ஜெ.வுக்கு மோடி வாழ்த்து சொன்னது அயோக்கியத்தனம் - கொந்தளிக்கும் இளங்கோவன்

Webdunia
சனி, 4 ஜூன் 2016 (16:30 IST)
ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லியிருப்பது மிகப் பெரிய தவறு. கடுமையாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு அயோக்கியத்தனம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், ”மோடி செய்தது மிகப் பெரிய தவறு. ஒரு நாட்டின் பிரதமராக இருக்கிறவர் ஒரு மாநிலத்தில் நடைபெறுகிற தேர்தலில் தனக்கு வேண்டியவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஓட்டு எண்ணிக்கை 9 மணிக்கு ஆரம்பித்தது என்றால் 10 மணிக்கே ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லியிருப்பது மிகப் பெரிய தவறு.
 
கடுமையாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு அயோக்கியத்தனம். உண்மையான ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையுள்ளவதாக மோடி இருந்தால் அவர் தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.
 
மேலும், ’11.15 மணிக்குத்தான் டிவிட்டரில் மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஆனால் கலைஞர் 10 மணிக்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறியிருக்கிறாரே. அதிகாரப்பூர்வ முன்னிலை விவரம் தெரிந்த பின்னர்தான் தெரிவித்துள்ளார்’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
இதற்கு பதிலளித்த இளங்கோவன், ”10 மணிக்கும் 11 மணிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் கிடையாது. அதிகாரப்பூர்வ முடிவு என்பது மாலை 6 மணிக்கு மேல்தான் தெரிய வந்துள்ளது. காலை 11 மணி வரை 3 சுற்றுக்கள்தான் முடிவடைந்துள்ளது. அந்த 3 சுற்றுகளிலும் பல இடங்களிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி 11 மணிக்கு 18 இடங்களில் முன்னிலையில் இருந்தது.
 
ஆனால் மோடி தொலைபேசியில் பேசிய பிறகு, தேர்தல் அலுவலர்களும், வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள அலுவலர்களும் மோடிக்கு பயந்து கொண்டு திமுக, காங்கிரஸை சேர்ந்த வெற்றி பெற்ற வேட்பாளர்களை தோல்வியடைந்ததாக அறிவித்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்