தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றிய தகவல்களை ஆளுநர் மூலம் அறிந்து, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் ஒருவர் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு அவ்வப்போது மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவருக்கு இன்னும் ஓய்வு தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளது. ஆனால், அவை உண்மையல்ல என்றும், தவறான செய்திகள் பரப்புவோர் மீது கடுமையான தண்டனை அளிக்கப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்திருந்த திமுக தலைவர் கருணாநிதி “ முதல்வரின் உடல் நிலை குறித்து சரியான தகவலை வெளியிட வேண்டும். இதில் ஆளுநர் உடனடியாக தலையிட வேண்டும். மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரேஹன் எஸ்.பெல் என்பவர் ஜனாதிபதிக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். அதில் ஜெயலலிதாவின் உடல் நிலையை, தமிழக ஆளுநர் மூலம் கேட்டறிந்து அறிக்கை பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அல்லது தனியார் மருத்துவர்கள் மூலம், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து, அவரின் உடல் நிலை குறித்த விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், முதல்வர் ஜெயலலிதா நல்ல ஆரோக்கியத்துடன், பணியாற்றும் செயல் திறனோடு இருக்கிறாரா என்பதை தமிழக ஆளுநர் மூலம், குடியரசுத் தலைவர் கண்டறிய வேண்டும்.
ஒருவேளை அவர் செயல்படும் திறனில் இல்லையெனில், உடனடியாக சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி தமிழக அரசு கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.