தமிழக அரசியலில் யார் யாரோ கட்சி ஆரம்பித்தபோதெல்லாம் வராத எதிர்ப்பு ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்ற செய்தி வெளிவந்தவுடன் திடீரென பலருக்கு தமிழ், தமிழர்கள் மேல் பற்று வர தொடங்கிவிட்டது. ரஜினி வந்தால் நமது கூடாரம் காலியாகிவிடும் என்ற அதிர்ச்சியில் அவரை முளையிலேயே கிள்ளிவிட முயற்சிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து கூறியுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:
சிஸ்டம் பத்தி ரஜினிக்கு என்ன தெரியும்? சினிமாவில் யாரோ எழுதிக்கொடுப்பார்கள். அதைப் பேசிவிட்டுப் போய்விடலாம். அரசியல் என்பது வேறு. இறங்கிப் போராடி, ஊர் ஊராக அலைந்து மக்களிடம் பேசினால்தான், தமிழ்நாட்டுப் பிரச்னைகள் பற்றி ரஜினிக்குப் புரியும்.
“ரஜினிகாந்த், என் இனிய நண்பர்; நல்ல நடிகர். அவர் நடிப்பை நாங்கள் ரசிப்போம்; பாராட்டுவோம். ஆனால், அரசியல் வேறு; நடிப்பு வேறு. இனி, தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு இடமும் கிடையாது; வாய்ப்பும் கிடையாது. தமிழக அரசின் கடன், மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் உயர்ந்துவிட்டது. இந்தக் கடனை எல்லாம் அடைக்க, ரஜினி என்ன திட்டம் வைத்திருக்கிறார்?”
“இங்கே யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், சினிமாக்காரர்கள் 50 ஆண்டுகள் ஆட்சிசெய்து தமிழ்நாட்டை நாசப்படுத்திவிட்டார்கள். இனியும் நாசப்படுத்தவேண்டுமா? ‘அரசியலுக்கு வருவேன்’ என்று இன்றுவரை அவர் உறுதியாகச் சொல்லவில்லை. `வரலாம்’, `போருக்குத் தயாராவோம்’ என்றுதான் சொல்கிறார். போர் என்றால் என்ன? இப்போது இலங்கையில் போர் நடந்துகொண்டிருக்கிறதா? அங்கே போய்ச் சண்டை போடப்போகிறாரா என்ன? ரஜினிக்கு அரசியலில் வேலை இல்லை.”