கோடி.. அமைச்சர் பதவி..பேரம் பேசும் அதிமுக எம்.எல்.ஏக்கள்...

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (12:52 IST)
சசிகலா தரப்பிற்கு ஆதரவு கொடுப்பதற்கு பல எம்.எல்.ஏக்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆட்சியை நடத்தப்போவது சசிகலாவா? அல்லது ஓ.பன்னீர் செல்வமா? என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. 
 
அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரின் ஆதரவும் தங்களுக்கு இருப்பதாக சசிகலா தரப்பு கூறி வந்தது. ஆனால், அதிலிருந்து 5 பேர் ஏற்கனவே ஓ.பி.எஸ் பக்கம் வந்துவிட்டனர். மேலும், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனும் ஓ.பி.எஸ் பக்கம் வந்து விட்டார். இன்னும் பல முக்கிய நிர்வாகிகள் அவர் பக்கம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சட்டமன்றத்தில் தன்னுடைய பலத்தை நிரூப்பேன் எனவும் ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.  

அதற்காக அவர் ஆளுநர் வித்யாசகாரிடம் 5 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில், ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக, அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று குழுவாக பிரிக்கப்பட்டு, பேருந்தில் ஏற்றப்பட்டு, சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் சுதந்திரமாக இருப்பதாக அதிமுக நிர்வாகிகள் ஊடகங்களில் கூறி வருகின்றனர். மேலும், அவர்கள் எம்.எல்.ஏ விடுதிகளில் இருப்பதாக தமிழக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். 


 

 
இந்நிலையில், சிறை வைக்கப்பட்டுள்ள சிலர் உணவு உண்ணாமல், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்தி வெளியானது. அதேபோல், எம்.எல்.ஏக்களுக்கு தலைக்கு ரூ.10 கோடி என சசிகலா தரப்பு பேரம் பேசியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
முக்கியமாக அதில் பலர், தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என கேட்டார்களாம். அதிலும் சிலர், தங்களுக்கு குறிப்பிட்ட இலாகாவே வேண்டும் என அடம் பிடித்தார்களாம். அவர்களை தங்கள் வசம் வைத்துக்கொள்ள, அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என சசிகலா தரப்பில் இருந்து பதில் கூறப்பட்டுள்ளதாம். 
 
இதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் பலர் மகிழ்ச்சியில் இருப்பதாகவும், அதேசமயம் இது ஏற்கனவே அமைச்சர் பதவிகளில் இருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும், குதிரை பேரத்தை தாண்டி, சில எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ் பக்கம் வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
பொதுவாக, அரசியலில், ஒரு கட்சி ஆட்சி அமைப்பதற்காக, கோடிக்கணக்கான பணம் மற்றும் பதவி உள்ளிட்ட வாக்குறுதிகளை வாரி இரைப்பது என்பது, காலம் காலமாக இந்திய அரசியலில் நடக்கும் நிகழ்வுதான். ஆனால், மக்கள் ஆவேசம் அடைந்திருக்கும் இந்த வேளையிலும், மன்னார்குடி தரப்பு எந்த பதற்றமும் இல்லாமல், இப்படி ஆட்டம் போடுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்