தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எமி ஜாக்சன்? - களைகட்டும் ஆர்.கே.நகர்

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (10:02 IST)
தங்களுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்க நடிகை எமி ஜாக்சனை தினகரன் தரப்பு ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னம் மூலம் சுலபமாக வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தார் தினகரன். ஆனால், ஓ.பி.எஸ் அணியின் முயற்சியால் அந்த சின்னம் இருவருக்கும் கிடைக்காமல் போய்விட்டது. எனவே, தற்போது தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
 
ஜெ.வின் மரணம் தொடர்பாக, சசிகலா குடும்பத்தினர் மீது ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு அதிருப்தியும், கோபமும் இருக்கிறது. எனவே, அவர்களை சரிகட்டி வாக்குகளை சேகரிக்கும் முயற்சியில் தினகரன் தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது. 
 
இந்நிலையில், மதராஸ பட்டினம், ஐ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை எமி.ஜாக்சனை, தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைக்கும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என செய்திகள் வெளிவந்துள்ளது.
 
சிங்கப்பூரில் உள்ள தினகரனின் நண்பர் மூலம், எமி ஜாக்சனை பிரச்சாரத்திற்கு தினகரன் தரப்பு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மதராஸ் பட்டிணம் படத்தில் பல காட்சிகளில் தொப்பி அணிந்து நடித்திருப்பார் எமி. அதேபோல், தினகரனின் சின்னமான தொப்பியை அணிந்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
எமி ஜாக்சனின் வருகையால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்