் பேசி தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி பெற்றுத் தந்தது உள்ளிட்ட விவகாரங்களில் கார்டன் தரப்பை ஆலோசிக்காமல் ஓ.பி.எஸ் செயல்பட்டதால், அவர் மீது சசிகலா குடும்பத்தினர் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும், கார்டன் தரப்பில் இருந்து அனைத்து கோரிக்கைகளையும் ஓ.பி.எஸ் நிறைவேற்றி தருவதில்லை எனவும், இதனால் பல நெருக்கடிகளை தாண்டி முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. 
 
சமீபத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கூட, சசிகலா குடும்பத்தினருக்கு வி.வி.ஐ.பி பாஸ் கொடுக்க ஓ.பி.எஸ் மறுத்தார் என செய்திகள் வெளியானது.  இப்படி போயஸ் கார்டன் வசம் பாராமுகம் காட்டுவதால்தான், சமீபத்தில் நடந்த அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில், மேடையில் இருக்கை ஒதுக்காமல், முதல்வர் ஓ.பி.எஸ் கூட்டத்தோடு கூட்டமாக அமரவைக்கப்பட்டு சசிகலாவால் பழிவாங்கப்பட்டார் எனக்கூறப்படுகிறது. 
 
ஜெயலலிதா இருக்கும் போது, அதிமுக சார்பாக நடைபெறும் கூட்டங்களில் அவருக்கு அருகில் பன்னீர்செல்வத்துக்கு இருக்கை ஒதுக்கப்படும். ஆனால் அவரது மறைவிற்கு பின்னர் முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டத்தோடு கூட்டமாக அமர வைத்திருந்தது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், தனக்கு தனி இருக்கை போட்ட சசிகலா, கூட்டத்துடன் முதல்வரை அமர செய்தது பன்னீர்செல்வத்துக்கு அவமானம் இல்லை, தமிழக மக்களை அவமதிப்பதாகும். இது கண்டனத்துக்குரியது என கூறியுள்ளார்.
 
மேலும், முதல்வர் பன்னீர் செல்வத்தை சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் இப்படி அவமதிக்கும் விதமாக நடந்து கொள்வது, அதிமுக எம்.ல்.ஏக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். அதேபோல், கார்டன் தரப்பில் இருந்து அவருக்கு கொடுக்கப்படும் நெருக்கடிகளையும் அவர்கள் கவனித்தே வருகிறார்கள். எனவே, பெரும்பான்மையான அதிமுக எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ் பக்கமே அணி வகுத்து நிற்பதாக தெரிகிறது. சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினரின் செயல் மூலம் ஓ.பி.எஸ் பலம் பெற்று வருகிறார் எனக்கூறப்படுகிறது.
 
அடுத்த கட்டுரையில்