கட்சிக்காக சிறைக்கு சென்றுள்ளது குடும்பம்.. சும்மா விட மாட்டேன் - தம்பிதுரையிடம் எகிறிய தினகரன்?

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (13:43 IST)
தன்னை கட்சியிலிருந்து விலக்கி வைப்பதாக அறிவித்த அதிமுக அமைச்சர்கள் மீது, தினகரன் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.


 

 
அதிமுக ஆட்சி மற்றும் கட்சியை காப்பாற்ற, இரட்டை இலை சின்னத்தை மீட்க என பல காரணங்களை கூறி தினகரன் மற்றும் அவரது குடும்பத்தை அதிமுகவில் இருந்து முற்றிலுமாக நீக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அனைத்து அமைச்சர்களும் சமீபத்தில்  அதிரடி முடிவெடுத்தனர். மேலும், ஓ.பி.எஸ் அணியோடு பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளதாகவும் அவர்கள் அறிவித்தனர். இது தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமைச்சர்கள் தனியாக கூட்டம் நடத்துகிறார்கள் என தெரிந்ததும், எடப்பாடி, ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்டோரை தொலைபேசி மூலம் அவர்களை தொடர்பு கொள்ள தினகரன் முயன்றுள்ளார். ஆனால், அவர்கள் ஒருவரும் போனை எடுக்கவில்லை. அதன் பின் செய்தியாளர் சந்திப்பில், கட்சியின் நலம் கருது தினகரனை விலக்கி வைப்பதாக பேட்டியளித்தனர். இதைக் கண்டு கொதிப்படைந்த தினகரன் துணை சபாநாயகர் தம்பிதுரையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.


 

 
நான் இல்லாமல் உங்களால் ஆட்சியை வழிநடத்த முடியாது. என்னை ஒதுக்க நினைத்தால், ஓ.பி.எஸ் செய்ததை விட கட்சிக்கு எதிராக நான் வேலை செய்வேன். கட்சிக்காக எனது குடும்பம் சிறை வரை சென்றுள்ளது.  இப்போது, அதிகாரத்தை சுவைப்பதற்காக இணைப்பு நாடகம் நடத்துகிறீர்களா?” என எகிறினாராம் தினகரன்.
 
அவருக்கு பதில் கூறிய தம்பிதுரை “ தற்போதைய நிலைமை முன்பு போல் இல்லை. கட்சியை வழி நடத்துவே உங்கள் சித்தியை  (சசிகலா) தேர்வு செய்தோம். ஜெ.விற்கு இருந்ததை போல் அவருக்கும் மக்கள் செல்வாக்கை உருவாக்க முயன்றோம். ஆனால், அது முடியவில்லை. அவர் சிறைக்கும் சென்றுவிட்டார். ஓ.பி.எஸ் வெளியே இருக்கும் வரை பிரச்சனை இன்னும் பெரிதாகும். அது உங்கள் குடும்பத்திற்கும் மேலும் சங்கடத்தை ஏற்படுத்தும். எனவே, உங்கள் குடும்பம் விலகி இருப்பதுதான் நல்லது” எனக் கூறினாராம். 
 
அதன் பின்னரே, செய்தியாளர்களிடம் ‘கட்சியின் நலனுக்காக, தினகரன் விலகி இருக்க வேண்டும்’ என தம்பிதுரை பேட்டியளித்ததாக தெரிகிறது. அதன் பின்னரே, நான் நேற்றே கட்சியிலிருந்து விலகி விட்டேன் என அதிரடி முடிவை அறிவித்தார் தினகரன் என பிரபல வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்