சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்ற அவசியம் ஆளுநருக்கு இல்லை: முன்னாள் ஆளுநர் அதிரடி

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (23:57 IST)
பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வைத்து இருக்கும் சசிகலாவைக்கூட ஆட்சி அமைக்க அழைக்காமல் இருக்கலாம். இது ஆளுநரின் அதிகாரம் என்று முன்னாள் ஆளுநர் ரோசய்யா கூறியுள்ளார்.


 

சசிகலாவிற்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சராமாரியான குற்றச்சாட்டுகளைக் கூறியதை அடுத்த தமிழக அரசியல் நிலவரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலர் சசிகலா தலைமையில் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது.

அரசியல் வட்டாரங்கள் கொந்தளிப்பில் உள்ள நிலையில், பன்னீர்செல்வம் தரப்பும், சசிகலா தரப்பும் தாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் முறையிட்டனர்.

இதனையடுத்து தமிழக சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கும் ஜனாதிபதிக்கும் ஆளுநர் வித்யாசகர் ராவ் அறிக்கை அனுப்பியிருந்த நிலையில், மேலும் ஒரு அறிக்கையை மத்திய அரசு அறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து கூறியுள்ள முன்னாள் ஆளுநர் ரோசய்யா, ”தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் யாருக்கு வாய்ப்பு அளிப்பார் என்பது மத்திய அரசின் ஆலோசனைகளைப் பொறுத்தே அமையும்.

இதுபோன்ற அசாதாரண சூழலில் மத்திய அரசிடம் இருந்து ஆலோசனைகள் பெற்றே செயல்படுவார். அதேசமயம், ஆளூநர் எந்த முடிவையும் எடுக்கலாம். பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வைத்து இருக்கும் சசிகலாவைக்கூட ஆட்சி அமைக்க அழைக்காமல் இருக்கலாம். இது ஆளுநரின் அதிகாரம்.

ஏனென்றால், இப்போது சூழல் இயல்பான நிலையில் இல்லை. அசாதாரன நிலையில் இருக்கிறது. ஆதலால், ஆளுநர் எந்த விதமான முடிவு எடுக்கப்போகிறார் என்பது தெரியாது. ஆனால், மத்திய அரசு அளிக்கும் ஆலோசனையின் அடிப்படையில்தான் ஆளுநர் வித்யாசாகர் ராவ் முடிவு எடுப்பார்.

அதேசமயம், ஆளுநர் நினைத்தால், முதல்வர் பன்னீர் செல்வத்தை தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்கக் கோரி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பும் விடுக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்