கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மோகோல் போட்டு வைகை அணையை மூடும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆனால் எதிர்பாராத விதமாக இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.
இரண்டு மூன்று தெர்மோகோல்களை செல்லோடேப் மூலம் ஒட்டி அவற்றை வைகை அணையில் போடுவதன் மூலம் வெப்பத்தினால் நீர் ஆவியாவதை தடுக்க முயன்றார் அமைச்சர் செல்லூர் ராஜூ. ஆனால் அமைச்சர் செல்லூர் ராஜூ அங்கிருந்து கிளம்பும் முன்னரே அனைத்து தெர்மோகோல்களும் காற்றில் அடித்து கரைக்கு ஒதுங்கியது. இதனால் ஆரம்பித்த வேகத்திலேயே திட்டம் தோல்வியடைந்தது.
இதனையடுத்து அமைச்சரும், அவரின் இந்த தெர்மோகோல் திட்டமும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மீம்ஸ்கள் போட்டு கலாய்த்தனர். இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
தெர்மோகோல் திட்டத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கிறார்களே என கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர், தெர்மோகோல் திட்டத்துக்கு சமூக வலைதளங்களில் விமர்சனம் வருவது போல, எனக்கு பலரும் இந்த திட்டத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது போன்ற திட்டத்திற்கு இந்த தெர்மோகோல் திட்டம் முன்னோடியாக இருக்கிறது என என்னை பாராட்டுகின்றனர் என்றார். மேலும் ஜெயலலிதா கொண்டு வந்த மழை நீர் சேகரிப்பு திட்டத்தை முதலில் விமர்சித்தார்கள். பின்னர் அது வெற்றி பெற்றத்தை குறிப்பிட்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ.